ஊக்க மருந்து பயன்பாடு: இரண்டு ரஷ்ய வீரர்களின் பதக்கம் பறிப்பு

படத்தின் காப்புரிமை AP
Image caption ரஷ்யா மீது வாடா கடும் குற்றச்சாட்டு

ரஷ்யாவிலிருந்து சட்டவிரோதமான வகையில் சிலர் தமது கணினி வலையமைப்பில் புகுந்து தகவல்களை களவாடுகின்றனர் என ஊக்க மருந்து பயன்பாட்டுக்கு எதிரான சர்வதேச அமைப்பு-வாடா கூறியுள்ளது.

அவ்வகையில் திருட்டுத்தனமாக எடுக்கப்படும் தகவல்களையும் அவர்கள் வெளியிடுகின்றனர் எனவும் வாடா தெரிவித்துள்ளது.

இதனிடையே அமெரிக்க ஜிம்னாஸ்ட் சிமோன் பைல்ஸ் மற்றும் வில்லியம்ஸ் சகோதரிகள் ஆகியோரும் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்துகளை பயன்படுத்தினர் என ரஷ்ய செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற சிமோன் பைல்ஸ் மற்றும் வில்லியம்ஸ் சகோதரிகள் ஆகியோர் பயன்படுத்தியதாகக் கூறும் ஊக்க மருந்துகளின் பட்டியல் ஒன்றையும் அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AP
Image caption அமெரிக்க வீரர் சிமோன் பைல்ஸ்

வாடாவின் இணையதளம் ரஷ்யாவில் இருந்து செயல்படுபவர்கள் தினம்தோறும் தமது இணையதளத்தில் அததமீறி நுழைந்து தாக்குதல்களை நடத்துகின்றனர் என வாடாவின் தலைமை இயக்குநர் ஒலிவியர் நிக்லி கூறுகிறார்.

ரஷ்யாவில் அரச ஆதரவுடன் ஊக்க மருந்து பயன்பாடு விளையாட்டுத்துறையில் இடம்பெறுகிறது எனும் குற்றச்சாட்டை வாடா வைத்ததை அடுத்து, ரஷ்யாவின் தடகள விளையாட்டு வீரர்களுக்கு ரியோ ஒலிம்பிக்ஸில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற இரு ரஷ்ய தடகள விளையாட்டு வீரர்களின் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மரியா அபாகுமோவா மற்றும் ஆடவருக்கான 400 மீட்டர் தொடரோட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் இருந்த டெனிஸ் அலெக்சீவ் ஆகியோரின் பதக்கங்களே பறிக்கப்பட்டுள்ளன.

இவர்கள் இருவரும் ஊக்க மருந்து பயன்படுத்தியிருந்தது தெரியவந்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.