அமெரிக்க டாலர் ஏன் சரிகிறது?

  • 13 ஆகஸ்ட் 2017

அமெரிக்காவின் பொருளாதார வலிமையின் சின்னமாகத் திகழும், அதன் நாணயமான டாலரின் மதிப்பு சமீபத்தில் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டபோது, டாலரும் வலிமை அடைந்தது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 100 அமெரிக்க டாலர்

டாலரின் மதிப்பை அளவிடும் டாலர் இன்டெக்ஸ் (Dollar Index) கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விடவும் குறைவாக உள்ளது. கடந்த வெள்ளியன்று டாலர் இன்டெக்ஸ் 92.863 என்ற அளவில் குறைவாக இருந்தது. இந்தச் சரிவுக்கான காரணங்கள் இதோ.

வலுவடையும் யூரோ, வலுவிழக்கும் டாலர்

அமெரிக்கா தன் பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்க அளித்து வந்த சலுகைகளை நிறுத்திய பின்னரும், ஐரோப்பிய மத்திய வங்கி அதைத் தொடர்ந்தது. அதனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் நாணயமான யூரோ சரிந்தது. தற்போது ஐரோப்பிய மத்திய வங்கியும் அவற்றை நிறுத்தத் திட்டமிடுவதால், யூரோவின் மதிப்பு அதிகரித்து, அது டாலரின் வீழ்ச்சிக்கு வழிவகுக்கிறது. தற்போது ஒரு யூரோவின் மதிப்பு 1.17 டாலரை விடவும் அதிகமாக உள்ளது.

Image caption டாலர் இன்டெக்ஸ்

யூரோ தவிர ஜப்பானின் யென், மெக்சிகோவின் பெசோ, ஸ்வீடனின் க்ரோனா ஆகிய நாணயங்களுக்கு எதிரான டாலரின் மதிப்பும் சரிந்து வருகிறது. பிரெக்ஸிட்டுக்குப் பிறகு வீழ்ச்சியைச் சந்தித்த பவுண்டு ஸ்டெர்லிங்கின் மதிப்பும் தற்போது வலுவடைந்து வருகிறது.

எதிர்பார்க்க வைத்து ஏமாற்றிய டிரம்ப்

2016-ன் இறுதியில் டொனல்டு டிரம்ப் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, வரி குறைப்பு, உள்கட்டமைப்புக்காக அதிக முதலீடு ஆகிய எதிர்பார்ப்புகளால் டாலரின் மதிப்பு அதிகரித்தது. ஆனால் பதவியேற்றபின் அவர் பொருளாதாரதிற்காக பெரிதாக எதுவும் செய்யாததால் அந்த வளர்ச்சி நின்றுவிட்டது.

அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு குறித்த விசாரணை, வட கொரியாவுடன் ஏற்பட்டுள்ள மோதல் ஆகியவை அரசியல் நிலையின்மையை ஏற்படுத்தியுள்ளதால், அது முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் குறைத்துள்ளது.

ஏறிக்கொண்டே போகும் மத்திய வங்கியின் வட்டி விகிதம்

டிசம்பர் 2015-க்குப் பிறகு அமெரிக்க மத்திய வங்கி ஐந்து முறை வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது. வரும் டிசம்பரில் மேலும் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "எதிர்பார்த்த அளவுக்கு அமெரிக்கப் பொருளாதாரம் வளரவில்லை என்பதையே இது காட்டுகிறது," என்கிறார் ஹார்வர்ட் பேராசிரியர் ஜெஃப்பிரி ஃபிரீடன்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஜேனட் எல்லன். (வலது)

சமீபத்திய மாதங்களில் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் வளர்ச்சி உள்ள போதிலும், அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசெர்வின் தலைவர் ஜேனட் எல்லனின் பதவிக்காலம் அடுத்த பிப்ரவரி மாதம் முடிகிறது. டிரம்ப் தேர்வு செய்யப்போகும் அடுத்த தலைவர் யார் என்பது குறித்த நிச்சயமற்ற சூழலும், டாலரின் சரிவுக்கு ஒரு முக்கிய காரணியாக உள்ளது.

வலுவான டாலர் வேண்டாம்: டிரம்ப்

டாலர் வலுவற்று இருப்பதையே தாம் விரும்புவதாக டிரம்ப் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். "கேட்க நன்றாக இருந்தாலும் டாலர் வலிமையாக இருந்தால் பல கெட்ட விடயங்களும் நடக்கும்," என்றார் அவர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption டொனல்டு டிரம்ப்

வெளிநாடுகளில் அதிகம் வாங்கும் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இது உவப்பானதல்ல. வலுவற்ற டாலர் என்றால், அவர்கள் பொருட்களை வாங்க இன்னும் கூடுதலாக செலவு செய்ய வேண்டியிருக்கும்.

ஆனால், தொழில்துறைக்கு ஆதரவான டிரம்ப் நிர்வாகம், டாலர் வலுவிழந்தால் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க விரும்புகிறது. டாலர் மதிப்பு குறைவாக இருந்தால், சர்வதேச அளவில் பிற நாடுகள் அமெரிக்காவில் இருந்து நிறைய இறக்குமதி செய்யும் என்று நம்புகிறது.

என்ன தீர்வு?

விலை உயர்ந்த வெளிநாட்டுப் பொருட்களின் வரத்து அதிகரித்து, அமெரிக்காவின் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை அதிகரித்தால், மத்திய வங்கியும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும். அத்தகைய நடவடிக்கை டாலரின் மதிப்பை அதிகரிக்கவே செய்யும் என்றே கணிக்கப்படுகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :