‘புஷ்பா’: “கேள்விப்படாத ஆண்கள் சங்கத்திற்கு ஏன் பதில் சொல்ல வேண்டும்?”- பாடலாசிரியர் விவேகா

  • ச. ஆனந்தப்பிரியா
  • பிபிசி தமிழுக்காக
புஷ்பா

பட மூலாதாரம், @PushpaMovie

நடிகர் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தானா, ஃபகத் பாசில் ஆகியோர் நடிப்பில் 'புஷ்பா' படத்தின் முதல் பாகம் இந்த வாரம் தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கிறது. ஆந்திராவில் செம்மர கடத்தலை அடிப்படையாக வைத்து, புஷ்பா எனும் கதாப்பாத்திரத்தை சுற்றி நடக்கும் கதையாக உருவாகி இருப்பதாக இன்று சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் அல்லு அர்ஜூன் தெரிவித்தார். இந்த படத்திற்கு தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தமிழில் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேகா எழுதி உள்ளார்.

பாடல் குறித்து எழுந்த சர்ச்சை

இந்த படத்தில் நட்பு ரீதியாக நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். சமீபத்தில் சமந்தா இந்த படத்தில் நடனமாடியுள்ள 'ஓ சொல்றியா!' பாடல் அனைத்து மொழிகளிலும் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டும் ஆனது. தெலுங்கில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தையும் எழுதி இருப்பவர் பாடலாசிரியர் சந்திரபோஸ்.

இந்த பாடல் வரிகள் ஒரு பெண்ணின் பார்வையில், ஆண்கள் பெண்களை நோக்கிய காம எண்ணம் மட்டுமே கொண்டவர்களாக சித்தரிப்பதாக உள்ளதாக ஆந்திராவில் ஆண்கள் அமைப்பினர் இந்த பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதை தொடர்ந்து, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கமும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்ததோடு, இந்த பாடலை தடை செய்யாவிடில் சமந்தா உள்ளிட்ட படக்குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடிகர் அல்லு அர்ஜூனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்ட போது "அது உண்மைதானே!" என்றும் கூறியிருந்தார். மேலும் தற்போது இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என Female Version என பெண்கள் குறித்தும் போட்டியாக சிலர் சமூக வலைதளங்களில் பாடல்களை வெளியிட்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், @PushpaMovie

மேலே குறிப்பிட்டுள்ள இந்த சர்ச்சை குறித்தும், இந்த படத்தில் பாடல் எழுத கிடைத்த வாய்ப்பு குறித்தும் பாடலாசிரியர் விவேகாவிடம் பிபிசி தமிழுக்காக பேசினேன்.

"கடந்த 15 வருடங்களாகவே தேவிஸ்ரீபிரசாத்துடன் சினிமாவில் பயணித்து வருகிறேன். அதனால், அவருடைய இசையில் இந்த படம் எனும்போது தமிழில் அனைத்து பாடல்களையும் எழுத நான் ஒப்பந்தமானேன்" என்றவரிடம்,

படத்தில் குறிப்பிட்டு 'சாமி சாமி' பாடல் மற்றும் 'ஓ சொல்றியா' அதிக கவனத்தை ஈர்த்துள்ளது எதிர்ப்பார்த்ததுதானா?

"ஆமாம்! 'சாமி சாமி' பாடல் யூடியூப் தளத்தில் கிட்டத்தட்ட 30 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை கடந்துள்ளது. நேரடி தமிழ் பாடல்களை தாண்டி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

அதேபோல, 'ஓ சொல்றியா' பாடலும் சில பல சர்ச்சைகள் இருந்தாலும் அதையும் தாண்டி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளதில் மகிழ்ச்சி. பலருடைய Status ஆகவும், சமூக வலைதளங்களில் விமர்சனங்களையும் வரவேற்பையும் இந்த பாடல் ஏற்படுத்தியுள்ளது. இதையும் அந்த பாடலுக்கான அங்கீகாரமாகவே பார்க்கிறேன்".

இந்த பாடல் எழுதும்போது இதுபோன்ற சர்ச்சைகள் கிளம்பும் என கணித்தீர்களா?

"இல்லை. முதலில் தெலுங்கில் இந்த பாடல் வேறு மாதிரியாக இருந்தது. 'கருப்போ சிவப்போ, ஆனால் நீ சந்தோஷமாக இரு! நீ குள்ளமா நெட்டையோ யாராவது உன்னை பார்த்தால் குதூகலமாக இரு!' என்பது போன்ற பொருள் வரும் வகையில்தான் அந்த பாடல் முதலில் அமைந்திருந்தது.

