"சூர்யா பெரிய நடிகராக வருவார் என்ற ஜோசியம் கேட்டு சிரித்தேன்" - சிவக்குமார் பேட்டி

  • ச.ஆனந்தப்பிரியா
  • பிபிசி தமிழுக்காக
சிவக்குமார் பேட்டி

பட மூலாதாரம், SURIYA SIVAKUMAR / FB

நடிகர் சூர்யாவின் 46வது பிறந்தநாள் இன்று. கல்லூரியில் படித்துவிட்டு சொந்தமாக தொழில் தொடங்கும் கனவுகளோடு சிறகடித்த இளைஞனை சினிமா அரவணைத்து கொண்டது.

சினிமா பின்புலம் கொண்ட குடும்பம் என்றாலும் நடிகனாக, கதையின் நாயகனாக தன்னை நிலை நிறுத்தி கொள்ள சூர்யா கொடுத்த உழைப்பு அபாரமானது.

சினிமாத்துறைக்குள் நுழைந்து 25 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் தன்னுடைய 46 வயதில் அடியெடுத்து வைக்கிறார் சூர்யா. அவருடைய பிறந்தநாளான இன்று சரவணனில் இருந்து சூர்யா ஆனது முதல் அவரது பயணம் குறித்து அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார், பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டவை,

"சினிமாவில் சுலபமாக நுழைய முடியாது. அப்படியே வந்தாலும் அவர்களுக்கான வெற்றி என்பது எளிதில் கிடைத்து விடாது. அதனால், முறையாக எதாவது ஒரு படிப்பை முடித்து விட்டு பிறகு சினிமாவில் வாய்ப்பு தேடுங்கள் என்பதுதான் நான் என் பிள்ளைகளுக்கு சொல்லிய அறிவுரை.

அப்படி சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தொழில் செய்து கொள்ளலாம் என்று சொல்லியிருந்தேன். அதேபோல, ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்தார் சூர்யா. அந்த சமயத்தில்தான் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது. 'முயற்சி செய்கிறேன். வெற்றி கிடைத்தால் சினிமாவில் தொடர்கிறேன். இல்லை என்றால் மீண்டும் என்னுடைய வேலைக்கே திரும்பி விடுகிறேன்' என்று சொல்லிதான் சினிமாவுக்குள் நுழைந்தார்" என்றவரிடம் இப்போது அவரது வளர்ச்சியை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டேன்.

இந்த கேள்விக்கு சூர்யா கல்லூரியில் படித்து கொண்டிருந்தபோது நடந்த சுவாரஸ்யாமன ஒரு விஷயத்தை சிவக்குமார் பகிர்ந்து கொண்டார்.

"லயோலா கல்லூரியில் சூர்யா படித்து கொண்டிருந்தபோது ஒரு ஜோதிடர் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். ஜோசியம் என்பதே ஒரு கணக்குதான். அதை தேவையில்லாமல் எல்லோரும் கற்பனை செய்து கொள்ள தேவையில்லை. ஏனென்றால், எனது தந்தையும் ஜோதிடத்தில் இருந்தவர்தான். அவர் நான் பிறந்தபோதே என்னுடையதை கணக்கிட்டு பார்த்து 'இந்த பையனுக்கு ஒரு வருஷம் ஆகும்போது தந்தை இருக்க மாட்டார்' என சொன்னார். அதேபோல, எனது பத்தாவது மாதத்தில் அவர் இறந்துவிட்டார்.

அதனால், கணக்கீட்டின் அடிப்படையில் எப்படி இருக்கும் என தெரிந்து கொள்ள நண்பரிடம் கேட்டிருந்தேன். அவர் ஜாதகத்தை பார்த்துவிட்டு, 'இந்த பையன் கலைத்துறையில் எதிர்காலத்தில் பெரிய ஆளாக வருவான்' என்றார். அதை கேட்டுவிட்டு நான் சிரித்தேன். 'நல்லா பார்த்து சொல்லு, சின்னவனா, பெரியவனா' என கேட்டேன். 'பெரிய பையன்தான். உங்களை விட பெரிய ஆளாக, அதிகம் சம்பாதிக்க கூடிய ஒருவனாக, நிறைய விருதுகளை வாங்குவார்' என ஜோதிடர் சொன்னார்" என்றவர் இது கேட்டு சிரித்ததற்கான காரணத்தையும் பகிர்ந்தார்.

