ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எம்எஸ்வி: மனதை வருடிய மெல்லிசை மன்னன்

தமிழ்த் திரைப்படத் துறையின் மெல்லிசை மன்னர் என்று போற்றப்பட்டவரும் எம்.எஸ்.வி. என்று சுருக்கமாக அழைக்கப்பட்டவருமான மனயங்கத் சுப்பிரமணியன் விசுவநாதன் இன்று செவ்வாயன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.

ஜூன் மாதம் 24ஆம் தேதியன்று தனது பிறந்தநாளை கொண்டாடிய அவர், மூச்சுத் திணறல் ஏற்பட்ட காரணத்தால் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அவர் மறைந்தார்.

மறைந்த எம்.எஸ். விஸ்வநாதனுக்கு நாளை புதன்கிழமை சென்னையில் இறுதி சடங்குகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாளைய தினம் தமிழ்த் திரையுலகின் அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விஸ்வநாதன் - ராமமூர்த்தி என்கிற பெயரில் இரட்டையர்களாக இவர் இசை அமைத்தத் திரைப்படங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 700 என கணக்கிடப்பட்டுள்ளது. ராமமூர்த்தியிடமிருந்து பிரிந்து எம்.எஸ்.விஸ்வநாதன் மட்டுமே தனியாக 500 படங்கள் வரை இசையமைத்துள்ளார். 'நீராரும் கடலுடுத்த' என்கிற தமிழ்த்தாய் வாழ்த்துக்கும் இசை அமைத்தவர் விஸ்வநாதன்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், 1945 ஆம் ஆண்டு திரைப்பட இசைத்துறைக்கு அறிமுகமானார். இவர் இசையமைத்த பெரும்பாலான தமிழ்த் திரைப்படப் பாடல்கள், கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டவை.

1928ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதியன்று பிறந்த எம்.எஸ்.வி. தனது முதல் இசை மேடை நிகழ்ச்சியை 13 வயதில் அரங்கேற்றியவர். இவர் தனது இசையமைப்பில் எண்ணற்ற பாடல்களை பாடியது போல, மற்ற இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், கங்கை அமரன், தேவா, யுவன் சங்கர் ராஜா மற்றும் ஜி.வி.பிரகாஷ் போன்றவர்களது இசையிலும் திரைப்படப் பாடல்களை பாடியுள்ளார்.

காதல் மன்னன், காதலா காதலா போன்ற தமிழ் திரைப்படங்களிலும் விஸ்வநாதன் நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளராக, பாடகராக, நடிகராக திரையுலகில் வலம்வந்த இவரது மறைவுக்கு, எண்ணற்ற பிரபல திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

விஸ்வநாதனுக்கு அளிக்கப்பட்டிருக்கவேண்டிய் தேசிய அங்கீகாரங்கள் பல மறுக்கப்பட்டதாக அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இன்றளவும் வருத்தம் நிலவுகிறது.

இன்று விஸ்வநாதனுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திரைப்படத்தயாரிப்பாளர் ஏ.வி.எம்.சரவணன், பலமுறை விஸ்வநாதனுக்கு பத்ம விருதுகளுக்கான பரிந்துரை அளிக்கப்பட்டபோதும், அது அவருக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.