பிறகு, இந்த பாடல் நான் பார்த்துவிட்டு நான் ஒரு பிரதி எழுதி கொடுத்தேன். 'எந்த தடையும் இல்லை. ஜாலியாக எழுதி கொடுங்கள்' என்றுதான் தேவிஸ்ரீபிரசாத் சொல்லியிருந்தார். நான் எழுதிய தமிழ் வரிகளில் 'ஆம்பள புத்தி' என்ற வார்த்தை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், 'வெளக்க அணைச்சா போதும் எல்லா வெளக்கமாறும் ஒன்னுதான்' என்ற வரியோடு முடித்திருப்பேன். அதை பார்த்ததும் இன்னும் கூடுதல் சந்தோஷம் அவருக்கு. பிரமாதம் என என்னை பாராட்டியவர், இந்த மாதிரியான கான்செப்ட்டில்தான் இந்த பாடல் வேண்டும் என்று சொல்லியதோடு தெலுங்கு உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் 'ஆம்பள புத்தி' உள்ளிட்ட சில வரிகளில் மாற்றங்கள் செய்தார்கள். இப்படி ஒரு வித்தியாசமான பாடலாக செய்தது ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது".

பட மூலாதாரம், lyricist viveka

இந்த பாடல் தொடர்பாக ஆந்திரா, தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் சங்கத்தினர் கொடுத்துள்ள புகார் குறித்தான கேள்வியை தொடங்கும்போதே சிரித்தார். "ஆண்கள் சங்கம் என்ற அமைப்பை இதற்கு முன்பு கேள்வி பட்டிருக்கிறீர்களா? சரி, ஆண்கள் சங்கம் வைத்திருக்கிறார்கள். ஆண்களுக்காக இதற்கு முன்பு என்ன போராடி இருக்கிறார்கள்? ஆண்களில் அயோக்கியர்கள் குழந்தைகளை பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தி இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வருகிறது. இதெல்லாம், எதிர்த்து குரல் கொடுத்தார்களா?

இதெல்லாம் விடுங்கள்! ஆண்களிலுமே கூட எளிய தரப்பு ஆண்கள் உணவுக்காக அடித்து கொல்லப்பட்டார்கள். கேரளாவில் கூட இது நடந்தது. அப்போதெல்லாம் குரல் கொடுத்தார்களா? இல்லையே! ஆண்களுக்கு முதலில் சங்கம் எதற்கு என கேட்கிறேன்! மனிதர்கள் சங்கம் என ஆரம்பிக்க வேண்டியதுதானே? ஆண் என்பவன் ஆதிக்க மனநிலையோடு நூற்றாண்டு காலங்களாக இருந்து வரக்கூடியவன். இதில் ஆண்கள் சங்கம் என்பதே எனக்கு வேடிக்கையான ஒன்றாக இருக்கிறது. கேள்விப்படாத ஒன்றிற்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்?

நானும் தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களுக்கு பயணித்து இருக்கிறேன். இது போன்ற அமைப்பே இல்லையே? நானும் ஆண்தானே? ஆண் என்பதை பெண்களுக்கான எதிர்ச்சொல் போல கட்டமைத்து விடுவது தவறு.

முதலில் ஒன்றை தெளிவு படுத்த விரும்புகிறேன். இது ஆண்களை குறை சொல்லும் வகையிலான பாடல் கிடையாது. இது ஒரு Item Song! அந்த பாடலை பாடும் பெண் ஒருத்தி தன்னை நாடி வரக்கூடியவனின் பார்வை, மனநிலை ஆகியவற்றை விவரிக்கிறாள். அவளுடைய மனநிலையில் இருந்து தன்னை நாடி வரக்கூடியவர்கள் எப்படி இருக்கிறார்கள், அவர்கள் பெண்களை எப்படி அணுகுகிறார்கள் என்பதை சொல்கிறாள். மற்றபடி ஒட்டுமொத்த ஆண்களுமே இப்படிதான் என்று சொல்லவில்லை. ஆண்களை கொச்சைப்படுத்துகிறார்கள் என ஒரு ஆணே இப்படி பாடும்போது நீங்கள் இந்த கருத்தை வைத்தால் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால், இதில் ஒரு பெண் தன்னை நாடி வரக்கூடியவர்களின் மனநிலையை விவரிக்கிறாள். அப்படிதான் இதை புரிந்து கொள்ள வேண்டும்".

இந்த படத்தில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் வரி எது?

"மொழிமாற்றம் செய்யப்பட்ட படத்தின் அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது சமீபத்தில் இந்த படத்திற்குதான் என நினைக்கிறேன். 'சாமி சாமி' பாடலும் 'ஓ சொல்றியா' இந்த இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் இது இரண்டும் எனக்கு கூடுதலாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக 'சாமி சாமி' பாடலில் வரும் 'ரெண்டு குண்டு கண்ணை பார்க்கும் போது, தண்டு வடத்தில் நண்டு மேயும் சாமி' இந்த வரிகள் எழுதி முடித்ததும் 'அருமையாக இருக்கிறதே!' என தோன்றியது.

பட மூலாதாரம், @PushpaMovie

அதேபோல, 'ஓ சொல்றியா' பாடலின் வரிகளும் பிடிக்கும். இதுவும் நல்ல கமர்ஷியல் பாடலாக அமைந்துவிட்டது. குறிப்பாக இந்த பாடலில் 'வெளக்க அணைச்ச பின்பும் எல்லா வெளக்கமாறும் ஒன்னுங்க' வரிகள் மிகவும் சர்ச்சைக்குள்ளானது. கிராமப்புறத்தில் இருக்கும் தாய்மார்கள், மூதாட்டிகள் என அனைவரும் ஆண்கள் குறித்து, சர்வ சாதாரணமாக 'எல்லா வெளக்கமாறும் ஒன்னுதான்' என பேசுவதுதான். ஆண்கள் எல்லாரும் இது போன்ற இயல்புடையவன் என்பது மாதிரியான சொலவடைதான் இது. அதை தான் இதில் பயன்படுத்தி உள்ளோம்".

"ஒரே ஒரு பாடல் வந்ததற்கு இவ்வளவு கோபப்படுகிறார்கள்"

இந்த சர்ச்சை குறித்து எழுத்தாளர் கொற்றவையிடம் பேசினோம், "இந்த பாடலுக்காக ஆண்கள் சங்கத்தினர் சென்று வழக்கு கொடுக்கிறார்கள் என்பது அபத்தமாக உள்ளது. காலம் காலமாக பெண்களை கிண்டல் செய்து எவ்வளவோ பாடல்கள் வந்திருக்கிறது. பெண்களை கவர்ச்சிகரமாக சித்தரித்து, இழிவாக பேசி எவ்வளவோ விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், 'ஆம்பள புத்தி' என்று ஒரே ஒரு பாடல் வந்ததற்கு இவ்வளவு கோபப்படுகிறார்கள். இதற்கு முன்பு இப்படி பெண்களை குறித்து தவறான பாடல்கள் வந்தபோது மட்டும் 'சினிமாவை சினிமாவாக பாருங்கள். இங்கு ஏன் பெண்ணிய கருத்துகளை எல்லாம் கொண்டு வருகிறீர்கள்?' என்று சொன்ன இதே ஆண்கள் கூட்டம் இப்போது எங்கு போனது? நான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை. இந்த பாடலை உண்மைதானே என்று வரவேற்கும் ஆண்களும் இருக்கிறார்கள்.

பட மூலாதாரம், @Kotravai N Facebook

படக்குறிப்பு,

கொற்றவை

வேறு சிலர் இந்த பாடலை விளம்பர யுக்தி என்கிறார்கள். நான் அதை அப்படி சுருக்கி பார்க்க விரும்பவில்லை. உண்மையில் இந்த பாடலில் ஆண்களுக்கு எதை பார்த்து கோபம் வரவேண்டும் என்றால், சமந்தாவை இப்படி கவர்ச்சிகரமாக சித்தரித்து ஒரு பாடல் செய்கிறார்கள் என்றால் அதற்குதான் அவர்கள் கோபப்பட வேண்டும். பெண் உடலை வணிகப்படுத்துகிறார்கள் என்றால் அதற்கு கோபப்படுத்தாமல் ஆணாதிக்கத்தை கேள்வி கேட்கும் பாடலுக்கு கோபப்படுகிறார்கள். உள்ளுக்குள் ஒன்று வைத்து கொண்டு வெளியில் ஒன்று என இருக்கும் ஆண்களைதான் இந்த பாடல் பகடி செய்கிறது. 'பொம்பள புத்தி குறித்து மட்டுமே பாடல் எழுதும் இடத்தில் 'ஆம்பள புத்தி' குறித்தும் பாடல் வருவது வரவேற்கத்தக்கதுதான். மேலும், படத்தில் அந்த படத்தில் பாடலின் சூழல், அந்த பெண்ணின் சூழல் இதெல்லாம் பார்த்துதான் முடிவு செய்ய வேண்டும்".

பாடலை பாடிய ஆண்ட்ரியா, நடனமாடியுள்ள சமந்தா இவர்களது தனிப்பட்ட வாழ்க்கையோடு இணைத்து இந்த பாடல் சர்ச்சையும் சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறதே?

"இதுவும் ஆணாதிக்க மனப்பான்மைதான். ஒருவருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் வேலையையும் தொடர்பு படுத்தி பேசுவதே தவறான விஷயம்தான். பெண்ணாக இருந்து கொண்டு அவர்களே இது போன்று கவர்ச்சியாக நடனம் ஆட ஒத்துக்கொள்ளும்போது, ஏன் நீங்கள் பெண் விடுதலையை பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். அப்படி ஒரு சந்தையை உருவாக்கியுள்ள மமதையைதான் நாம் கேள்வி கேட்க வேண்டுமே தவிர, வேலை என்று வந்த பின்பு அவர் தனக்கான கதாப்பாத்திரத்தைதான் செய்கிறார். அது வேலையின் ஒரு பகுதி. அதை நாம் கேள்வி கேட்க முடியாது" என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: