சூரியன் அஸ்தமிக்காத இடங்களில் ரமலான் நோன்பு வைப்பது எப்படி?

கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 18 ஆகஸ்ட், 2012 - 16:28 ஜிஎம்டி

புனித ரமலான் மாதம் நிறைவடைந்து ஈகைப் பெருநாளைக் கொண்டாட உலகெங்கிலும் முஸ்லிம் மக்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.

கடந்த ஒரு மாதமாக சூரியோதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை நீரும் உணவும் இல்லாமல் முஸ்லிம்கள் நோன்பிருந்தனர்.

வெயில் காலத்தில் பகல் பொழுது என்பது மிகவும் நீளமாக அமைந்திருக்கும் வடக்கத்திய நாடுகளில் முஸ்லிம்கள் நோன்பிருப்பதென்பது மிகவும் சிரமம்தான்.

நோன்பு நோற்கும் நேரங்கள் தொடர்பில் இஸ்லாம் என்ன சொல்கிறது?

லெஸ்டெர்ஷைர் மார்க்ஃபீல்ட் கல்விமைய அரபி நூலக அதிகாரி டாக்டர் ரஃபீக் நலிமி கருத்து

ரமலான் நோன்பு நோற்கும் நேரங்கள் - நிபுணர் கருத்து

நெடிய பகல் பொழுதுகளைக் கொண்ட இடங்களில் முஸ்லிம்கள் ரமலான் நோன்பு நோற்கும் நேரங்கள் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பது பற்றி லெஸ்டர்ஷைரின் மார்க்ஃபீல்ட் கல்வி மையத்தின் அரபி நூலக அதிகாரி டாக்டர் ரஃபீக் நலிமி தெரிவிக்கும் கருத்துகள்.

கேட்கmp3

இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.

மாற்று மீடியா வடிவில் இயக்க

20 மணி நேரத்தை தாண்டி சூரியன் வானில் தென்படும் இப்படியான இடங்களில் முஸ்லிம்கள் எவ்வாறு நோன்பு வைக்கிறார்கள்?

நள்ளிரவைத் தாண்டி சூரிய அஸ்தமனம்

ஃபின்லாந்தில் கோடைக்காலத்தில் நள்ளிரவிலும் சூரியன் வானில் தென்படும்.

ஃபின்லாந்தில் கோடைக்காலத்தில் நள்ளிரவிலும் சூரியன் வானில் தென்படும்.

ஃபின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கிக்கு 800 மைல் வடக்கிலிருக்கும் ரொவானியெமி நகரம் கடுமையான இயற்கைச் சூழல் கொண்ட ஒரு இடம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆர்க்டிக் வடதுருவ வட்டத்தை ஒட்டியிருக்கும் இந்த இடத்தில் குளிர் மிகவும் கடுமையாக இருக்கும்.

தவிர இங்கு குளிர்காலத்தில் சூரியன் சொற்ப நேரத்துக்குத்தான் வெளியில் தலைகாட்டும்.

அதுவே வெயில் காலம் என்றால் ஒரு நாளில் இருபது மணிநேரத்துக்கும் கூடுதலாக சூரியன் வானில் பிரகாசித்துக்கொண்டிருக்கும்.

முஸ்லிம்கள் நோன்பிருக்க வேண்டிய ரமலான் மாதத்தில் பகல் பொழுது மிகவும் நீளமாக இருப்பதென்பது இந்த ஊரில் வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு ஒரு பெரிய பிரச்சினைதான்.

இங்கு இரவு பனிரெண்டு மணி நெருக்கத்துக்குத்தான் அஸ்தமித்த சூரியன் பிறகு ஒரு சில மணி நேரங்களில் மீண்டும் உதயமாகிவிட்டிருந்தது.

இங்கு நோன்புப் பிடிக்கும் முஸ்லிம்கள் இந்த குறுகிய இரவுப் பொழுதில் மட்டுமே நீரருந்தவோ உணவு உண்ணவோ முடியும்.

இருவித சிந்தனை ஓட்டம்

ரொவானியெமி நகரில் வாழும் வங்கதேசப் பிரஜையான மியா மசூத், ஒரு நாளில் இருபது மணி நேரம் நோன்பு வைப்பதால் தான் மிகவும் சோந்துபோவதை ஒப்புக்கொள்கிறார். ஆனால் பசியையும் சோர்வையும் பொறுத்துக்கொண்டு நோன்பு வைப்பதிலும் ஒரு திருப்தி இருப்பதாக இவர் கூறுகிறார்.

ஆனால் இவ்வூரில் வாழும் நஃபீஸா யாஸ்மின் போன்றோர், மக்காவில் சூரிய உதயம் ஆகும் நேரத்தையும் சூரியன் அஸ்தமனம் ஆகும் நேரத்தையும் அடிப்படையாகக் கொண்டு நோன்பு வைக்கின்றனர்.

சொந்த ஊரான வங்கதேசத்தில் 12 மணிநேர பகல் 12 மணி நேரம் இரவு என்ற வழமைக்கு பழகிப்போய்விட்டு கோடைக்காலத்தில் கூடுதலான நேரம் நோன்பு நோற்பதை உடல் அனுமதிக்கவில்லையாதலால் மக்கா நேரத்தை தாங்கள் கடைப்பிடிப்பதாக நஃபீஸா கூறினார்.

இவ்விஷயத்தில் இரண்டு விதமான சிந்தனை ஓட்டம் உண்டு என இவ்வூர் பள்ளிவாசல் இமாமான டாக்டர் அப்துல் மன்னான் குறிப்பிட்டார்.

நோன்பு சமயத்தில் பகல் பொழுது 18 மணி நேரத்துக்கு கூடுதலாகப் போகும் பட்சத்தில், மக்கா-மதீனா நேரத்தைக் கொண்டோ அல்லது அருகிலுள்ள இஸ்லாமிய நாட்டின் நேரத்தைக் கொண்டோ நோன்பு நோற்க இடம் உண்டு என்று இவர் கூறுகிறார்.

பகல் எவ்வளவு அதிகமாக இருந்தாலும் சரி குறைவாக இருந்தாலும் சரி உள்ளூர் சூரியோதயம் சூரிய அஸ்தமனத்தின் அடிப்படையில்தான் நோன்பு நோற்க வேண்டும் என்ற கருத்தை சௌதியரேபிய இமாம்கள் வலியுறுத்துவதாக அவர் ஒப்புக்கொண்டார்.

BBC © 2014 வெளியார் இணையதளங்களில் இருக்கும் தகவல்களுக்கு பிபிசி பொறுப்பாகாது

(CSS) ஸ்டைல் ஷீட் வசதியுள்ள இணைய உலவிகளில்தான் இந்த பக்கத்தை ஒழுங்காகப் பார்க்க முடியும். தற்போது நீங்கள் வைத்துள்ள உலவியிலேயே இப்பக்கம் தெரியும் என்றாலும், இப்பக்கத்தின் முழுமையான காட்சி அனுபவத்தை நீங்கள் பெற இயலாது. உலவியின் புதிய பதிப்பு ஒன்றைப் பெறுவது பற்றி பரிசீலிக்கவும், அல்லது உங்கள் உலவியில் ஸ்டைல் ஷீட் வசதி இருந்தால், அது செயல்பட அனுமதிக்கவும்.