எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட்: உலகிலேயே மிக அதிக கடன் வாங்கிய நிறுவனத்தால் அச்சத்தில் சீன பொருளாதாரம்

பட மூலாதாரம், Getty Images
எவர்கிராண்ட் தன் கால்பந்தாட்ட அணிக்காக கட்டிக் கொண்டிருக்கும் புதிய விளையாட்டரங்கம்
சீன நிறுவனமான எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட் கடந்த சில காலமாக மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. அந்நிறுவனம் இந்த வாரம் ஒரு முக்கிய சோதனையை எதிர்கொள்வதால் உலக பங்குச் சந்தைகள் எல்லாமே மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன.
உலகின் மிகவும் கடன்பட்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான 'எவர்கிராண்ட்' இந்த வியாழக்கிழமை அதன் கடன் பத்திரங்களுக்கு $84 மில்லியன் வட்டி செலுத்த வேண்டும்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், அந்நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்துவதற்கு பதிலாக, சொத்துக்களை திருப்பிச் செலுத்தத் தொடங்கியது, காரணம் அதன் கடன்களைச் சமாளிக்க அந்நிறுவனத்தால் பணத்தை திரட்ட முடியவில்லை.
எவர்கிராண்ட் என்ன செய்கிறது?
தொழிலதிபர் ஹுய் கா யான் 1996 ஆம் ஆண்டில் தெற்கு சீனாவின் குவாங்சோவில், ஹெங்க்டா குழுமத்தைத் தொடங்கினார்.அது தான் தற்போது எவர்கிராண்ட் நிறுவனமாக வளர்ந்து இருக்கிறது.
எவர்கிராண்ட் ரியல் எஸ்டேட் நிறுவனம் தற்போது சீனா முழுவதும் 280க்கும் மேற்பட்ட நகரங்களில் 1,300 க்கும் மேற்பட்ட திட்டங்களைக் கையில் வைத்திருக்கிறது.
எவர்கிராண்ட் குழு இப்போது ரியல் எஸ்டேட் மேம்பாட்டைத் தாண்டி பல துறைகளில் இருக்கிறது.
நிதி மேலாண்மை, மின்சார கார்களை தயாரித்தல், உணவு தயாரித்தல் என பல துறைகளில் கால்பதித்து வியாபாரம் செய்து வருகிறது. இதே நிறுவனம் தான் சீனாவின் மிகப்பெரிய கால்பந்து அணிகளில் ஒன்றான குவாங்சோ எஃப் சி அணியையும் வைத்திருக்கிறது.
ஃபோர்ப்ஸ் பத்திரிகை தரவுகள் படி, ஹுயிக்கு சுமார் $10.6 பில்லியன் தனிப்பட்ட சொத்து பத்துக்கள் உள்ளன.
எவர்கிராண்ட் சிக்கல் என்ன?
பட மூலாதாரம், Getty Images
சீன பொருளாதாரம்
சீனாவின் மிகப்பெரிய நிறுவனமாக வேண்டுமென, எவர்கிராண்ட் அதிதீவிரமாக $300 பில்லியன் டாலருக்கு மேல் கடன் வாங்கி விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டது.
சீன அரசு, கடந்த ஆண்டு, பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகை குறித்த புதிய விதிமுறைகளைக் கொண்டு வந்தது.
புதிய விதிமுறையால் எவர்கிராண்ட் நிறுவனம், தன் வியாபாரத்தில் பணப்புழக்கத்தை உறுதி செய்ய அதன் சொத்துக்களை பெரும் தள்ளுபடியில் விற்க வேண்டி வந்தது.
இப்போது, அந்நிறுவனம் வாங்கிய கடன்களுக்கான வட்டிச் செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறி வருகிறது.
இந்த நிச்சயமற்றதன்மையின் காரணமாக, எவர்கிராண்டின் பங்கின் விலை இந்த ஆண்டு மட்டும் சுமார் 85% சரிந்துள்ளது. அதன் கடன் பத்திரங்கள் உலகளாவிய கடன் மதிப்பீட்டு நிறுவனங்களால் குறைக்கப்பட்டுள்ளன.
எவர்கிராண்ட் பிரச்னை ஏன் இவ்வளவு கவனம் பெறுகிறது?
எவர்கிராண்ட் பிரச்சனை தீவிரமடைவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
அதில் முதல் விஷயம் வாடிக்கையாளர்கள். கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே பலர்எவர்கிராண்டிடம் இருந்து சொத்துக்களை வாங்கினார்கள். அவர்கள் வைப்புத்தொகையை செலுத்தியுள்ளனர். ஒருவேளை எவர்கிராண்ட் நிறுவனத்தால் வீடுகளைக் கொடுக்க முடியவில்லை என்றால், வாடிக்கையாளர்கள் தங்கள் பணத்தை இழந்து விடுவார்கள்.
