ஜெர்மன் நாவலாசிரியர் குந்தர் கிராஸ் காலமானார்

பிரசித்தி பெற்ற ஜெர்மானிய நாவலாசிரியர் குந்தர் கிராஸ் காலமானார்.

Image caption குந்தர் கிராஸ்

அவருக்கு வயது 87.

"டின் ட்ரம்" , "கேட் அண்ட் மவுஸ்" போன்ற புகழ்பெற்ற நாவல்களை எழுதிய அவருக்கு 1999ல் நோபல் பரிசு கிடைத்தது.

அவரது முதல் நாவலான " டின் ட்ரம்" மூலம் அவர் சர்வதேச பிரசித்தி பெற்றார். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தய ஜெர்மனியின் "தார்மீக மனசாட்சி" என்று கருதப்பட்ட அவர் 2006ம் ஆண்டில், தான் தனது 17வது வயதில் நாஜிக்களின் ராணுவப்பிரிவான, 'வாஃபன் எஸ்.எஸ்"சில் தானாக சுயவிருப்பத்தின் அடிப்படையில் சேர்ந்ததாக அறிவித்ததை அடுத்து, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஆனால் அவர் ஏதும் போர்க்குற்றங்கள் இழைத்திருந்ததாகக் குறிப்பிடவில்லை என்றாலும், 60 ஆண்டுகள் அவர் இந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் மௌனம் சாதித்தது ஒரு மோசமான போலித்தனமாக சிலரால் கருதப்பட்டது.

தன்னைச் சுற்றி வாழ்ந்தவர்களிடம் அவர்களது கடந்த காலங்களைப் பற்றி வெளிப்படையாகக் கூறுமாறு அவர் தனது வாழ்நாள் முழுதும் வற்புறுத்தி வந்திருந்தார்.

பொட்டஷ் சுரங்கத் தொழிலாளியாக வேலை பார்த்த போது, எழுதத்தொடங்கிய குந்தர் கிராஸ், போருக்குப் பின்னர், நினைவிடங்களைக் கட்டும் கொத்தனாராகப் பணியாற்றினார்.

அவரது முதல் நாவலான "டின் ட்ரம்", நாஜி இயக்கத்தின் எழுச்சியையும், வீழ்ச்சியையும் பற்றி கடுமையாக விமர்சித்த ஒரு நாவல். இது இவரை ஒரு சர்வதேசப் புள்ளியாக மாற்றியது.

அவரது பிந்தைய நாள் படைப்புகளும் அதைப்போலவே சிறப்பான வரவேற்பைப் பெற்றன.

சிலர் அவரை ஒரு கோழை என்று கருதினாலும், பலர் அவரை நோபல் பரிசு பெறத்தகுதியான ஒரு பெரிய எழுத்தாளராகவே நினைவு கூர்கின்றனர்.