எமது தனியுரிமை மற்றும் குக்கி கொள்கைகளை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம்.
தனியுரிமை மற்றும் குக்கி கொள்கைகளில் சில முக்கிய மாற்றங்களை செய்துள்ளோம். இதனால் உங்களுக்கும், உங்கள் தரவுகளுக்கும் என்ன தாக்கம் ஏற்படும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
இயக்குநர் தாமிரா கொரோனா பாதிப்பால் மரணம் - ஆண் தேவதை படத்தை இயக்கியவர்
பட மூலாதாரம், DIRECTOR THAMIRA
ரெட்டைச் சுழி, ஆண் தேவதை போன்ற படங்களை இயக்கிய தாமிரா காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், சென்னையில் இன்று காலமானார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தாமிரா, சுமார் 20 நாட்களுக்கு முன்பாக சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலையில் அவர் காலமானார். அவருக்கு வயது 53.
இயக்குநர் கே. பாலச்சந்தரிடம் பணியாற்றிய தாமிரா, ரெட்டைச் சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படம் 2010ல் வெளியானது. இதற்குப் பிறகு சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் ஆகியோரை வைத்து ஆண் தேவதை என்ற படத்தை இயக்கினார். அடுத்ததாக தனது மூன்றாவது படத்தை இயக்குவதற்கான கதை விவாதம் உள்ளிட்ட பணிகளில் தற்போது தாமிரா ஈடுபட்டிருந்தார்.
கே. பாலச்சந்தரிடம் எட்டு ஆண்டுகள் பணியாற்றிய தாமிரா, அவர் கடைசியாக இயக்கிய பொய் படத்திற்கு வசனமும் எழுதியிருந்தார். சஹானா, அண்ணி, மனைவி உள்ளிட்ட தொடர்களுக்கு திரைக்கதையும் வசனமும் எழுதியிருக்கிறார் தாமிரா. கன்னடத்தில் வெளியான அமிர்ததாரே, மாத்தாடு மாத்தாடு மல்லிகே படங்களுக்கும் திரைக்கதை எழுதினார்.
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் பிறந்த தாமிராவின் இயற்பெயர் ஷேக் தாவூத். விலங்கியலில் இளநிலை அறிவியல் பட்டம் பெற்ற இவர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.
இதற்குப் பிறகு சென்னை வந்த அவர், பொம்மை என்ற சினிமா இதழிலும் வேறு பல சினிமா இதழ்களிலும் கட்டுரைகளை எழுதிவந்தார். சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் இருந்தவர், தாமிரபரணி ஆற்றின் பெயரிலிருந்து தாமிரா என்பதை தனது புனைப் பெயராக்கிக்கொண்டார்.
இவரது சிறுகதைகள், பர்வதமலையில் ராஜகுமாரி, தொடர்பு எல்லைக்கு அப்பால் கடவுள் ஆகிய தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.
இயக்குநர் தாமிராவுக்கு பஷிரியா என்ற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர். ஏப்ரல் 11ஆண் தேதி இவர் கடைசியாக தனது ஃபேஸ்புக் பக்கத்தில்,
"இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை.
என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன்.
இனி யாரோடும் பகைமுரண் இல்லை.
யாவரும் கேளிர்" என்று குறிப்பிட்டிருந்ததை பலரும் நெகிழ்ச்சியோடு சுட்டிக்காட்டி வருகின்றனர்.
தாமிராவின் உடல் மருத்துவமனையிலிருந்து நேரடியாக திருநெல்வேலிக்குக் கொண்டுசெல்லப்படுகிறது. அவரது சொந்த ஊரில் இறுதிச் சடங்குகள் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
பிற செய்திகள்:
- கொரோனா தடுப்பூசி: 18-45 வயதுடையவர்களுக்கு நாளை முதல் ஆன்லைன் பதிவு
- ஸ்புட்னிக் V, கோவிஷீல்ட், கோவேக்சின்: இந்தியாவில் இருக்கும் தடுப்பூசிகள் குறித்து நமக்கு என்ன தெரியும்?
- "வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது"
- கொரோனா: கேரளாவில் தேவைக்கு அதிகமாக ஆக்சிஜன் உற்பத்தி சாத்தியமானது எப்படி?
- இந்தியாவிற்கு ஆக்சிஜன் அனுப்பி உதவ தயாராகும் வெளிநாடுகள்
- மியான்மர் ராணுவத்துக்கு எதிரான போராட்டம்: துப்பாக்கிச் சூட்டில் 18 பேர் பலி
- சௌதி அரேபியா - அமெரிக்கா இடையே விரிசலை ஏற்படுத்தும் கொலை வழக்கு
- 'நரேந்திர மோதி போலவே எனக்கும் உன்னதமான தமிழ் பேச ஆசை' - அமித் ஷா
- `அதிகம் பேசாதவர்களே சிறந்த தலைவர்கள்` - ஏன் தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: