பெரும் வீழ்ச்சிக்கு பின்னர் அமெரிக்க பங்குகள் மீண்டன

  • 6 பிப்ரவரி 2018
அமெரிக்க பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி: இந்தியாவிலும் எதிரொலிக்குமா? படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவில் திங்கள் கிழமையன்று பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்த நிலையில் செவ்வாய் கிழமையும் 2% வீழ்ச்சியில் சந்தை துவங்கியது. எனினும் அதில் இருந்து மீண்டு நேர்மறை புள்ளிகளோடு சந்தை இயங்கிவருகிறது.

திங்களன்று அமெரிக்காவில் சந்தை வீழ்ச்சியை சந்தித்தது ஆசியா மற்றும் ஐரோப்பா பங்கு வர்த்தகத்திலும் எதிரொலித்தது.

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் என்ற செய்தி பரவியதன் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியைஅமெரிக்க பங்குச்சந்தைகள் சந்தித்துள்ளன.

அமெரிக்க தொழிற்துறை குறியீடான டவ் ஜோன்ஸின் மதிப்பு திங்கள் கிழமையன்று 1,175 புள்ளிகள் அல்லது 4.6 சதவீத வீழ்ச்சியை கண்டு 24,345.75 புள்ளிகளில் முடிந்துள்ளது.

"மிகவும் வலுவான நிலையிலுள்ள நீண்டகால பொருளாதார அடிப்படைகளில்" கவனம் செலுத்துவதாக முதலீட்டாளர்களுக்கு வெள்ளைமாளிகை உறுதியளித்துள்ளது.

பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான அறிகுறி தென்பட்டதால் சமீபத்திய மாதங்களாக அமெரிக்க பங்குச்சந்தைகளில் சீரான ஏற்றம் காணப்பட்டது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது முதல் டொனால்டு டிரம்ப் தனது தலைமையின் கீழ் பொருளாதாரம் எவ்வாறு முன்னேறி வருகிறது என்பதை டிவிட்டர் பதிவுகள் மூலமாக தெரிவித்து வருகிறார்.

மற்ற சந்தைகளுக்கும் பரவும் தாக்கம்

டவ் ஜோன்ஸில் ஏற்பட்டுள்ள சரிவு, அமெரிக்காவின் மற்ற பங்குச்சந்தைகளிலும் எதிரொலித்து வருகிறது. பிரபல எஸ்&பி தொழிற்குறியீட்டின் மதிப்பு 4.1 சதவீதமும், பெரும்பாலும் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் முதலீடு செய்துள்ள நாஸ்டாக்கின் மதிப்பு 3.7 சதவீதமும் குறைந்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

லண்டன் பங்குச்சந்தையில் முன்னணியிலுள்ள 100 நிறுவனங்களின் தொழிற்குறியீடான எஃப்டிஎஸ்இ( FTSE)-இன் மதிப்பும் 108 புள்ளிகள் அல்லது 1.46 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த திடீர் வீழ்ச்சிக்கு காரணமென்ன?

கடந்த வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க தொழிலாளர் துறை, அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் தொழிலாளர்களின் ஊதியத்தில் எதிர்பார்த்ததை விட வலுவான முன்னேற்றம் காணப்பட்டது.

இதன் காரணமாக, குறைந்த வட்டி விகிதங்களின் காலம் முடிவடையப்போவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் தங்களது கணிப்புகளை வெளியிட தொடங்கினர்.

படத்தின் காப்புரிமை Getty Images

எனவே, அதிர்ச்சியுற்ற முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை விற்று அதை பத்திரங்கள் உள்ளிட்ட அதிக வட்டியளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்யத்தொடங்கினர்.

ஆட்டம் காணும் இந்திய பங்குச்சந்தை

அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சி லண்டன், ஜப்பான் மற்றும் சிங்கப்பூரை தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸின் மதிப்பு இன்று (செவ்வாய்க்கிழமை) மட்டும் 561 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து அதாவது 1.61 சதவீதத்தை இழந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி இன்று மட்டும் 168.20 புள்ளிகள் அதாவது -1.58 % சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

சென்ற வாரம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையானது இந்திய பங்குச்சந்தைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் தற்போது அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியும் இங்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :