ஏமனின் வரலாற்று கட்டிடங்கள் மீது சௌதி தலைமையிலான கூட்டணி வான்தாக்குதல்

ஏமன் நாட்டின் தலைநகர் சானாவில் பழைய நகரத்தில் உள்ள வரலாற்று புகழ் பெற்ற கட்டிடங்கள் மீது சௌதி தலைமையிலான கூட்டணி வான்தாக்குதல்களை நடத்தியது.

படத்தின் காப்புரிமை MOHAMMED HUWAIS/AFP/Getty Images
Image caption சௌதி தலைமையிலான கூட்டணி ஏமனில் வான்தாக்குதல் நடத்தியதில் பல கட்டிடங்கள் சேதமடைந்தன. சேதத்தை பார்வையிடும் ஒரு பெண்.

இந்த தாக்குதலின் இலக்கு தேசிய பாதுகாப்பு பணியகத்தின் தலைமை அலுவலகமாக இருக்கலாம் என்று , சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர். இந்த இடம் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் அதன் முதன்மையான மதிப்பை கருதி உலக பாரம்பரிய தலம் என்று பட்டியலிடப்பட்டதாகும்.

குறைந்தது ஒரு நபர் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்று அவர்கள் தெரிவித்தனர்.

திங்களன்று சௌதி அரேபியாவின் விமான தளத்தின் மீது தொடுக்கப்பட்ட ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த தாக்குதல் சௌதி வான் பாதுகாப்பு அமைப்பால் தடுக்கப்பட்டது. அந்த தாக்குதலிற்கு பதில் நடவடிக்கைதான் இந்த வான்வழி தாக்குதல் என்று கூறப்படுகிறது.

ஏமனில் உள்ள ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை சௌதி அரேபியா வழிநடத்தி வருகிறது.