டிக்கிலோனா': சந்தானம் மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வதாக சர்ச்சை - என்ன நடந்தது?

  • ச. ஆனந்தப்பிரியா
  • பிபிசி தமிழுக்காக
சந்தானம்

பட மூலாதாரம், @iamsanthanam

படக்குறிப்பு,

நடிகர் சந்தானம்

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஓடிடியில் நேரடியாக வெளியான திரைப்படம் 'டிக்கிலோனா'. இதில் மாற்றுத்திறனாளிகள் குறித்து, நகைச்சுவை என்ற பெயரில் சந்தானம் பேசியிருக்கும் சில வசனங்களும், பெண்கள் சுதந்திரம், உடை குறித்த சில கருத்துகள், பொது வெளியில் சர்ச்சையை கிளப்பி இருக்கின்றன. அது என்ன சர்ச்சை? அது ஏன் விவாதமாகியிருக்கிறது?

தமிழ்நாட்டில் கொரோனா தீவிரத்தின் இரண்டாம் அலை தணியத் தொடங்கிய நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தியேட்டர்கள் திறக்கப்பட்டன.

'தலைவி', 'லாபம்' ஆகிய படங்கள் தியேட்டரில் வெளியாக 'துக்ளக் தர்பார்' திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியிலும் பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ஓடிடி தளத்திலும் வெளியானது.

இந்த படங்களோடு நடிகர் சந்தானம் நடித்த 'டிக்கிலோனா' திரைப்படம் நேரடியாக ஜீ5 தமிழ் (Zee5 Tamil) ஓடிடி தளத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்த கதையில் இடம் பெற்றுள்ள சில வசனங்களும், காட்சிகளும்தான் தற்போது சர்ச்சைகளுக்கு வழி வகுத்திருக்கின்றன.

பட மூலாதாரம், @iamsanthanam

என்ன கதை?

ஹாக்கி விளையாட்டு வீரராக விரும்பும் சந்தானம், இந்த படத்தில் மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அவர் நினைத்தபடி ஹாக்கி வீரராக முடியாமல் போக தான் விரும்பிய ப்ரியாவை திருமணம் செய்து கொள்கிறார். இதன் பின்பு அவருக்கு மின் வாரியத்தில் வேலை கிடைக்கிறது. இதனால், மனைவியுடன் தொடர்ந்து சண்டை வர ஒரு கட்டத்தில் கால எந்திரத்தில் பயணிக்கும் வாய்ப்பு திடீரென கிடைக்கிறது. அதில் கடந்த காலத்திற்கும், எதிர் காலத்திற்கும் பயணிக்கிறார் சந்தானம்.

கடந்த காலத்துக்கு பயணம் செய்து தனது திருமணத்தில் நடந்த தவறை சரி செய்கிறார் சந்தானம். தான் காதலித்த ப்ரியாவுடனான திருமணத்தை நிறுத்தி விட்டு, தன்னை விரும்பிய மற்றொரு பெண்ணை திருமணம் செய்கிறார். பின்பு இந்த கதையில் என்ன நடக்கிறது என்பதை நகைச்சுவை கலந்து படமாக்கி இருக்கிறார்கள்.

வசன சர்ச்சை

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், படத்தில் இடம் பெற்றுள்ள சில வசனங்களும், உருவ கேலி குறித்த காட்சியமைப்பு, ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

குறிப்பாக படத்தில் மாற்று திறனாளி ஒருவரை ஆட்சேபத்துக்குரிய வகையில் குறிப்பிட்டிருப்பது, பெண்களின் சுதந்திரம் அடுத்தவர்களை பாதிக்கும் வகையில் இருக்கக்கூடாது, பணக்கார பெண்கள் எப்போதுமே 'பார்ட்டி' செய்வார்கள் என்பது போலவும், குடும்ப பெண்கள் எப்படி உடை உடுத்த வேண்டும் என வகுப்பெடுப்பது போல இடம்பெற்ற காட்சிகளும், படத்தில் பல பிற்போக்கு தனமான காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்று இருப்பதாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

நடிகர் சந்தானத்தின் படங்கள் என்றாலே அவற்றில் உருவ கேலி வசனங்களும் காட்சிகளும் 'நகைச்சுவை' என்ற பெயரில் இடம் பெறுவதாக ஏற்கெனவே ஒரு சர்ச்சை உள்ளது. தற்போது வெளியாகியுள்ள டிக்கிலோனா படத்திலும் அத்தகைய வசனங்கள் உள்ளதாக கூறப்படுவதால் அவை சர்ச்சை ஆகியிருக்கின்றன.

