ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தீபிகா உடை குறித்துப் பேச ஊடகங்கள் யார்?: குஷ்பு

படத்தின் காப்புரிமை AFP
Image caption நடிகை தீபிகா படுகோனே

பிரபல இந்திய நடிகை தீபிகா பாதுகோன் தனது கவர்ச்சியான தோற்றத்தை அளவுக்கு அதிகமாக வெளிகாட்டும் விதமான புகைப்படத்தை வெளியிட்டு அதை கேள்விக்குள்ளாக்கும் விதமாக இந்திய தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அந்த செய்தியையும் அதை வெளியிட்ட செய்தித்தாளையும் தீபிகா பாதுகோன் கடுமையாக விமர்சித்திருந்தார். அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருக்கும் நடிகை குஷ்பு, தீபிகா படுகோனே உடைகுறித்தோ அவர் உடை உடுத்திய விதம் குறித்தோ கேள்வி எழுப்ப ஊடகங்களுக்கு எந்த தகுதியும் இல்லை என்றும் எந்த உரிமையும் இல்லை என்றும் கூறினார்.

ஞாயிறன்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ என்ற பத்திரிக்கை தனது இணைய தளத்தில் தீபிகா பாதுகோன் கவர்ச்சி அதிக அளவு வெளிக்காட்டும் ஒரு உடையை அணிந்திருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.

அதனை அந்த பத்திரிக்கையின் ட்விட்டர் தளத்திலும் அந்த பத்திரிக்கை பகிர்ந்திருந்தது.

இதற்கு கோபமாக பதிலளித்த நடிகை தீபிகா பாதுகோன், தான் ஒரு பெண் என்பதால் தனக்கு அவ்வாறு ஒரு உடல் அமைப்பு இருப்பதாகவும், அது தொடர்பில் அந்த பத்திரிக்கைக்கு என்ன பிரச்சனை என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த அந்த பத்திரிக்கை, அது தீபிகாவிற்கு அளிக்கப்பட்ட பாராட்டாக அவரை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தியிருந்தது.

எனினும் அந்த புகைப்படத்தையும், அந்த ட்வீட்டையும் அந்த பத்திரிக்கை உடனடியாக அகற்றிவிட்டது. கடந்த ஆண்டு நடந்த ஒரு திரைப்பட வெளியீட்டு விழாவிற்கு தீபிகா அணிந்திருந்த ஆடையின் புகைப்படம் அது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் முன்னணி பத்திரிகையாக கூறப்படும் பத்திரிக்கை வெளியிட்டிருக்கும் இந்த தகவல் ஒரு செய்தியா என்று தீபிகா தனது ட்விட்டர் கணக்கில் கோபத்தை வெளிப்படுத்தினார். அத்துடன் பெண்களுக்கு மரியாதை அளிக்க தெரியாத பட்சத்தில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து நீங்கள் பேசக்கூடாது என்றும் அந்த நடிகை தெரிவித்திருந்தார்.

பல பாலிவுட் பிரபலங்களும் நூற்றுக்கணக்கான ரசிகர்களும் நடிகை தீபிகாவுக்கு ஆதரவு அளித்து ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தனர்.

இந்த சர்ச்சை தொடர்பில் பிபிசி தமிழோசையிடம் கருத்து தெரிவித்துள்ள தமிழ் நடிகை குஷ்பு, இந்தியாவில் தீர்க்கப்படாத எத்தனையோ பிரச்சனைகள் இருக்கும் போது ஏன் தீபிகா பாதுகோன் ஒரு வருடத்திற்கு முன்னர் அணிந்த ஆடை குறித்து செய்திகள் வெளியிடப்படுகின்றன என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தீபிகா உடையணிந்த விதம் குறித்து விவாதிக்கும் அளவுக்கு இந்தியாவில் ஆட்கள் வேலையில்லாமல் இருக்கிறார்களா என்றும் கேள்வி எழுப்பினார். பிபிசி தமிழோசைக்கு குஷ்பு அளித்த பேட்டியின் ஒலி வடிவத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.