புகழ் பெற்ற எழுத்தாளர் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் காலமானார்

படத்தின் காப்புரிமை AFP
Image caption காலமானார் கேப்ரியல் கார்சியியா மார்க்வெஸ்

புகழ் பெற்ற கொலம்பிய எழுத்தாளரும், இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றவருமான, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் , காலமானார்.

அவர் மெக்சிகோ சிட்டியில் உள்ள அவரது சொந்த வீட்டில் இறந்தார் என்று அவரது குடும்ப உறுப்பினர்கள் கொலம்பிய ஊடகங்களுக்குத் தெரிவித்தனர்.

அவருக்கு வயது 87.

ஸ்பானிய மொழியில் எழுதிய நாவலாசிரியர்களில் புகழ்பெற்ற மிகப்பெரும் எழுத்தாளர்களில் ஒருவர் என்று கருதப்படும் கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ், "நூறாண்டு காலத் தனிமை" ( ஒன் ஹண்ட்ரட் இயர்ஸ் ஒப் சாலிட்டியூட்) என்ற மாஜிக்கல் ரியலிச பாணி புதினத்தால் உலகப் புகழ் பெற்றவர்.

1967ல் எழுதப்பட்ட இந்தப் புதினம் உலகெங்கும் 3 கோடி பிரதிகளுக்கு மேல் விற்றது. 1982ல் அவர் நோபல் பரிசைப் பெற்றார்.

சமீபத்தில் அவர் நுரையீரல் மற்றும் சிறுநீரகப் பாதையில் ஏற்பட்ட தொற்றுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

அவர் மெக்சிகோவில் 30 ஆண்டுகளுக்கும் மேலான காலம் வாழ்ந்தார். ஆனால் சமீப ஆண்டுகளாக அவர் பொது மேடைகளிலும் நிகழ்ச்சிகளிலும் தோன்றுவதைப் பொதுவாகத் தவிர்த்து வந்தார்.

"காலரா காலத்தில் காதல்" ( லவ் இன் டைம்ஸ் ஒப் காலரா) " ஒரு மரணத்தைப் பற்றி முன்கூட்டியே சொல்லப்பட்ட கதை" (க்ரோனிக்கில் ஒப் எ டெத் போர்டோல்ட்") மற்றும் "சந்து பொந்துகளில் சிக்கிய ஜெனரல்" ( தெ ஜெனெரல் இன் ஹிஸ் லேபிரிந்த்") ஆகியவை அவர் எழுதிய நூல்களில் மற்றவையாகும்.

இறுதிச்சடங்கு, அஞ்சலிகள்

அவரது உடல் இன்னும் சில மணி நேரங்களில் ஒரு தனிப்பட்ட சடங்கு ஒன்றில் தகனம் செய்யப்படும் என்று அவரது குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர்.

திங்கட்கிழமை அவருக்கு ஒரு நினைவஞ்சலிக் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது.

கொலம்பிய அதிபர் யுவான் மானுவெல் சாண்டோஸ் ,கார்சியா மார்க்வெஸின் மரணம் தனது நாட்டுக்கு " ஒரு ஆயிரம் ஆண்டு தனிமையையும் சோகத்தையும்" தந்திருப்பதாகக் கூறினார்.

அமெரிக்க அதிபர் ஒபாமா விடுத்த இரங்கல் செய்தியில், மார்க்வெஸ் தனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் என்றார்.

மார்க்வெஸ் நெடுங்காலமாக சண்டையிட்டுக்கொண்டிருந்த பெரு நாட்டைச் சேர்ந்த மற்றொரு நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான மாரியோ வர்காஸ் லோசா, அவரை ஒரு மாபெரும் எழுத்தாளர் என்றும், அவரது புதினங்கள் என்றென்றும் வாழும் என்றும் கூறினார்.

ஆங்கில நாவலாசிரியரும், திரைப்பட கதை வசனகர்த்தாவுமான இயான் மக் இவான் பிபிசியிடம் பேசுகையில், மார்க்வெஸின் இலக்கிய வாழ்க்கை அசாதாரணத் தன்மை வாய்ந்தது என்றார்