இலங்கை: மட்டக்களப்பு வைத்தியசாலை ஊழியர்கள் நியமனத்தில் சர்ச்சை

  • 3 ஜூலை 2016

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் சிற்றூழியர் வெற்றிடங்கள், பிற மாவட்டத்திலுள்ள பெரும்பான்மை இனத்தவர்களினால் நிரப்பப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் இந்த செயல்பாடு பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்கின்றார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா.துரைரெத்தினம்.

மத்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு உட்பட்ட மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 150ற்கும் மேற்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில் 125 சிங்களவர்கள் பிற மாவட்டங்களிலிருந்து இடமாற்றம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரான இரா. துரைரெத்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதமொன்றில் இது தொடர்பாக கவனம் செலுத்துமாறு கேட்டுள்ளார்.

இடமாற்றம் பெற்றுள்ள சிற்றூழியர்கள் பெரும்பான்மை இனத்தவர்களாக காணப்படுவதால் மொழிரீதியான பிரச்சினைகள் குறிப்பாக நோயாளர்களும், பொது மக்களும் எதிர் கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அந்த கடித்தில் அவரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் காணப்படும் வெற்றிடங்களுக்கு தமிழர்களை நியமிப்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் அவர் வலியுறுத்தி கேட்டுள்ளார்.