மண்டேலா - யோகிபாபு படத்தின் சினிமா விமர்சனம்

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
மண்டேலா movie yogi babu

நடிகர்கள்: யோகிபாபு, ஷீலா ராஜ்குமார், சங்கிலி மருகன், ஜி.எம். சுந்தர்; இசை: பரத் சங்கர்; இயக்கம்: மடோன்னே அஸ்வின்.

தமிழில் அரசியல் தொடர்பான திரைப்படங்கள், அரசியலைச் சொல்லும் திரைப்படங்கள் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், தேர்தல் அரசியலை மையமாக வைத்து வெளியாகியிருக்கிறது 'மண்டேலா'.

சூரங்குடி என்ற கிராமத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில், பதவியைப் பிடிப்பதற்காக இரண்டு ஜாதியினர் மோதிக்கொள்கிறார்கள். வாக்குகள் இரு தரப்புக்கும் இடையில் சரிசமமாகப் பிரியும் நிலையில், வெற்றிபெறுவதற்கு ஒரு ஓட்டு தேவைப்படுகிறது.

ஆகவே, அந்த ஊரில் உள்ள முடிதிருத்துபவரான மண்டேலாவின் (யோகிபாபு) வாக்கு மிக முக்கியமானதாக உருவெடுக்கிறது. அவரது வாக்கைப் பெற, இரு தரப்பும் இலவசங்களை அள்ளிக்கொடுக்கிறார்கள். மண்டேலா யாருக்கு வாக்களித்தார் என்பது மீதிக் கதை.

படத்தின் இயக்குநர் மடான்னே அஸ்வின் ஏற்கனவே தனது குறும்படங்கள் மூலம் பெரும் கவனத்தைப் பெற்றவர். அவரது முதல் முழு நீளப் படம் இது. தனது குறும்பட அனுபவத்தை இந்தப் படத்தில் மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார் அஸ்வின்.

கதை, திரைக்கதை, காட்சியமைப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை என ஒரு திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களும் இந்தப் படத்தில் சிறப்பாக அமைந்திருக்கின்றன. படத்தின் வரும் எல்லா காட்சிகளுமே சரியான இடத்தில் ஆரம்பித்து, சரியாக முடிகின்றன. ஒரு காட்சிகூட தேவையில்லாத நீளத்தில் இல்லை.

படத்தின் முதல் காட்சியில் ஆரம்பிக்கும் சுவாரஸ்யம், இறுதிவரை டெம்போ குறையாமல் இருப்பது படத்தின் இன்னுமொரு பலம். பல காட்சிகளை, கண்ணீர் சிந்தவைக்கும் உருக்கமான காட்சிகளாக மாற்றக்கூடிய சாத்தியம் இருந்தும்கூட, அந்த நிலைக்கு படத்தை எடுத்துச்செல்லாமல் தான் சொல்லவந்த களத்திற்குள், மெல்லிய நகைச்சுவையுடன் படத்தை எடுத்துச் சென்று, முடித்திருக்கிறார் மடான்னே அஸ்வின்.

படத்தின் நாயகன் யோகிபாபு. இதற்கு முன்பாக பல படங்களில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அந்தப் படங்களில் அவரது முழுத் திறன் வெளிப்பட்டதில்லை. அவரது நகைச்சுவை கதாபாத்திரங்களின் நீட்சியாகவே இந்தப் பாத்திரங்கள் அமைந்திருந்தன. ஆனால், இந்தப் படத்தில் நகைச்சுவையை முதன்மையாகக் கொள்ளாமல், இயல்பான ஒரு மனிதராக நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது. கிடைத்த வாய்ப்பில் பின்னியெடுத்திருக்கிறார் யோகிபாபு.

இவருக்கு அடுத்தபடியாக, அஞ்சல்துறை பணியாளராக வரும் ஷீலா, ஊர்ப் பெரியவராக வரும் சங்கிலி முருகன், அவரது மகன்களாக நடித்திருப்பவர்கள், மண்டேலாவின் உதவியாளராக வரும் சிறுவன் ஆகியோர் தங்கள் பாத்திரத்தை உணர்ந்து, சின்ன பிழைகூட இல்லாமல் நடித்திருக்கிறார்கள். ஷீலா இதற்கு முன்பாக பல படங்களில் நடித்திருந்தாலும், இந்தப் படம் அவரை சிறந்த கோணத்தில், சிறந்த நடிகையாகக் காட்டுகிறது.

முக்கியப் பாத்திரங்கள் மட்டுமல்லாமல் சின்னச்சின்ன ரோல்களில் நடித்திருப்பவர்கள்கூட சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இதுபோன்ற படங்களில், திரைக்கதை நன்றாக இருந்தாலும்கூட, நடிப்பவர்கள் தங்களது சொதப்பலான நடிப்பால் படத்தை கைவிட்டுவிடுவார்கள். ஆனால், இந்தப் படத்தில் அந்தப் பிரச்சனையே இல்லை.

ஆனால், படம் என்ன சொல்லவருகிறது என்பதில் சிலருக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். அடிப்படையில் இந்தப் படம், வாக்காளர்கள் இலவசங்களுக்காக மனம் மயங்கிவிடாமல், உண்மையான பிரச்னைகளை மனதில் வைத்து வாக்களிக்க வேண்டும் என்கிறது. சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருப்பவர்களுக்கு உணவே பிரச்னையாக இருக்கும் இடத்தில், அந்த உணவை இலவசமாகக் கொடுப்பதையும் பெறுவதையும் தவறு என்பதைப்போலக் காட்டுகிறது படம்.

தவிர, படத்தில் வரும் ஊர் பெரியவர் பெரியார் மீது பற்றுகொண்டவர். இரண்டு மனைவிகளுடன் வாழ்கிறார். அவரது இரண்டு மகன்கள், அவரது வாரிசு யார் என்பதற்காக அடித்துக்கொள்கிறார்கள். இதுவும் ஒரு குறியீடா எனத் தெரியவில்லை.

படம் தற்காலத்தில் நடக்கிறது. ஆனால், படத்தில் காட்டப்படும் கிராமம் 50 ஆண்டுகளுக்கு முற்பட்ட கிராமத்தைப்போல காட்டப்படுகிறது. இடிந்து விழுந்துகிடக்கும் பள்ளிக்கூடங்கள், அம்பாசிடர் கார்கள் என தற்காலத்தில் இல்லாத பல விஷயங்களைப் படம் காட்டுகிறது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் போலியோ முழுமையாக ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் அந்நோயால் பாதிக்கப்பட்டதாக ஒரு குழந்தை படத்தில் வருகிறது. கதையில் எந்த அம்சத்தையும் கூடுதலாகச் சேர்க்காத இந்த அம்சங்கள் படத்தில் எதற்காக வருகின்றன எனத் தெரியவில்லை.

ஆனால், மேலே சொன்ன விஷயங்களைவிட்டுவிட்டு வெறும் சினிமா என்ற வகையில் பார்த்தால் ரசிக்கக்கூடிய சினிமாதான் இது. திரையரங்கில் வெளியாகியிருந்தால் மிகச் சிறப்பான வரவேற்பைப் பெற்றிருக்கக்கூடிய படம். ஆனால், தற்போது நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: