விஜய் சேதுபதியின் 'மாஸ்டர் செஃப் - தமிழ்': ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா?
- ச. ஆனந்தப்ரியா
- பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், @suntv instagram page
மாஸ்டர் செஃப் தமிழ்
உலக அளவில் புகழ்பெற்ற 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சி பல கட்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு தமிழில் ஒளிபரப்பாகியுள்ளது. விஜய்சேதுபதி தொகுத்து வழங்க சன் டிவியில் ஒளிபரப்பான 'மாஸ்டர் செஃப்- தமிழ்' நிகழ்ச்சி எப்படி இருக்கிறது? அது, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்திருக்கிறதா?
தமிழுக்கு வந்த 'மாஸ்டர் செஃப்'
பிரிட்டனில் 1990-களில் ஒளிபரப்பாகி வெற்றியடைந்த 'மாஸ்டர் செஃப்' சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சி பின்பு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, என கிட்டத்தட்ட 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் அந்தந்த இடங்களுக்கு ஏற்றாற்போல, 'மாஸ்டர் செஃப்- ஜூனியர், மாஸ்டர் செஃப்- செலிபிரிட்டி…' என வெவ்வேறு கான்சப்ட்களில் வந்தது. இதில் 'மாஸ்டர் செஃப்- ஆஸ்திரேலியா, மாஸ்டர் செஃப்- அமெரிக்கா' 'மாஸ்டர் செஃப்' ரசிகர்களிடையே வெகு பிரசித்தம்.
உலக அளவில் புகழ்பெற்ற 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சி இந்தியாவுக்கு கடந்த 2010-வது வருடத்திலேயே இந்தியில் ஒளிபரப்பானது. ஆனால், தமிழுக்கு வருவது இதுவே முதல் முறை.
அதிலும் குறிப்பாக 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி ரசிகர்களுக்கு பிடித்த நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாற, அதனை சமாளிக்கும் விதமாகவே சன் டிவி 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியை தமிழில் கொண்டு வருகிறது என பேச்சுகள் அடிபடத் தொடங்கியது.
அதிலும் 'நம்ம ஊரு ஹீரோ' நிகழ்ச்சிக்கு பிறகு 'மாஸ்டர் செஃப்' மூலமாக விஜய்சேதுபதி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார் எனும் போது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு அதிகம் இருந்தது. அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா முதல் நாள் நிகழ்ச்சி?
'மாஸ்டர் செஃப்'
'மாஸ்டர் செஃப்' என்றாலே சமையலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் சீரியஸான நிகழ்ச்சி. அங்கு உணவுதான் எல்லோருக்கும் 'மாஸ்டர்'.
உலகின் முன்னணி செஃப்கள் நடுவர்களாக இருக்கும் இதில் போட்டியாளர்களது சமையல், அதன் சுவை தரம் போன்றவையே பிரதானம்.
புதிய உணவுகள், புதிய முயற்சிகள், நிகழ்ச்சியையும் சமையலையும் போட்டியாளர்கள் எந்த அளவிற்கு சீரியஸாக எடுக்கிறார்கள், ஒவ்வொரு சுற்றுக்கும் கடுமையாகும் விதிமுறைகளை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் இறுதியில் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
அப்படி வெற்றி பெறும் நபருக்கு உலகின் முன்னணி உணவகங்களில் பணி புரியும் வாய்ப்பு, பரிசுத்தொகை, புகழ் போன்றவை கிடைக்கும். இதுதான் 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சியின் வடிவம்.
அசர வைத்த அரங்கு
பட மூலாதாரம், @themadechefindia instagram page
மாஸ்டர் செஃப் தமிழ்
பொதுவாக 'மாஸ்டர் செஃப்' நிகழ்ச்சிகளில் பார்வையாளர்களை முதலில் கவர்வது அதன் பிரம்மாண்டமான, வேலைப்பாடுகள் நிறந்த அரங்கம்தான். 'மாஸ்டர் செஃப்- தமிழ்' நிகழ்ச்சி பெங்களூருவில் நடக்கிறது. அதன் பிரம்மாண்டமான அரங்கமும் அங்கேதான் அமைக்கப்பட்டிருக்கிறது.
'உணவு என்பதால் இது நாம் எல்லாரும் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி, ஆனால், ரொம்ப சீரியஸான நிகழ்ச்சி' என ஆரம்பத்திலேயே நிகழ்ச்சியின் போக்கை அழுத்தமாக முன் வைத்தார் விஜய் சேதுபதி.
சமையல் அரங்கு 12 பேர் சமைக்கும் வகையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கிறது. சமையல் அரங்கிற்கு பக்கத்திலேயே, சமையல் பொருட்களை சேகரித்து வைத்திருக்கும் அறை விசாலமாக அமைந்திருக்கிறது. 'என்ன பொருள் வேண்டுமானாலும் எடுத்து கொள்ளலாம், ஆனால், வீண் செய்யக்கூடாது' என்பதுதான் இதில் முக்கியமானது.
நிகழ்ச்சியின் ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பாக செயல்படுவர்களை அடுத்த சுற்றிற்கு அனுப்பி வைக்க 'மாஸ்டர் செஃப்' பால்கனி இருக்கிறது. 'மாஸ்டர் செஃப் தமிழ்' என்பதால் பாக்கு மட்டைகளால் உருவாக்கிய மரம், சுவற்றில் கோலங்கள், குதிரை என சின்ன சின்ன மெனக்கெடல்கள் ரசிக்க வைத்தன.
போட்டியாளர்கள் தேர்வு
போட்டியாளர்கள் தேர்வு நிகழ்ச்சி ஆரம்பிக்கும் சில மாதங்களுக்கு முன்பே தொடங்கி விட்டது. பல கட்ட தேர்வுகளுக்கு பின்பு 18 வயதில் இருந்து 72 வயது வரையுள்ள 24 போட்டியாளர்களை சமையல் திறமையின் அடிப்படையில் தேர்வு செய்திருக்கிறது 'மாஸ்டர் செஃப்-தமிழ்' குழு. துணைப்பேராசிரியர், பேக்கர், யூடியூபர், மருத்துவர், பொறியாளர், கல்லூரி மாணவர், எழுத்தாளர் என ஒவ்வொருவரின் பின்னணியும் சுவாரஸ்யம்.
முதலில் 12 போட்டியாளர்கள் மட்டுமே என சொல்லி அறிமுகப்படுத்தி பின்பு அவர்களுக்கு போட்டியாக மற்றுமொரு 12 போட்டியாளர்களை களமிறக்கினார்கள். இந்த 24 போட்டியாளர்களில் சிறந்தவர்கள்தான் 'மாஸ்டர் செஃப்-தமிழ்'ழின் முதல் சுற்றுக்கு தகுதியானவர்கள் என சமையல் போட்டியை ஆரம்பித்து வைத்தார்கள். முன்பே அறிவிக்கப்பட்டது போல, செஃப் கெளஷிக், செஃப் ஆர்த்தி சம்பத், செஃப் ஹரிஷ் ஆகியோர் நிகழ்ச்சியின் நடுவர்கள்.
பட மூலாதாரம், @suntv insrtagram page
மாஸ்டர் செஃப் தமிழ் போட்டியாளர்கள் 2021
சிந்தனை, தோற்றம், சுவை ஆகிய மூன்றுதான் எங்களுக்கு முக்கியம், 'என் முன்னாடி நீங்க உணவு வைப்பதற்கு முன் ஆயிரம் முறை யோசிக்க வேண்டும், ஏனெனில் நான் கொஞ்சம் கூட கருணை காட்ட மாட்டேன்' என ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்களாக போட்டியாளர்களுக்கு படபடப்பு கூட்டினார்கள் நடுவர்கள்.
இதற்கு நேரெதிராக போட்டியாளர்களின் தனித்துவம், சிரிப்பு, சமையல் இதுகுறித்து எல்லாம் பேசி சகஜமாக்கினார் நிகழ்ச்சியின் தொகுப்பாளாரான விஜய் சேதுபதி.
