டொனால்ட் ட்ரம்பின் அறக்கட்டளைக்கு நியூ யார்க்கில் தடை

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான டொனால்ட் ட்ரம்பின் அறக்கட்டளை நியூ யார்க் மாகாணத்தில் நிதிதிரட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption குடியரசுக் கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் டொனால்ட் ட்ரம்ப்

அம்மாகாணத்தின் தலைமை வழக்கறிஞர் இந்தத் தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நியூ யார்க் மாகாணத்தில் முறையாகப் பதிவு செய்யப்படாமல், அந்த அறக்கட்டளை நிதிதிரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டது என அரச வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதையடுத்து சட்டவிதிகளை மீறியதற்காக அவர்கள் மீது "ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது" என விளக்கம் கோரி தாக்கீது அனுப்பப்பட்டுள்ளது.

'ட்ரம்ப் அறக்கட்டளை' கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நன்கொடைகளையே சார்ந்திருந்தது என்பதை ஆவணங்கள் காட்டுகின்றன.

ஆண்டொன்றுக்கு 25,000 டாலர்களுக்கு மேல் நிதியுதவி கோரும் எந்த அறக்கட்டளையும் நியூ யார்க் மாகாண சட்டவிதிகளின்படி பதிவு செய்திருக்க வேண்டுமென்று இருக்கும்போது, அவரது அறக்கட்டளை அதை புறந்தள்ளியது எனக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் பின்னணியில் இருக்கும் அரசியல் நோக்கங்கள் குறித்து தாங்கள் மிகவும் கவலையடைந்திருந்தாலும், விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ட்ரம்ப் அறக்கட்டளையின் பேச்சாளர் கூறியுள்ளார்.

கூடுதல் விளக்கங்கள் ஏதும் இப்போது அளிக்கப்படமாட்டாது எனவும் அந்த அறக்கட்டளை தெரிவித்துள்ளது.