எதிர்ப்பை சந்தித்துள்ள 'ஆரக்ஷன்' திரைப்படம்

  • 12 ஆகஸ்ட் 2011
ஆர்க்ஷன் திரைப்பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன படத்தின் காப்புரிமை AP
Image caption ஆர்க்ஷன் திரைப்பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன

‘ஆரக்ஷன்’ (இட ஒதுக்கீடு) என்ற இந்தித் திரைப்படம் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பிரசாரத்துடன் இந்தத் திரைப்படம் வந்திருப்பதாக எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.

பிரகாஷ் ஜா இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில், இந்தித் திரையுலகின் ஜாம்பவான் என்று கருதப்படும் அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார்.

சமூகத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அடிப்படையி்ல் கல்லூரியில் இடம் வழங்கப்படுவது குறித்து இந்தப்படத்தில் ஏளனமாகக் கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சிலர் எதிர்ப்புக்குரல் எழுப்பியிருக்கிறார்கள்.

திரைப்படத்தின் போஸ்டர்கள் பல இடங்களில் கிழித்தெறியப்பட்டன. இன்று வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த நிலையில், சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்று கருதி உத்தரப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் அந்தப் படத்தைத் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சன்

படத்தின் காப்புரிமை AP
Image caption 'இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்ற கோஷம் தவறானது'- அமிதாப் பச்சன்

ஆரக்ஷன் படத்தில் கல்லூரி முதல்வர் வேடத்தில் நடித்துள்ள அமிதாப் பச்சன் தனது இணைய தளத்தில், இந்தப்படம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானது என்ற பிரசாரத்தை மறுத்திருக்கிறார்.

எதிர்ப்பாளர்களின் தாக்குதலுக்கு அஞ்சி, மும்பையில் உள்ள அவரது இரண்டு வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கத் தயாராக இருப்பதாக ஏற்கெனவே தெரிவித்துள்ள இயக்குநர் பிரகாஷ் ஜா, தனது படத்துக்கு மூன்று மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்தியாவில், இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக ஒரு பிரிவினரும் எதிராக ஒரு பிரிவினரும் இருக்கிறார்கள்.

சமூகத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், தரமான கல்வி நிறுவனங்களில் பயின்று சமூகத்தில் தாங்களும் உயர்ந்த நிலையை எட்ட இட ஒதுக்கீடு மிகவும் அவசியம் என்பது அதை ஆதரிப்போர் வாதம்.

ஆனால் இட ஒதுக்கீடு சாதி மற்றும் மத் என்ற அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாகவும் கல்வி நிறுவனங்களில் தகுதிக்கு மதிப்பளிக்கப்படுவதில்லை என்றும் இட ஒதுக்கீட்டை எதிர்ப்போர் விமர்சிக்கிறார்கள்.