படபடப்பு கூட்டிய 45 நிமிடங்கள்
நிகழ்ச்சியின் முதல் கட்டமாக 3 சுற்றிற்கு 8 நபர்கள் என 24 போட்டியாளர்களை தேர்ந்தெடுத்தார்கள். இதில் நன்றாக சமைத்த 4 நபர்கள் என ஒவ்வொரு சுற்றிலும் தேர்வு செய்து 12 நபர்களை 'மாஸ்டர் செஃப்- தமிழ்' நிகழ்ச்சியின் முதல் சுற்றுக்கு அனுப்பப்படுவார்கள் என அறிவித்து போட்டியாளர்களின் தேர்விலேயே சமைக்கப்படும் உணவும் விடப்பட்டது.
பொங்கல் சீஸ் கேக், மட்டன் கேனன், அக்கார வடிசல், பெப்பர் வடை, டிராபிகல் பிரான்ஸ், மாங்காய் சிறுதானிய கட்லெட் என நம்ம ஊர் டக்கர் சமையலை வித்தியாசமான முறையில், கொடுக்கப்பட்ட 45 நிமிடங்களுக்குள் சமைத்தார்கள் போட்டியாளர்கள்.
உணவை ருசி பார்த்து அப்போதே கமெண்ட் கொடுத்து ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் தகுதியானவர்களுக்கு 'மாஸ்டர் செஃப்'-ன் ஏஃப்ரான் கொடுத்து பால்கனிக்கு அனுப்பினார்கள்.
இப்படி 12 போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்தாலும், அதில் இன்னும் இருவர் தேர்ந்தெடுக்க போவதாக நடுவர்கள் அறிவித்தார்கள்.
மீதமுள்ள போட்டியாளர்களில் 6 பேரில் ஒருவரை நடுவர்கள் தேர்ந்தெடுத்து ஏஃப்ரான் கொடுக்க இன்னும் ஒருவரை விஜய்சேதுபதியும் நடுவராக இருந்து தேர்ந்தெடுத்தார்.
ஆக, மொத்தம் 14 போட்டியாளர்கள் 'மாஸ்டர் செஃப்- தமிழ்' நிகழ்ச்சியின் முதல் சுற்றிற்கு செல்கிறார்கள்.
முதல் சுற்றிற்கு தேர்வாகும் இந்த அறிமுக சுற்றிலேயே படபடப்பு, நடுவர்களின் கமெண்ட்டுக்கு கண்ணீர், மகிழ்ச்சி, பரபரப்பு என பலவித உணர்வுகளை நிகழ்ச்சி நெடுக பார்க்க முடிந்தது.
இனி அடுத்தடுத்த சுற்றுகளில் போட்டி கடுமையாகும், நடுவர்களின் தீர்ப்பும் கடுமையாகும். முழு கவனத்தையும், புதுவிதமான சிந்தனைகளையும், போட்டியின் தீவிரத்தையும் போட்டியாளர்கள் தாக்கு பிடிப்பார்களா இன்னும் என்னென்ன சுவாரஸ்யங்களையும் புதுவித உணவுகளையும் 'மாஸ்டர் செஃப் தமிழ்' அறிமுகப்படுத்த போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
பிற செய்திகள்:
- சிங்கப்பூர்: கேலி செய்யப்பட்ட சின்னஞ்சிறு தீவு பணக்கார நாடாக உருவெடுத்தது எப்படி?
- தமிழ்நாட்டின் நிதிநிலை எப்படி உள்ளது? - வெள்ளை அறிக்கை வெளியிட்ட பழனிவேல் தியாகராஜன்
- உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களைத் தேடும் கமல்; 'இனி பகுதிநேரம்தான் சினிமா'
- வடகொரியாவில் வெள்ளத்தால் கடும் உணவுப் பஞ்சம்: சீனாவை நம்பியுள்ள கிம் ஜோங் உன்
- உலகின் மிகப் பெரிய ராக்கெட்டை கட்டமைத்த ஈலோன் மஸ்க்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்