பிரபல ஓவியர் மரியோ மிராண்டா காலமானார்

  • 11 டிசம்பர் 2011
படத்தின் காப்புரிமை the hindu
Image caption படம்- தி ஹிந்து

இந்தியாவில் மிகவும் அறியப்பட்ட கேலிச் சித்திரக்கரர்கள் மற்றும் ஓவியர்களில் ஒருவரான மரியோ மிராண்டா தனது 85 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

அவரது கலைப்படைப்புகள் பெரும்பாலும் அவரது சொந்த மாநிலமான கோவாவை மையப்படுத்தியே இருந்தன.

உள்ளூர் மக்களையும் அவர்களது பண்பாட்டையும் வெளிப்படுத்தும் அவரது படைப்புகளும், தனிப்பட்ட முறையில் அவரது மென்மையான மனதும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கோவாவை பிரலப்படுத்த பெரிதும் உதவின.

கோவாவின் நிலப்பரப்புகள், மக்களின் வாழ்க்கை, கலை, கலாச்சாரங்கள் போன்றவை அவரது படைப்புகளில் பெரிதும் வெளிப்பட்டன.

மிஸ் நிம்பு பானி மற்றும் புந்தல்தாஸ் போன்ற கேலிச்சித்திரப் பாத்திரங்கள் அவரை மிகவும் பிரபலமாக்கின.

ஞாயிறன்று அவர் காலமான செய்தி வெளியானவுடன் நூற்றுக்கணக்கான மக்கள் அவரது இல்லத்தில் திரண்டனர்.

காலஞ்சென்ற மரியோ மிராண்டா அவர்கள், மிகவும் கருணை உள்ளம் கொண்டவர் என்றாலும், அவரது நகைச்சுவையில் ஒரு குசும்புத்தனம் இருக்கும் என்று அவருக்கு தெரிவிக்கப்பட்ட அஞ்சலிகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கேலிச்சித்திரக்காரர்களில் அவர் ஒருவர் என்று கோவாவின் முதலமைச்சர் திகம்பர் காமத் கூறியுள்ளார்.

கோவாவின் பிம்பங்களை வெளியுலகுக்கு எடுத்துக்காட்டியவர் மிராண்டா எனவும் அவர் தனது அஞ்சலியில் தெரிவித்துள்ளார்.

அவரது திறமைகளை பாராட்டும் வகையில் இந்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்மபூஷன் ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.