மாற்றுத்திறனாளிகள் சங்கம் கண்டனம்

பட மூலாதாரம், NAMBURAJAN

'டிக்கிலோனா' படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளுக்கும், மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்வது போன்று இடம் பெற்றிருக்கும் வசனங்களுக்கும் கண்டனம் தெரிவித்து, டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நகைச்சுவை என்பது மன இறுக்கத்தை குறைக்க வேண்டுமே தவிர மனதை நோகடிக்க கூடாது எனவும், இயற்கையின் வினையால் ஏற்பட்ட உடல் பாதிப்பை நகைச்சுவை என்ற பெயரில் காட்சிப்படுத்துவது சமூகத்தின் பண்பு இல்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை பார்க்கும் வருங்கால சந்ததிகள், நம்மை பிற்போக்காளர்கள் என கருதுவார்கள். பகுத்தறிவை உலகுக்கு எடுத்து சொல்லும் நாம், மாற்று திறனாளிகளை இப்படி நகைச்சுவைக்காக மனம் நோகும்படி சித்திரிப்பது மானமும் அறிவும் மாற்று திறனாளிகளாகிய எங்களுக்கு கிடையாதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒரு அடி எடுத்து வைக்கவே பல வகையில் சிரமப்படும் இந்த தோழர்கள், இத்தனையும் எதிர்கொண்டு வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடுகிறார்கள். இவர்கள்தான் உண்மையான போராளிகள். இவர்களை இழிவுப்படுத்துவது எந்த வகையிலும் நியாமானது இல்லை.

நகைச்சுவை மக்களை சிரிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும் வேண்டும். ஆனால், அவ்வப்போது இப்படி மனதை கலங்கடிக்கும் காட்சிகளும் படத்தில் இடம்பெறுவது வருத்தமளிக்க செய்கிறது என அந்த அறிக்கையில் தனது வருத்தத்தையும் பதிவு செய்துள்ளார், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக்.

"வருத்தம் தெரிவிக்க வேண்டும்"

மாற்றுத்திறனாளிகளின் மனம் நோகும்படி நகைச்சுவை என்ற பெயரில் சில வசனங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான மாநில பொதுச்செயலாளர், எஸ். நம்புராஜன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை படத்தில் உள்ளது போன்ற வார்த்தைகளால் குறிப்பிடுவது உண்மையில் எரிச்சலூட்டும் விதமாக இருக்கிறது என்று அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலோட்டமாக இது நகைச்சுவை என சொல்லப்பட்டாலும் சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளை நிச்சயம் இது பாதிக்கும் எனவும் கூறும் அவர், எந்த ஒரு தனிநபரையும் சமூகத்தின் கண்ணியத்தையும் கேலி செய்து கேள்வி கேட்பது போன்றவற்றை நகைச்சுவையாக ரசிக்க முடியாது என்கிறார் நம்புராஜன்.

சந்தானம் நடிகராக இதை செய்திருந்தாலும் படத்தின் இயக்குநர், வசனம் எழுதியவர், படத்தில் உடன் இருந்தவர்கள் என அனைவருக்கும் இதில் பொறுப்பு இருக்கிறது. இளம் வயதில் நன்றாக இருந்தாலும் வயதான பிறகு பலருக்கும் உடல் நலன் சார்ந்து பல பிரச்னைகளை சந்திக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பதையும் குறிப்பிடுகிறார் அவர். மேலும், கைத்தடி என்பது மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமல்ல ஏதேனும் விபத்தில் பாதிக்கப்பட்டாலும், வயதானவர்களுக்கும் தேவைப்படும். அதனால் இது போன்ற விஷயங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்கிறார் அவர்.

சம்பந்தப்பட்டவர்களுக்கு அதுதான் ஊன்று கோல், அவர்களுடைய காலாக செயல்படுகிறது. எனவே, எதிர்காலத்தில் இது போன்ற விஷயங்களை திரைப்படங்களில் தவிர்ப்பது மட்டுமல்லாமல் 'டிக்கிலோனா' படக்குழு பொது வெளியில் தங்களது வருத்தத்தையும் பதிவு வேண்டும் என்கிறார் நம்புராஜன்.

படக்குழு தரப்பு விளக்கம் என்ன?

'டிக்கிலோனா' படத்தில் இடம்பெற்றுள்ள இந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் குறித்தும், டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் தீபக் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து விளக்கம் பெற டிக்கிலோனா படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகியை பிபிசி தமிழ் தொடர்பு கொள்ள முயன்றது. "இது தொடர்பான நெருக்கடியான பிரச்னைகள் சந்தித்து கொண்டிருக்கிறோம்., எது பற்றியும் தற்போது பேச விரும்பவில்லை," என்பதோடு முடித்து கொண்டார் கார்த்திக் யோகி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :