பிராட் பிட்டை விவாகரத்து செய்யவுள்ளார் நடிகை ஆஞ்சலீனா ஜோலி

ஹாலிவுட் நட்சத்திரம், ஆஞ்சலீனா ஜோலி தனது கணவர் பிராட் பிட்டிடமிருந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார் என்று ஆஞ்சலீனா ஜோலியின் வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ரசிகர்களால் இவர்கள் பிராஞ்சலீனா என்று அழைக்கப்பட்டனர்

ஆஞ்சலீனா ஜோலி, திருமணத்தை ரத்து செய்வதற்காக பதிவு செய்துள்ளார் என்றும் இந்த முடிவு குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டது என்றும் அவரின் வழக்கறிஞர் ராபர்ட் ஒஃபர் தெரிவித்துள்ளார்.

ஜோலி இது குறித்து கருத்து தெரிவிக்க மாட்டார் என்றும் குடும்பத்திற்கான தனிப்பட்ட நேரம் தற்போது கொடுக்கப்பட வேண்டும் என்றும் ஒஃபர் தெரிவித்துள்ளார்.

இந்த தம்பதியினர் 2004 ஆம் ஆண்டிலிருந்து சேர்ந்து வாழ்கின்றனர் என்றபோதும் 2014 ஆகஸ்ட் மாதம்தான் திருமணம் செய்து கொண்டனர்.

பிராட் பிட்டிற்கு இது இரண்டாவது திருமணம், அவரின் முன்னாள் மனைவி பிரண்ட்ஸ் தொடரில் நடித்த ஜெனிஃபர் ஆனிஸ்டன் ஆவார். ஜோலிக்கு பிராட் பிட் மூன்றாவது கணவர் ஆவார்.

சரி செய்ய முடியாத கருத்து வேறுபாடுகள்தான் இதற்கு காரணம் என்றும், செப்டம்பர் 15 ஆம் தேதியிலிருந்து தாங்கள் பிரிந்து வாழ்வதாகவும் ஆஞ்சலீனா தெரிவித்துள்ளதாக அமெரிக்காவின் ஒரு பொழுதுபோக்கு வலைதளத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தம்பதியினருக்கு, தத்தெடுக்கப்பட்ட மூன்று குழந்தைகள் மற்றும் தங்களுக்கு பிறந்த மூன்று குழந்தைகள் என மொத்தம் ஆறு குழந்தைகள் உள்ளன .

குழந்தைகளை தானே வைத்துக் கொள்ளும் உரிமையை ஜோலி கோருவார் என்றும் அவர்களை காணும் உரிமையை பிராட் பிட்டிற்கு வழங்க வேண்டும் என்று கோருவார் என்றும் நம்பப்படுகிறது.