வான் கோ மரண மர்மம்

  • 17 அக்டோபர் 2011
ஓவியர் வின்சென்ட் வான் கோ படத்தின் காப்புரிமை AP
Image caption கொலையா , தற்கொலையா ? வான் கோ மர்மம்

பிரபல டச்சு நாட்டு ஓவியர் வின்சென்ட் வான் கோ காலம் காலமாக நம்பப்பட்டு வருவது போல தற்கொலை செய்து கொள்ளவில்லை, தவறுதலாக சுடப்பட்டார் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

டச்சு நாட்டை சேர்ந்த 19ம் நூற்றாண்டு கால ஓவியர், வின்சென்ட் வான் கோ பற்றிய புதிய வாழ்க்கை சரிதம் ஒன்று, அவர் தற்கொலை செய்துகொண்டார் என்ற எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தகவலை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

வான் கோ, பாரிசுக்கு வடமேற்கே இருக்கும் ஆவெர் சூர் ஒயிஸ் நகரில், தனது மார்பில் தானே சுட்டுக்கொண்டு, படுகாயத்துடன் தள்ளாடியபடி, அந்நகரில் இருந்த ஒரு தங்குமிடத்தில் நுழைந்து, பிறகு அங்கே சில நாட்களுக்கு பின்னர் இறந்தார் என்பதுதான் பிரெஞ்சு போலிசார் 1890ல் கூறிய தகவலாக இருந்தது.

ஆனால் துப்பாக்கி எதுவும் கண்டெடுக்கப்படவில்லை.

இது குறித்து பத்தாண்டு காலம் ஆய்வு செய்த பின்னர், இந்த வாழ்க்கை சரிதத்தை எழுதிய ஆசிரியர்களான, ஸ்டீவன் நைபே, மற்றும் கிரெகோரி ஒயிட் ஸ்மித் ஆகியோர் , இரண்டு உள்ளூர் சிறுவர்கள் அவரை தவறுதலாகச் சுட்டனர் என்றும் , வான் கோ, அவர்களைப் பாதுகாக்கப் போலிசாரிடம் பொய் சொன்னார் என்றும் இப்போது கூறுகிறார்கள்.

இந்த அதிகாரபூர்வமற்ற தகவல்களை ஊர்ஜிதப்படுத்தும் ஆதாரம் இருப்பதாகக் கூறும் இந்த ஆசிரியர்கள், இந்த தகவலகளை 1930களில் அந்தப்பகுதிக்கு விஜயம் செய்த கலை வரலாற்றறிஞர் ஒருவர் பதிவு செய்திருக்கிறார் என்று கூறினர்.

இது ஒரு திகைப்பூட்டும் கருத்து என்று கூறியிருக்கும் ஆம்ஸ்டர்டாமின் வான் கோ அரும்பொருட்காட்சியகம், ஆனால், இந்த தற்கொலை என்ற கருத்தாக்கத்தை நிராகரிப்பதற்கு இது சரியான தருணமல்ல என்று கூறியிருக்கிறது.