கோவை பேராசிரியை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு தூக்கு தண்டனை

கோயம்புத்தூரை அடுத்துள்ள காரமடையில் 2014ஆம் ஆண்டில் உதவிப் பேராசிரியை ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மகேஷ் என்பவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Image caption கோவை பேராசிரியை கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மகேஷுக்கு தூக்கு தண்டனை

2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காரமடைப் பகுதியில் வசித்துவந்த ரம்யா என்ற 24 வயதுப் பெண் பேருந்து நிலையத்திலிருந்து வீடு திரும்பும்போது அவரைப் பின்தொடர்ந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரைத் தாக்கி, பலாத்காரம் செய்தார். இதில் அந்தப் பெண் பலியானார். அவரது தாயான மாலதியும் தாக்கப்பட்டுக் கிடந்தார். வீட்டிலிருந்த நகைகள், லேப் டாப் கம்யூட்டர் ஆகியவை திருடப்பட்டிருந்தன.

இந்த வழக்கில் தென்காசியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் இரு மாதங்களுக்குப் பிறகு கைதுசெய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை, கொலை, அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் 23 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.

கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த மகேஷ் குற்றவாளி என இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளியான மகேஷிற்கு மரண தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் ஆகியவற்றை விதித்து நீதிபதி ராஜா தீர்ப்பளித்திருக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்