திட்டம் இரண்டு: சினிமா விமர்சனம் - ஐஸ்வர்யா ராஜேஷ் த்ரில்லர் படம் எப்படி?
- முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பிபிசி தமிழ்

பட மூலாதாரம், SonyLiv, Youtube
நடிகர்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ், பாவல் நவகீதன், சுபாஷ் செல்வன், அனன்யா ராம்பிரசாத், ஜீவா ரவி, முரளி ராதாகிருஷ்ணன், ஆஷிக் ரஹ்மான்; ஒளிப்பதிவு: கோகுல் பெண்டி; இசை: சதீஷ் ரகுநந்தன்; இயக்கம்: விக்னேஷ் கார்த்திக்.
ஓடிடியில் வெளியாகும் படங்களில் பல பெரும்பாலும் த்ரில்லர் படங்களாகவே அமைகின்றன. குறிப்பாக கதாநாயகிகளை மையமாகக் கொண்ட த்ரில்லர்கள். "திட்டம் இரண்டு"ம் அப்படி ஒரு த்ரில்லர்தான்.
சென்னைக்கு மாற்றலாகி வருகிறார் ஆய்வாளர் ஆதிரா (ஐஸ்வர்யா ராஜேஷ்). வந்த சில நாட்களிலேயே அவரது தோழி சூர்யா (அனன்யா) காரில் எரிந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்படுகிறார். அது விபத்தா, கொலையா, அந்த மரணத்திற்கும் தோழியின் கணவருக்கும் தொடர்பிருக்கிறதா என்று விசாரிக்க ஆரம்பிக்கிறார் ஆதிரா.
இதற்கிடையில் பேருந்தில் சந்தித்த ஓர் இளைஞனுடன் (சுபாஷ் செல்வம்) காதல் ஏற்படுகிறது. ஆனால், ஆதிரா சென்னைக்கு வந்த பிறகு நடக்கும் ஒவ்வொரு சம்பவத்திற்கும், சந்தித்த ஒவ்வொரு மனிதர்களுக்கும் இந்த சம்பவத்தோடு தொடர்பிருப்பதைப் போலத் தெரிகிறது. உண்மையில் என்னதான் நடந்தது என்பதே மீதிக் கதை.
இந்தப் படத்தின் இறுதியில் யாரும் எதிர்பாராத ஒரு திருப்பம் வருகிறது. அந்தத் திருப்பத்தை நம்பியே ஒட்டுமொத்தக் கதையையும் உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். இதைத் தவிர்த்துப் பார்த்தால், ஒரு குறும்படத்திற்கான கதை ரொம்பவும் சாவகாசமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
பட மூலாதாரம், SonyLiv, Youtube
முதல் ஒன்றிரண்டு காட்சிகளிலேயே கதை துவங்கிவிடுவது சிறப்பாகத்தான் இருக்கிறது. ஆனால், நேரம் செல்லச்செல்ல படம் எப்போது முடியும் என்ற அலுப்பை ஏற்படுத்திவிடுகிறது திரைக்கதை.
படத்தின் முதல் காட்சியிலிருந்து முடிவுவரை பல இடங்களில் தேவையேயில்லாமல் 'ஸ்லோமோஷன்' காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன.
இந்தக் காட்சிகள் படம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வை ஏற்படுத்துவதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. படத்தின் மற்றொரு பலவீனம், பின்னணி இசை. தேவையில்லாத இடங்களிலிலும் வயலினை வாசித்துத் தள்ளியிருக்கிறார்கள்.
படத்தில் வருபவர்களில் கதாநாயகியின் தோழியாக வரும் அனன்யா ராம்பிரசாத் மட்டுமே சிறப்பாக நடித்திருக்கிறார். பாவெல் நவகீதன் பரவாயில்லை. மற்ற எல்லோரது நடிப்பும் சுமார் ரகம்தான். பல படங்களில் நடித்தவர்கள்கூட இந்தப் படத்தில் சற்று சொதப்பியிருக்கிறார்கள்.
சமூகத்தில் அவ்வளவாகப் பேசப்படாத பிரச்னை, அதைச் சுற்றி உருவாக்கப்பட்ட ஒரு கொலை சம்பவம் என நல்ல த்ரில்லருக்கான அடிப்படையை எடுத்துக்கொண்ட இயக்குநர், திரைப்படத்தின் பிற அம்சங்களில் கவனம் செலுத்தாததால், மிக சுமாரான த்ரில்லராக வெளியாகியிருக்கிறது "திட்டம் இரண்டு".
பிற செய்திகள்:
- பாப் பீமன்: 52 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ஒலிம்பிக் சாதனைக்கு சொந்தக்காரர்
- காஷ்மீர் ப்ரீமியர் லீக்: 'வெளிநாட்டு வீரர்களை பிசிசிஐ மிரட்டுகிறது ' - பாகிஸ்தான்
- "பெட்ரோல் பாண்டுகளால்தான் பெட்ரோல் விலை உயர்வதாகச் சொல்வது பொய்" - ஆனந்த் ஸ்ரீநிவாசன்
- ஆப்கானிஸ்தானில் 3 முக்கிய நகரங்களில் நுழைந்த தாலிபன்கள்
- நரபலி கொடுக்கும் ஆஸ்டெக் பேரரசு: மத்திய அமெரிக்காவை ஆட்டிப்படைத்த பழங்குடிகளை பற்றி தெரியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்