ஆனந்த் ஸ்ரீநிவாசன் தரும் டிப்ஸ்: உங்கள் பணத்தை எப்படி, எதில் முதலீடு செய்வது?

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
Anand Srinivasan

பட மூலாதாரம், Anand Srinivasan facebook page

எப்படி, எந்த முறையில் முதலீடுகளைச் செய்வது என்பது குறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் அளிக்கும் டிப்ஸ்.

பணத்தை எடுத்து வைப்பது சேமிப்பு. அந்தப் பணத்தை நமக்காக வேலை செய்யவைப்பது முதலீடு. சேமிப்பு முதல் அடி. முதலீடு என்பது இரண்டாவது கட்டம். பணத்தை வங்கிகளில் வைத்தால் பெரிதாக லாபம் கிடைக்காது. சேமிப்புக் கணக்கில் வைத்தால் 3.5 சதவீதம்தான் வட்டி கிடைக்கும். நடப்புக் கணக்கில் வைத்தால் வட்டியே கிடையாது. பிக்ஸட் டெபாசிட் போட்டால்கூட 5 சதவீதத்திற்கு மேல் வராது. அந்த ஐந்து சதவீதத்திலும் 10 சதவீதம் டிடிஎஸாக பிடிக்கப்படும். ஆகவே நான்கரை சதவீதம்தான் வட்டியாக கிடைக்கும்.

ஆனால், பணவீக்கம் இதைவிட அதிகம். அதிகாரபூர்வமாக பார்த்தாலே, கடந்த ஆண்டு பணவீக்கம் என்பது சில்லரை விலையில் ஆறரை சதவீதமும் மொத்த விலையில் பத்து சதவீதமுமாக இருந்தது. வீட்டில் நாம் செலவழிப்பது என்பது 10- 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருக்கும். ஆகவே வங்கிகளில் பணத்தைப் போட்டுவைப்பது என்பது இழப்புத்தான்.

பங்குச் சந்தைகளில் செய்யப்படும் முதலீடுகளில் இரண்டு வகை. ஒன்று Passive investment. இரண்டாவது aggressive investment. இதில் Passive investment என்றால், பணத்தை முதலீடு செய்துவிட்டு, மறந்துவிடுவார்கள். அதாவது பங்குகளை வாங்கும்போது, அதன் விலை சற்று அதிகரித்தால், அதை கவனித்து சிலர் விற்று லாபம் பார்த்துவிடுவார்கள்.

இதைத் தொடர்ந்து செய்வார்கள். இதை aggressive investment என்று சொல்லலாம். சிலர், எவ்வளவுதான் அதிகரித்தாலும் எதிர்காலத்தை மனதில்வைத்து பேசாமல் இருந்துவிடுவார்கள். வாங்கிவைத்த பங்கின் விலை குறைந்தால்கூட, கூடுதலாக பங்குகளை வாங்குவார்களே தவிர, விற்க மாட்டார்கள். 10- 15 வருடம் கழித்து தேவை ஏற்படும்போது அந்தப் பங்கை விற்பார்கள். இதுதான் passive investment.

மிகக் குறைந்த அளவில் சேமிப்பவர்கள், பங்குச் சந்தையில் தங்களால் முதலீடு செய்ய முடியாது என நினைக்கிறார்கள். அப்படியல்ல. மிகக் குறைந்த விலையிலான பங்குகள் கிடைக்கின்றன. அவற்றில் முதலீடுசெய்யலாம். இம்மாதிரி முதலீடுகளைச் செய்யும்போது, நாமே நேரடியாக செய்யலாமா அல்லது ஒரு முதலீட்டு ஆலோசகரின் ஆலோசனையை நாடலாமா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.

பலரிடமும் கேட்டுக்கொண்டு நாமே செய்வதுதான் சரியாக இருக்கும். ஏனென்றால், ஒரு ஆலோசகரைத் தேர்வுசெய்தால், அவருக்கு எவ்வளவு தெரியும் என்பது நமக்குத் தெரியாது. பிறகு, அம்மாதிரி ஒருவரைத் தேர்வுசெய்வதே பெரிய வேலையாகிவிடும். அதனால், நீங்கள் எந்த வயதில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பிக்கிறீர்கள் என்பதை மனதில் கொண்டு, சிறிது சிறிதாகவோ, பெரிய அளவிலோ பங்குச் சந்தையில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பிக்கலாம். சிறிய வயதில் முதலீடுகளைச் செய்ய ஆரம்பித்தால், மிகச் சிறிய சிறிய முதலீடுகளாக செய்துகொண்டேவந்தால், ஒரு கட்டத்தில் அவை பெரிய சொத்துகளாகத் திரண்டு நிற்கும்.

பட மூலாதாரம், Getty Images

முதலீடுகளைச் செய்யும்போது, சிறிய அளவில் இழப்பு நேரிடும்போது பல முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியில் எடுத்துவிட்டு சென்றுவிடுவார்கள். இது தவறு. அந்த முதலீட்டை வேறு எப்படி பயன்படுத்த வேண்டும் என்றுதான் யோசிக்க வேண்டும். பதற்றமடையவே கூடாது. பங்குச் சந்தையைப் பொறுத்தவரை, விலை குறையும்போது யாரும் பக்கத்திலேயே வர மாட்டார்கள். பங்குச் சந்தை உயரும்போது எல்லோரும் வந்து குவிவார்கள்.

புகழ்பெற்ற வாரன் பஃபட் இதை வேறு விதமாகச் சொல்கிறார். அதாவது எல்லோரும் பேராசையுடன் இருக்கும்போது நாம் கவனமாக அச்சத்துடன் இருக்க வேண்டும். எல்லோரும் அச்சத்துடன் விலகும்போது நாம் பேராசையுடன் செயல்பட வேண்டும். அதாவது பங்குச் சந்தையில் பங்குகளின் விலை குறையும்போது நல்ல நிறுவனங்களாக பார்த்து முதலீடு செய்வது சிறந்தது. அது நிச்சயம் லாபம் கொடுக்கும்.

ஒரு சாதாரண மத்தியதர குடும்பத்தைச் சேர்ந்தவர், சேமிப்பு, முதலீடு ஆகியவற்றில் ஈடுபடும்போது முதலில் மருத்துவ காப்பீட்டில் கவனம் செலுத்த வேண்டும். இரண்டாவதாக தங்கம். அதற்குப் பிறகு term insurance. பிறகு சொத்துகளைச் சேர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

இது தவிர, முதலீடு செய்வது குறித்து இன்னும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள:

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :