ஜெர்மனியில் குடியேறிகளின் மீது தாக்குதல்

கிழக்கு ஜெர்மனியில் உள்ள பெளட்சன் நகரில், வலது சாரி தீவிரவாதிகள், தஞ்சம் கோருபவர்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரையும் போலிஸார் பிரிக்க முயன்றனர்

இருபது குடியேறிகளை சுமார் 80 பேர் தாக்கியதால், போலிஸார் கூடுதல் போலிஸ் படையினரை வரவழைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

போலிஸ் அதிகாரிகள் இரண்டு தரப்பினரை பிரிக்க முயன்ற போது பாட்டில்களால் தாக்கப்பட்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடியேறிகள் விடுதிக்கு தப்பிச் சென்றுவிட்டனர்; அங்கு போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்த வருடத்தின் தொடக்கத்தில், குடியேறிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டபோது பார்வையாளர்கள் கரகோஷங்களை எழுப்பிய தலைப்புச் செய்தியால் எதிர்மறையான கவனத்தை பெளட்சன் நகர் பெற்றது.

ஏங்கலா மெர்கலின் குடியேற்றக் கொள்கைகள் ஜெர்மன் சமுதாயத்தை மாற்றிவிட்டதாக வாக்காளர்கள் கூறுவதால், ஜெர்மனியில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள், மெர்கலுக்கு அரசியல் பிரச்சனைகளை உருவாக்கும் என பிபிசி செய்தியாளர் தெரிவித்துள்ளார்.