சீன செல்பேசிகள்: தணிக்கை செயலி, தரவுகள் கசிவு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கும் லித்துவேனியா

பட மூலாதாரம், Getty Images
ஸியோமி செல்பேசிகளில் தணிக்கை வசதி இயல்பாகவே நிறுவப்பட்டுள்ளதாக லித்துவேனியா பாதுகாப்புத்துறை ஆய்வு கூறுகிறது.
சீன தயாரிப்பு செல்பேசிகளை மக்கள் வீசியெறிய வேண்டும் என்றும் புதிய சீன ரக செல்பேசிகளை வாங்காமல் தவிர்க்க வேண்டும் என்றும் லித்துவேனியா பாதுகாப்புத்துறை மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சீன தயாரிப்பு நிறுவனங்களின் 5ஜி செல்பேசிகளை லித்துவேனியா தேசிய சைபர் பாதுகாப்பு மையம் பரிசோதனைக்கு உட்படுத்தியது.
அதில், ஸியோமி ரக செல்பேசியில் இயல்பாகவே தணிக்கை செயலிகள் நிறுவப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டது. மேலும், க்வாவே செல்பேசி ரகங்கள், சைபர் தாக்குதலுக்கு இலக்காகும் தன்மை வாய்ந்தவையாக உள்ளதாகவும் லித்துவேனியா ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
ஆனால், எந்த ஒரு பயனர் தரவும் வெளியாருடன் பகிரப்படுவதில்லை என்று க்வாவே நிறுவனம் தெரிவித்தது.
இது குறித்து லித்துவேனியா பாதுகாப்பு அமைச்சர் மார்கிரிஸ் அபுகெவிஷியஸ் கூறுகையில், "எங்களுடைய பரிந்துரையைக் கேட்டால், சீன செல்பேசிகளை மக்கள் வாங்கக் கூடாது. ஏற்கெனவே வாங்கிய செல்பேசிகளையும் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக விட்டொழியுங்கள்," என்று தெரிவித்தார்.
ஸியோமி அறிமுக Mi 10T 5ஜி செல்பேசியில் "Free Tibet", "Long live Taiwan independence" அல்லது "democracy movement" போன்ற வாசகங்கள் இடம்பெற்றால் இயல்பாகவே அவற்றை கண்டறிந்து அந்த பக்கத்தை தணிக்கை செய்யும் செயலி நிறுவப்பட்டுள்ளதாக லித்துவேனியா தேசிய சைபர் பாதுகாப்பு மையம் கூறியுள்ளது.
இதுபோல, 499க்கும் அதிகமான சொற்களை ஸியோமி செல்பேசி செயலிகள் தாமாகவே கண்டறிந்து தணிக்கை செய்யும் வசதி நிறுவப்பட்டுள்ளதாக லித்துவேனியா அதிகாரிகள் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் இந்த ரக சீன செல்பேசி மாடல்களில் தணிக்கை வசதி அணைக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த வசதியை தொலைதூரத்தில் இருந்து கூட இயக்க முடியும் என்று லித்துவேனியா சைபர் துறை கூறுகிறது.
இது தொடர்பாக ஸியோமி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேச பிபிசி முயன்றபோதும், அந்த நிறுவனம் எந்த பதிலையும் வெளியிடவில்லை.
இதற்கிடையே, ஸியோமி சாதனத்தில் உள்ள ரகசிய உள்ளீட்டுத் தரவுகள், சிங்கப்பூரில் உள்ள சர்வருக்கு தானியங்கியாக பரிமாற்றப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. லித்துவேனியா ஆய்வு கூறுகிறது.
இது லித்துவேனியாவுக்கு மட்டுமின்றி ஸியோமி சாதனத்தை பயன்படுத்தும் எல்லா நாடுகளில் உள்ளவர்களுக்கும் முக்கியமானது என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
க்வாவே பி40
க்வாவே பி40 5ஜி ரக செல்பேசி, பயனர்களின் தரவுகளை கசியச்செய்யும் ஆபத்தைக் கொண்டிருப்பதால் அது சைபர் பாதுகாப்பை மீறும் வகையில் இருப்பதாக லித்துவேனியா குற்றம்சாட்டியுள்ளது.
