பூமணியின் அஞ்ஞாடி நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது

  • 19 டிசம்பர் 2014

இந்த ஆண்டின் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பூமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது அஞ்ஞாடி நாவலுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

Image caption ஆயிரம் பக்கங்களுக்கு மேல் கொண்ட அஞ்ஞாடி நாவ்லுக்கு விருது

தற்போது பரிசுபெற்றிருக்கும் அஞ்ஞாடி, க்ரியா பதிப்பகத்தால் 2012ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

கரிசல்காட்டின் நூற்றி ஐம்பது ஆண்டு கால வரலாற்றை பின்னணியாகக் கொண்ட இந்த நாவலுக்காக 8 ஆண்டுகளுக்கும் மேலாக பூமணி ஆய்வுமேற்கொண்டார். கலைகளுக்கான இந்திய அறக்கட்டளை இந்த ஆய்வுக்காக கணிசமான தொகையை 2004ஆம் ஆண்டில் மானியமாக அளித்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் 1947ல் பிறந்த பூமணியின் இயற்பெயர் பூ. மாணிக்கவாசகம்.

கரிசல்காடு என்று அழைக்கப்படும் கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதியின் வாழ்க்கையை குறிப்பாக அப்பகுதியின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை தன் படைப்புகளின் பின்னணியாகக் கொண்டிருந்தார் பூமணி.

இவரது முதல் நாவலான பிறகு வெளிவந்தபோது, இலக்கிய உலகில் பெரும் பரபரப்பையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

பூமணி இதுவரை வெக்கை, பிறகு, வரப்புகள், வாய்க்கால், நைவேத்தியம், அஞ்ஞாடி உள்ளிட்ட நாவல்களையும் வயிறுகள், ரீதி, நொறுங்கல்கள் உள்ளிட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் வெளியிட்டிருக்கிறார்.

இவ்வளவு விரிவான ஆய்வில் அடிப்படையில் தமிழில் இதுவரை வேறு எந்த நாவலும் வரவில்லை என்கிறார் இதனை வெளியிட்ட க்ரியா பதிப்பகத்தின் பதிப்பாளர் எஸ் ராமகிருஷ்ணன்.

பரிசை வென்றிருக்கும் இந்த நாவலில் 1880களில் தமிழகத்தை உலுக்கிய தாது வருஷப் பஞ்சமும் தமிழகத்தில் அந்த காலகட்டத்தில் நிகழ்ந்த இரண்டு பெரும் ஜாதிக் கலவரங்களும் மிகச் சிறப்பாக பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

அடித்தட்டு மக்கள்தான் தன் படைப்புகளின் அடிநாதமாக இருக்கிறார்கள் என்கிறார் விருதை வென்றிருக்கும் பூமணி. ஆய்வுகளின் அடிப்படையில் படைப்புகளை உருவாக்க வேண்டும் என்ற போக்கு தமிழில் இல்லை என்ற கருத்தையும் முன்வைக்கிறார் அவர்.

தமிழ் இலக்கியத்தில் மனம் சார்ந்தே படைப்புகள் வெளிவந்துகொண்டிருந்த நிலம் சார்ந்து படைப்புகளை முதன் முதலில் முன்வைத்த எழுத்தாளர் பூமணிதான் என்கிறார் கவிஞரும் விமர்சகருமான எழுத்தாளர் சுகுமாரன்.

தற்போது கோவில்பட்டியில் வசித்துவரும் பூமணி, கருவேலம்பூக்கள் என்ற திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். இவருடைய வெக்கை நாவல் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

புவியரசு, சிவசங்கரி, ஈரோடு தமிழன்பன் ஆகியரைக் கொண்ட நடுவர் குழு பூமணியைத் தேர்வுசெய்த்து. இந்த விருது, மார்ச் 9ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.