இரண்டாவது காரணம் எவர்கிராண்ட் உடன் வியாபாரம் செய்யும் நிறுவனங்கள். கட்டுமானத் தொழில் செய்யும் நிறுவனங்கள், கட்டட வடிவமைப்பு நிறுவனங்கள், கட்டுமானம் உட்பட பல்வேறு பொருட்களை விநியோகிக்கும் நிறுவனங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் அபாயத்தில் உள்ளன. அப்படி பெருத்த நஷ்டம் ஏற்பட்டால் அச்சிறு நிறுவனங்களும் வியாபாரத்தை இழந்து திவாலாகலாம்.
சீனாவின் நிதி அமைப்பில் அடுத்த பெரிய தாக்கம் ஏற்படும். "எவர்கிராண்ட் நிறுவனம் சுமார் 171 உள்நாட்டு வங்கிகள் மற்றும் 121 பிற நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது" என எகனாமிஸ்ட் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த (EIU) மேட்டி பெக்கிங்க் பிபிசியிடம் கூறினார்.
எவர்கிராண்ட் தன் கடனை முறையாகச் செலுத்தத் தவறினால், வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் குறைவாக கடன் கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படலாம்.
நிறுவனங்கள் மலிவு விலையில் கடன் வாங்க போராடும் போது, இப்படி ஒரு சம்பவம் நடந்தால் அது கடன் நெருக்கடியை ஏற்படுத்தும்.
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் சீனாவுக்கு, இந்த கடன் நெருக்கடி மிக மோசமான செய்தியாக இருக்கும், காரணம் கடன் வாங்காமல் நிறுவனங்கள் வளர்வது கடினமாகலாம், சில சமயங்களில் தொடர்ந்து செயல்பட முடியாமலும் போகலாம்.
இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தும். அவர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்ய கவர்ச்சிகரமான இடமாக சீனாவைப் பார்ப்பது குறையும்.
எவர்கிராண்ட் எதிர்காலம்?
பட மூலாதாரம், EPA
சீன அரசு எவர்கிராண்ட்டை மீட்பதில் தலையிடலாம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
"விநியோகச் சங்கிலிகளைச் சீர்குலைத்து, வீட்டு உரிமையாளர்களைக் அதிருப்தியில் ஆழ்த்துவதற்கு பதிலாக, எவர்கிராண்டின் முக்கிய வணிகம் பிழைத்திருப்பதை உறுதி செய்ய ஒரு வழியை அரசு கண்டுபிடிக்கும்" என எகனாமிஸ்ட் புலனாய்வு யூனிட்டின் மேட்டி பெக்கிங்க் கருதுகிறார்:
சீனாவின் சமூக ஊடக தளமான வீசேட்டில், அரசு ஆதரவு பெற்ற குளோபல் டைம்ஸ் செய்தித்தாளின் செல்வாக்குமிக்க பத்திரிகை ஆசிரியர் ஹு ஜிஜின், எவர்கிராண்ட் நிறுவனம் தன்னை அரசாங்கம் காப்பாற்றும் என நம்பியிருக்கக் கூடாது, அதற்கு பதிலாக தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஒரு பதிவில் கூறியுள்ளார்.
இது பெருநிறுவனக் கடனை கட்டுப்படுத்துவதற்கான பெய்ஜிங்கின் நோக்கத்துடன் ஒத்துப் போகிறது, அதாவது இவ்வளவு அதிக கடனுள்ள ஒரு நிறுவனத்தை காப்பாற்றுவது, ஒரு மோசமான முன்னுதாரணமாக பார்க்கப்படலாம்.
பிற செய்திகள்:
- உ.பி. இந்து சாமியார் தற்கொலை வழக்கில் ஸ்டைல் ஐகான் சீடர் கைது: யார் இவர்?
- பாலியல் வன்கொடுமைக்கு முயன்ற தந்தை: குத்திக் கொன்ற சிறுமி மீது வழக்கு இல்லை
- ஆப்கன் பெண்களுக்கு தாலிபன்கள் கல்வி மறுப்பது இஸ்லாத்துக்கு எதிரானது - இம்ரான் கான்
- மகாத்மா காந்தி 100 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் மேலாடையை துறந்தது ஏன்?
- நிலவில் மனித இனம் காணா இடத்துக்குச் செல்ல தயாராகும் வைபர் ரோவர்
- PBKS vs RR: கையில் 8 விக்கெட்டுகள் இருந்தும் படுதோல்வி அடைந்த பஞ்சாப்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்