மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கே பாலச்சந்தர் : படைப்பும், ஆளுமையும்-ஒலி வடிவில்

தமிழ்த் திரையுலகில் பல நாயக நாயகிகளை உருவாக்கிய கே பாலச்சந்தர் கடைசியாக உத்தமவில்லன் எனும் படத்துடன் உலகிலிருந்து விடைபெற்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை nikil murugan
Image caption பூவுலகிலிருந்து விடைபெற்றுள்ளார் 'இயக்குநர் சிகரம்' கே பி எனப்படும் கே பாலச்சந்தர்.

தமிழ்த் திரையுலகில் பல புதுமைகள், மாறுதல்கள், அறிமுகங்கள், தயாரிப்புகள், விருதுகள் என அவரது பங்களிப்பு நீண்டுகொண்டே போகும்.

திரையுலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பங்காற்றிவந்த அவரது வாழ்வு இன்றைய(24.12.14) தகனத்துடன் முடிவுக்கு வந்துள்ளது.

வசனகர்த்தாவாக தொடங்கினார்

மறைந்த கே பி யின் திரைவாழ்க்கை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் திரைப்படத்தில் வசனகர்த்தாவாகத் தொடங்கியது.

திரையுலகில் பலர் வாழ்வதும், வீழ்வதும், பின்னர் மீண்டு வருவதும் புதிதல்ல என்பதற்கு பாலசந்தரும் விதிவிலக்கல்ல. 44 ஆண்டுகளுக்கு முன்னர் இதயத்தில் ஏற்பட்ட பெரியப் பிரச்சினையிலிருந்து அவர் வெளிவந்து பல வெற்றி படங்களை அளித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் 'இயக்குனர் சிகரம்' என்று புகழப்படும் கே.பாலச்சந்தர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்தியாவில் திரைப்படத்துறைக்கான மிக உயர்ந்த விருதான தாதே சாஹிப் பால்கே விருது உட்பட ஏராளாமான விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் நாடக எழுத்தாளர் இயக்குநராக இருந்த பாலசந்தரின் ஆரம்பகாலப் படங்கள், அப்படியே அவரது நாடங்கள் திரைவடிவம் பெற்றவை போல அமைந்தன.

குறைவான செலவில் நிறைவானப் படத்தை கொடுக்கும் ஒரு படைப்பாளி என்று திரையுலகம் அவரை பாராட்டியது. நீர்க்குழிமி, பாமாவிஜயம், எதிர்நீச்சல் போன்ற பல படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

எந்தக் கலைஞரிடம் என்ன திறமை ஒளிந்துள்ளது அதை எப்படி சினிமாச் சூழலுக்கு ஏற்ப வெளிக் கொண்டுவரலாம் எனும் கலையை அவர் மிகச் சிறப்பாகக் கையாண்டார்.

காலஞ்சென்ற நடிகர்கள் நாகேஷ், முத்துராமன், மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் ஸ்ரீகாந்த் உட்பட பலரை இதற்கு மேற்கோள் காட்டலாம்.

இந்தியத் திரையுலகில் வண்ணப் படங்கள் ஆழக்காலூன்றிய பிறகும் கூட கருப்பு வெள்ளைப் படங்களில் படங்களை எடுக்கும் துணிச்சல் பாலச்சந்தர் போன்ற ஒருசிலருக்கு மட்டுமே இருந்தது. அவ்வகையில் கமல்ஹாசன் சரிதா நடித்து அவர் தெலுங்கில் இயக்கிய மரோ சரித்ரா பெரும் வெற்றியை பெற்றது.

திரைப்படத்துறையில் பல வகையில் ஆளுமை செலுத்திய அவர் பலரது வாழ்க்கையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். பலர் அவரை ஒரு குரு எனும் நிலைக்கு மேலாகவும் வைத்து இன்றளவும் போற்றி வருகின்றனர்.

அழுத்தமான கதையை மட்டும் நம்பியே இவரது படைப்புகள் படைக்கப்பட்டதால், பெரும்பாலும் புகழ் பெற்ற நடிகர்களை இவர் அவரது படங்களில் தேர்வு செய்தது இல்லை.

குறிப்பாக இவர் இயக்கிய எந்த படத்திலும் நடிகர் எம்.ஜி.ஆர். நடித்ததில்லை அதேபோல் நடிகர் சிவாஜியும் கூட ஒரே ஒரு படத்தில் மட்டும் தான் நடித்திருந்தார்.

பாலச்சந்தர் எழுதிய கதையில் உருவான திரைப்படமான சர்வர் சுந்தரம் தான் நடிகர் நாகேஷை புகழின் உச்சத்திற்கே அழைத்து சென்றது.

பல பரிமாணங்கள்

படத்தின் காப்புரிமை nikkil murugan
Image caption அவரது வசனங்கள் வலிமையாக இருந்துள்ளன

நகைச்சுவைக்கான முக்கியத்துவத்தை தனது படங்களில் சிறப்பாக கையாண்ட பாலச்சந்தர், குடும்பச் சச்சரவுகள், உறவுகளின் உரசல்கள், சமுக பிரச்சனைகள் என்று பல்வேறு தரப்பட்ட தனித்துவ கதைகளை துணிச்சலான வகையில் எடுக்கத் தயங்கவில்லை.

திரைப்பட இயக்குனராக வெற்றி பின்பும் கூட தொலைக்காட்சி நாடகங்களை இயக்கியுள்ளார். சின்னத்திரைகளில் தற்போது பிரபலாமாக இல்ல நீண்ட நாட்களுக்கு ஒளிப்பரப்பாகும் நெடுந்தொடர் என்னும் முறையையும் இவர் தான் அறிமுகம் செய்தார்.

எல்லாருக்கும் ஈடேறாத கனவுகள் உள்ளது போல பாலச்சந்தருக்கும் கமல், ரஜினி இருவரையும் வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற கனவு நிறைவேறமலேயே போனது.