தென் கொரிய எழுத்தாளருக்கு மான் புக்கர் விருது

இலக்கிய உலகின் முன்னணி பரிசுகளில் ஒன்றான மான் புக்கர் சர்வதேச விருதை தென் கொரிய எழுத்தாளர் ஒருவர் வென்றுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty
Image caption பரிசை வென்றுள்ள நாவலாசிரியர் ஹான் காங், தனது புத்தகத்தில் கையெழுத்திடுகிறார்.

'தி வெஜிடேரியன்' எனும் புதினத்துக்காக ஹான் காங் அம்மையாருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

அந்தப் புதினம் "மறக்கமுடியாத அளவுக்கு ஆழமாகவும் தூய்மையாகவும்" உள்ளது என பரிசுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சராசரி கொரிய மனைவி ஒருவர் சைவ உணவுக்கு மாறுவதை அடிப்படையாகக் கொண்ட அந்தப் புதினத்தில், மரபுரீதியாக வீடு, குடும்பம் மற்றும் சமூகத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ள கொரியப் பெண், அந்த மரபுகளை எப்படி எதிர்த்து போராடுகிறாள் என்பதை கூறுகிறது.

புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்ட அந்தப் புதினம் பிரபல துருக்கிய எழுத்தாளர் ஓர்ஹான் பமுக் மற்றும் அங்கோலாவைச் சேர்ந்த ஹோஸே எடுவார்டோ அகுவலூசா ஆகியோரின் படைப்புகளுடன் போட்டியிட்டது.

ஹான் அம்மையார் 70,000 டாலருக்கும் அதிகமான இந்தப் பரிசுத் தொகையை, மொழிபெயர்ப்பாளர் டெபோரா ஸ்மித் அவர்களுடன் பகிர்ந்துகொள்வார்.