"க்வாவே நிறுவனத்தின் அலுவல்பூவ ஆப்ஸ்டோர் செயலி இ-ஸ்டோர்களில் உள்ள வெளியார் செயலிகளை பயன்படுத்த அறிவுறுத்துகிறது என்றும் அந்த செயலிகள் ஏற்கெனவே வைரஸ் பாதிப்பை அல்லது தகவல் திருட்டில் ஈடுபடும் தன்மையைக் கொண்டுள்ளதையும் கண்டுபிடித்துள்ளோம்," என்று லித்துவேனியா பாதுகாப்புத்துறை மற்றும் அந்நாட்டின் தேசிய சைபர் பாதுகாப்பு மையம் கூறியுள்ளது.
இந்த நிலையில், தமது சேவை எந்த நாடுகளில் வழங்கப்படுகிறதோ அந்த நாட்டின் சட்ட விதிகளுக்கு உட்பட்டே தமது சேவைகள் வழங்கப்படுவதாக க்வாவே நிறுவன செய்தித்தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.
"பயனர் தரவுகள் எந்த வகையிலும் சாதனத்தை விட்டு வெளியே பகிரப்படுவதில்லை," என்று அவர் கூறினார்.
"ஆப்கேலரி பயனரின் தரவுகள், உள்ளீடுகளை சேமித்து, அவர்கள் தேடுபொறிக்கு தேவையான சொற்களை கோர்க்கும் அல்லது வெளியார் செயலியை நிறுவவோ அவற்றை கையாளவோ உதவியாக இருக்கும்," என்று அவர் தெரிவித்தார்.
இது தவிர ஒன் பிளஸ் 5ஜி செல்பேசியையும் லித்துவேனியா பாதுகாப்புத்துறை ஆய்வு செய்தது. ஆனால், அதில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிய வந்துள்ளதாக அதன் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சீனாவுக்கும் லித்துவேனியாவும் இடையே பதற்றமான சூழல் நிலவும் வேளையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
கடந்த மாதம் சீனாவின் பணியாற்றும் தமது தூதரை திரும்பப் பெறுமாறு லித்துவேனியாவிடம் கோரிய சீன அரசு, அந்த நாட்டில் உள்ள தமது தூதரை திருப்பி அழைத்துக் கொள்வதாகவும் தெரிவித்தது.
சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே ஆளுகை தொடர்பான பிரச்னை நிலவி வருகிறது. தைவானை தமது சொந்த பிராந்தியம் என்று சீனா கூறி வந்தாலும் அதை தைவான் அரசு ஏற்கவில்லை. இந்த நிலையில், லித்துவேனியாவில் உள்ள தமது பிரதிநிதி அலுவலகத்தை இனி தைவான் தூதரக அலுவலகம் ஆக அழைக்கப்போவதாக தைவான் அறிவித்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தைவானிய தூதரகம், அந்த நாட்டின் பெயரில் அல்லாமல் தலைநகர் தைபே என்ற பெயரிட்டு அழைக்கப்படுகிறது. இதே வழக்கத்தை லித்துவேனியாவும் ஆதரிக்கும் நிலையில், அந்த நாட்டுடன் இணக்கமற்ற போக்கை சீனா கடைப்பிடித்து வருகிறது.
பிற செய்திகள்:
- 'போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டார்கள் என இலங்கை அரசு ஏற்றுக்கொள்கிறதா?'
- மருத்துவ கல்லூரி சேர்க்கைக்கு நீட் தேர்வைக் கட்டாயமாக்கிய வழக்குகளும் தீர்ப்புகளும்
- PBKS vs RR: 18 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி, கையில் 8 விக்கெட்டுகள் இருந்தும் படுதோல்வி அடைந்த பஞ்சாப்
- ஐ.நா சபையில் பைடன்: இரான், வடகொரியா பற்றி பேசியது என்ன? 5 முக்கிய தகவல்கள்
- நீட் தேர்வு குறித்த ஏ.கே. ராஜன் கமிட்டியின் அறிக்கை சொல்வதென்ன? விரிவான ரிப்போர்ட்
- 3,000 கிலோ ஆப்கன் ஹெராயின் கடத்தியதாக சென்னை தம்பதி கைது - யார் அந்த டெல்லி புள்ளி?
- அ.தி.மு.க - பா.ஜ.க உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி: 20 % இடங்கள்; 6 வாய்ப்புகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்