பட மூலாதாரம், SURIYA SIVAKUMAR / FB

"அதிகம் பேசாத ஒரு நபர்தான் சூர்யா. அப்படி இருக்கும் போது அவர் எப்படி நடிகராவார் என்பதுதான் ஜோதிடரிடம் எனக்கு இருந்த கேள்வி. அதற்கு அவர், மகாகவி காளிதாஸ் ஊமையாக இருந்து காளியின் அருள் பெற்று ஞானம் வந்த கதையை சொன்னார். அதையெல்லாம் அப்போது நான் நம்பவில்லை. ஆனால், 1991-ல் அவர் சொன்னது போலவே, 1997-ல் சூர்யாவிற்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சூர்யா இந்த அளவிற்கு வருவார் என சத்தியமாக நானும் என் துணைவியாரும் எதிர்ப்பார்க்கவே இல்லை.

அவர் கடுமையான உழைப்பாளி. இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். ஆரம்ப நாட்களில் அவருக்கு நடனம் வரவில்லை என்ற விமர்சனம் இருந்தபோது, கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் என கடுமையாக வேர்த்து ஒழுக வீட்டில் நடனப்பயிற்சி எல்லாம் எடுத்து இருக்கிறார். ஜீன்ஸ் பேண்ட் நனைந்த கதையெல்லாம் உண்டு. மேற்கொண்டு இன்னும் எவ்வளவு உயரங்கள் போவார் என்பதை இறைவன் தீர்மானித்து இருப்பார்" என்கிறார் நெகிழ்ச்சியாக.

சமீபகாலங்களில் நீட் தேர்வு, மத்திய அரசின் விசாய சட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட மசோதா என பல பிரச்சனைகளுக்கு நடிகர் சூர்யாவின் எதிர்ப்பு குரல் திரைத்துறையில் அழுத்தமாக பதிவு செய்யப்படிருக்கிறது என்பதை அறிவோம்.

இதுபோன்ற சமயங்களில் சமூகத்துக்கு சூர்யாக்கள் ஏன் தேவை என்ற கேள்வியை முன்வைத்தோம்.

"நீட் தேர்வும், மத்திய அரசின் விவசாய சட்டங்களும் உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்தால் சூர்யாக்கள் எதற்கு? அவசியமே இல்லை" என்றவர் தொடர்ந்து தந்தை வளர்ப்பு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்,

"தாய், தகப்பன் சொல்லி கொடுத்தால் பிள்ளைகள் கேட்பார்கள் என்பது உண்மை கிடையாது. அப்படி எதாவது நடந்தால் அதுதான் உலகத்தில் மிகப்பெரிய அதிசயம். என்னை கேட்டால், தாய் தந்தை பிள்ளைகளுக்கு முன்மாதிரியாக நடக்க வேண்டும். நீங்கள் எல்லா தவறையும் செய்து கொண்டு பிள்ளைகள் அப்படி நடந்துக் கொள்ளக் கூடாது என கண்டித்தால் அது எப்படி சாத்தியமாகும்? நான் காபி, டீ குடித்து 60 வருடங்கள் ஆகிறது. அதிகாலை 5.30 எழுவேன். நேரத்திற்கு சாப்பிட வேண்டும் என நினைப்பேன். அப்படி நீங்கள் உதாரணமாக இருங்கள்" என்றவரிடம் தயாரிப்பாளர் சூர்யா பற்றியும் அவரது படங்களையும் எப்படி பார்க்கறீர்கள் என்றும் கேட்டேன்.

பட மூலாதாரம், SIVAKUMAR

"தயாரிப்பாளராக இருப்பதால் அவரது சூழ்நிலைக்கு ஏற்றாற்போல படம் எடுக்க முடியும். அதில் நஷ்டம் வந்தாலும் வேறொரு தயாரிப்பாளராக இருந்தால் சிரமப்பட வேண்டியதிருக்கும். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து படம் செய்ய வேண்டும் என்பது நல்ல யோசனைதான்.

ஆனால், முன்பே சொன்னது போல, இந்த துறையில் வெற்றி என்பது நிரந்தரமல்ல. 1960-ல் 'புதிய பறவைகள்' உள்ளிட்ட பல சிறந்த படங்களை சிவாஜி ஃபிலிம்ஸ் எடுத்தார்கள். ஒரு கட்டத்தில் நஷ்டம் வந்தபோது, அவ்வளவு பெரிய நடிகர் சிவாஜியே ரஜினியிடம் சென்று கால்ஷீட் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. அதுபோல, பல நடிகர்கள் படம் எடுத்து கடன் அடைக்க முடியாமல் மதம் மாறின வரலாறு எல்லாம் இங்கு உண்டு.

சூர்யாவும் பல படங்களில் நஷ்டம் அடைந்திருக்கிறார். ஆனால் இரண்டு படங்கள் நஷ்டம் என்றாலும் மூன்றாவது படத்தில் அது சரியாகிவிடும். இருந்தாலும், இது எனக்கு மகிழ்ச்சியானதாக இல்லை. அந்த காலத்திற்கு அவர்கள் புத்திசாலித்தனமாக இருந்து வெற்றி பெறுவார்கள் என நினைத்து கொள்வேன்".

அப்பா-மகன் குறித்து பேசும்போது 'வாரணம் ஆயிரம்' படம் தவிர்க்க முடியாதது இல்லையா? அந்தப் படத்தில் உங்களை பொருத்தி பார்த்த தருணம் உண்டா, படத்திற்கு பின்பு சூர்யா உங்களிடம் என்ன பேசினார்?

"எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் எந்த நடிகருமே அதுபோல, உடம்பை வருத்தி மேக்கப் போட்டு நடிக்க முடியும் என தோன்றவில்லை. சிவாஜி மிகப்பெரும் நடிகர்தான். அவரது நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், இப்படி சூர்யாவை போல உடம்பை இளைத்து, துருத்தி நடிக்க யாரும் பெரிதாக முன்வரமாட்டார்கள்.

அதை எப்படி சூர்யா செய்தார் என்பது இப்போது வரை எனக்கு ஆச்சரியம்தான். அந்த படத்தில், அப்பாவுடைய உடல் கீழே இருக்கும். மகன் மேலே அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பான், 'அம்மா, அப்பா கிளம்புறாரு' என்று சொல்வான். அந்த காட்சியில் நானே இறந்து சுடுகாட்டிற்கு செல்வது போல இருந்தது. அவ்வளவுதான் சொல்ல முடியும்" என சிறிது நேரம் அமைதியானார்.

பட மூலாதாரம், SURIYA SIVAKUMAR / FB

"வாழ்க்கைக்கும் சினிமாவிற்கு என்ன சம்பந்தம் என கேட்டால், சூர்யா- ஜோதிகா காதலிக்கிறார்கள் என விஷயம் தெரிந்த பின்பு நான்தான் முதலில் சம்மதம் தெரிவிக்க வேண்டிய நிலையில் இருந்தேன். ஏனென்றால் பல படங்களில் நானே காதல்தான் முக்கியம் என வசனம் பேசி நடித்திருப்பேன். அதேபோல திருமணம் ஆகி கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கும் மேலாக மனைவியிடமும், பிள்ளைகளிடம் சரியாக நேரம் செலவிட முடியாத அளவிற்கு ஓடியிருக்கிறேன். அதனால், பெரும்பாலும் சினிமா விஷயங்களை குடும்பத்திற்குள் கொண்டு வருவதை தவிர்த்து விடுவேன்".

சூர்யா, கார்த்தி, பிருந்தா இவர்களில் யார் அதிகம் சேட்டை என்றால் அமைதியாக இருக்கும் சூர்யாதான் பயங்கர சேட்டை என சிரிக்கிறார்.

"கார்த்தியும் பிருந்தாவும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வார்கள். ஆனால், சைலண்ட் கில்லர் சூர்யாதான் அதிக சேட்டை என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். பள்ளிக்கூடம் செல்லும் போது சட்டை, ட்ராயர் எல்லாம் கிழித்து விட்டு பக்கத்து இருந்த பையன்தான் என காரணம் சொல்வார். அதேபோல, கார்த்தியைதான் எல்லாரும் அதிகம் கொஞ்சுகிறார்கள் என அவருக்கு தாழ்வு மனப்பான்மை அப்போது இருக்கும்.

அதனால், கார்த்தியை பழிவாங்க சிறுவயதில் நிறைய முயற்சிகள் எல்லாம் செய்வார். கார்த்தி தூங்கி கொண்டிருக்கும் போது அவருடைய கண்ணின் மேல் ரப்பையை தூக்கி விட்டு, வாய் எச்சிலில் சாக்பீஸால் கோடு வரைந்து முகத்தில் டார்ச் அடித்து பேய் போல கத்துவது என கார்த்தியை பயங்கரமாக சேட்டை எல்லாம் செய்வார்" என்றவர், வளர்ந்து கார்த்தி அமெரிக்கா போன போது அதற்காக சூர்யா அழுத கதையையும் சொன்னார்.

பட மூலாதாரம், SIVAKUMAR

படக்குறிப்பு,

சூர்யா & கார்த்தி

"அப்போது எல்லாம் இ-மெயில் வளர்ந்து வந்த காலம். எனக்குள்ளே தாழ்வு மனப்பான்மை காரணமாக உன்னை வெறுத்து, தம்பியே வேண்டாம் என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். ஆனால், நீ எப்படி அமெரிக்கா தைரியமாக போனாய். நான் விமானத்தில் ஏறினால், அங்கு பாத்ரூமில் போய் அழுதுவிட்டு வருவேனே தவிர அமெரிக்கா போயிருக்க மாட்டேன்' என ஒரு பக்கத்திற்கு அழுது கொண்டே இவர் மெயில் அனுப்ப, அண்ணன் என்றால் அது சூர்யாதான் என கார்த்தி பதில் அனுப்பினார். இப்படி 'சேட்டைகளின் மன்னன்' என்றால் அது சூர்யாதான்".

