பிரபல திரைத் தயாரிப்பாளர் ரமா நாயுடு காலமானார்

  • 18 பிப்ரவரி 2015
Image caption திரைப்படத் தயாரிப்பாளர் ரமா நாயுடு ( மத்தியில் இருப்பவர்) காலமானார்

பிரபல இந்திய திரைப்படத் தயாரிப்பாளர் டி.ராமா நாயுடு இன்று புதன்கிழமை காலமானார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர், உடல்நலக் குறைவு காரணமாக இறந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 79.

இவரது வாரிசான டி.வெங்கடேஷ் ஒரு நடிகர், அதைப்போல் இவரது பேரனான ரானாவும் ஒரு நடிகர். இவரது மற்றொரு மகனான சுரேஷ் பெயரில் தான் இவரது தயாரிப்பு நிறுவனம் செயல்ப்பட்டு வந்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் எண்ணற்ற படங்களை இவர் தயாரித்திருந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை தெலுங்கு மொழி படங்கள்தான்.

ஐந்து தசாப்தங்களையும் தாண்டியுள்ள இவரது திரை வாழ்க்கையில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா நடித்த திருமாங்கல்யம், சிவாஜிகணேசன் நடிப்பில் வெளியாகிய வசந்த மாளிகை, ரஜினி நடித்த தனிக் காட்டு ராஜா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களையும் இவர் தயாரித்துள்ளார்.

இவர் தயாரித்த திரைப்படங்களில் தான் பல இந்தியத் திரைப் பிரபலங்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திரையுலகினருக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது மற்றும் பத்மபூஷன் விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். அதைப்போல் இவர் தயாரித்த பல திரைப்படங்களும் தேசிய விருதுகளையும், மாநில அரசு விருதுகளையும் குவித்துள்ளன.

பல சமுதாய நலப்பணிகளை மேற்கொண்ட இவர், தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுப்பட்டார். அப்போது 1999-2004 ஆம் ஆண்டுகளின் காலக்கட்டத்திற்கான, குண்டூர் மாவட்ட பாபட்ல மக்களவை தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

இவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இவருக்கு நாளை வியாழக்கிழமை இறுதி சடங்குகள் நிறைவேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.