ஸ்பானிய இலக்கிய ஜாம்பவான் மார்க்வெஸ் உடல் நலம் பாதிப்பு

படத்தின் காப்புரிமை AFP
Image caption க்யூபத் தலைவர் பிடல் காஸ்ட்ரோவுடன், எழுத்தாளர் மார்க்வெஸ் ( 2000ம் ஆண்டு படம்)

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர் , கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் உடல் நலக்குறைவால் மெக்சிகோ மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

நுரையீரல் மற்றும் சிறுநீர்ப் பாதையில் ஏற்பட்ட தொற்றுக்காக, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

மார்க்வெஸுக்கு வயது 87.

"லவ் இன் தெ டைம் ஆப் காலரா" ( காலரா கண்ட காலத்தில் காதல்) , "ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஆப் சாலிட்டியூட்" ( நூறாண்டு காலத் தனிமை) போன்ற புகழ் பெற்ற இலக்கியங்களை எழுதிய மார்க்வெஸ், ஸ்பானிய மொழியில் எழுதிய மிகப் பெரும் எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

அவரது புத்தகங்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான பிரதிகள் உலகெங்கும் விற்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், அவரது இளைய சகோதரர், மார்க்வெஸ் டிமென்ஷியா, ( மூளை பாதிப்பு) நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும், எழுதுவதை அவர் நிறுத்திவிட்டார் என்றும் கூறியிருந்தார்.