சூர்யா தன்னுடைய முதல் சம்பாத்தியத்தில் அம்மாவுக்கு புடவை வாங்கி கொடுத்தார் என்பது தெரியும். உங்களுக்கு முதன் முதலாக அவருடைய சம்பாத்தியத்தில் வாங்கி கொடுத்தது என்ன?

"எனக்கு அவர் என்ன வாங்கி கொடுத்தார் என்பது தெரியாது. அது குறித்து நான் கவலையும் படவில்லை. ஏனென்றால் நான் தாயை போற்றுபவன். அதேபோல, வீட்டிற்கு 'லட்சுமி இல்லம்' என பெயர் வைத்ததும் அதே காரணத்தால்தான். பிள்ளைகள் அவர்கள் அம்மாவிற்கு செய்வதுதான் எனக்கு என்றைக்கும் பெருமை"

சூர்யா நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

"முதலில் 'நந்தா'. அம்மாவின் அன்பிற்கு ஏங்கும் ஒரு மகனாக நடித்திருப்பார். சாப்பாட்டை எடுத்து தட்டில் எடுத்து வந்து அம்மாவை ஊட்ட வைப்பார். சூர்யாவே இன்னொருமுறை நினைத்தாலும் அதுபோல நடிக்க முடியாது. அந்த அளவிற்கு பிராமதமாக நடித்திருப்பார். சூர்யாவின் கண்கள் அவருக்கு மிகப்பெரிய பலம். தாய் விஷம் வைத்தது தெரிந்தும் கண்கள் நீர் கோர்க்க சிரிப்பார். அதற்கு பிறகு சூர்யா பல படங்கள் நடித்திருந்தாலும் இதுதான் எனக்கு எப்போதும் பிடித்த ஒன்று" என்று நெகிழ்ந்தார்.

பட மூலாதாரம், SIVAKUMAR

சோர்வடையும் தருணங்களில் பிள்ளைகளுக்கு நீங்கள் என்ன சொல்வீர்கள் என்றால், நூறு ஆண்டு கால சினிமா வரலாறு தெரியும். அதனால் அவர்களது சூழ்நிலைக்கு ஏற்றவாறு முந்தைய சம்பவங்கள் உதாரணங்கள் சொல்லி அவர்களை சமாதானப்படுத்துவேன் என்கிறார் சிவக்குமார்.

அவர்களிடம் நீங்கள் சொல்ல நினைத்து சொல்லாமல் போனது உண்டா என கேட்டால் வாழ்க்கை என்ன அதற்குள் முடிந்துவிட்டதா போக வேண்டிய தூரம் சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது என சிரிக்கிறார்.

நடிகராக மட்டுமில்லாமல், 'அகரம் ஃபவுண்டேஷன்' மூலமாக பலருடைய கல்வியும் சூர்யா உதவியால் சாத்தியப்பட்டுள்ளது. இது குறித்து நீங்கள் சொல்ல விரும்புவது?

"நான் நூறாவது படம் நடித்து முடித்ததும் குழந்தைகளுக்கு கல்வி கொடுக்க வேண்டும் என நினைத்து 'சிவக்குமார் கல்வி அறக்கட்டளை'யை 1979-ல் எம்.ஜி.ஆர். தாயார் மூலமாக நூறாவது பட விழாவில் தொடங்கினேன். மாநில அளவில் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கு கிட்டத்தட்ட 25 வருடங்களாக பரிசுத்தொகை கொடுத்து ஊக்குவித்தோம். அதற்குள் 'அகரம்' ஆரம்பித்துவிட்டோம். 'அகரம்' மரம் என்றால் 'சிவக்குமார் அறக்கட்டளை' வேர்"

அரசியலில் சூர்யா நுழைந்தால் ஒரு நல்ல தலைவரா இருப்பாரா? அவருக்கு அரசியல் விருப்பம் இருக்கிறதா? ஒரு தந்தையா நீங்க என்ன அறிவுரை சொல்லுவீங்க?

"அரசியல் என்பது இன்று சம்பாத்தியம் செய்யக்கூடிய ஒரு இடமாக மாறிவிட்டது. மக்களுக்கு சேவை செய்ய நீங்கள் அரசியலுக்குள்தான் நுழைய வேண்டும் என்பது இல்லை. 'அகரம் ஃபவுண்டேஷன்' போல வெளியே இருந்தும் நீங்கள் சேவை செய்யலாம். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் அரசியலில் இறங்க வேண்டும் என்பது விருப்பம் இல்லை. அரசியல் வாழ்க்கைக்காக தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் கொடுத்த காமராஜர், ஜீவானந்தம் போன்றவர்களை தேர்தல் அரசியலில் தோற்ற வரலாறு இங்கு உண்டு".

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :