திரைக்கு வருவதற்கு முன்பாகவே இணையத்தில் கசிந்தது தெலுங்கு திரைப்படம்

தெலுங்குத் திரைப்படம் ஒன்று வெளியிடப்படுவதற்கு முன்பாகவே இணையத்தில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Image caption படத்தின் நாயகி சமந்தா டுவிட்டரில் வருத்தம் வெளியிட்டுள்ளார்

தெலுங்கு திரையுலகின் பிரபல நட்சத்திரங்களான பவன் கல்யாண் மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள 'அத்தரிந்திகி தாரெதி' என்ற திரைப்படம் அக்டோபர் 9ஆம் தேதி தசரா விடுமுறை சமயத்தில்தான் திரைக்கு வருவதாக இருந்தது.

ஆனால் இத்திரைப்படத்தின் முதல் பாதி இணையத்தில் கசிந்துவிட்டுள்ளபடியால், அப்படக் குழுவினர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பாதிப்பைத் குறைக்க வேண்டும் என்பதற்காக வரும் செப்டம்பர் 27ஆம் தேதியே படத்தை வெளியிட அவர்கள் முடிவுசெய்துள்ளனர்.

பெரிய பொருட்செலவிலும் ஏராளமானோரின் உழைப்பிலும் உருவாகியுள்ள இப்படத்தை திரையரங்கில் வந்து ரசிக்கும்படியும், இணையத்தில் இப்படத்தைக் காண்பிக்கும் தளங்கள் பற்றி திரைப்பட வர்த்தக சங்கத்திடம் புகார் தெரிவிக்கும்படியும் அத்தரிந்திகி தாரதி படத்தின் நாயகி சமந்தாவும் அப்படத்தின் தயாரிப்பாளரான பி வி எஸ் என் பிரசாத்தும் சமூக வலைத்தளங்களில் மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

திரைப்படங்களை படங்களை வெளிநாடுகளில் வெளியிடுவதற்காக அப்படத்தின் டிஜிட்டல் நகலை வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு முன்கூட்டியே வழங்குவதும், திரையரங்குகளில் மட்டுமல்லாமல் டிவிடி வடிவிலும் வெளியிட வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு உரிமை வழங்குவதும்தான் இவ்வாறாக படங்கள் இணையத்தில் கசிய நேர்வதன் காரணம் என தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அபிராமி ராமநாதன் பிபிசியிடம் கூறினார்.

சில வருடங்களுக்கு முன்னர் சரத் குமாரின் ஜக்குபாய் என்ற தமிழ்த் திரைப்படமும் இதேபோல வெளியிடப்படுவதற்கு முன்பாகவே இணையத்தில் கசிந்திருந்தது என்பதும், பின்னர் திரையரங்குகளில் வெளியான அப்படம் சரிவர ஓடியிருக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.