வட கொரியாவுக்கு அவசர மனிதநேய உதவி வழங்க செஞ்சிலுவை சங்கம் மீண்டும் அழைப்பு

வரயிருக்கும் குளிர்காலத்தை முன்னிட்டு வட கொரியாவுக்கு அவசர மனிதநேய உதவிகள் வழங்குவதற்கு செஞ்சிலுவை சங்கம் மீண்டும் அழைப்புவிடுத்துள்ளது.

Image caption வட கொரியாவின் ஐந்தாவது அணு குண்டு சோதனைக்கு பிறகு, அந்நாட்டுக்கு உதவி செய்ய விடுக்கப்படும் அழைப்பை பல நாடுகள் தவிர்த்திருக்கின்றன

ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளப்பெருக்கிற்கு பிறகு நிலைமைகள் மிகவும் கடினமாக இருப்பதாக, வட கொரியாவின் செஞ்சிலுவை உதவி நடவடிக்கைகளின் தலைவர் கிறிஸ் ஸ்டெயின்ஸ் கூறியிருக்கிறார்.

இந்த வெள்ளப்பெருக்கு, குறைந்தது ஆறு லட்சம் பேரையும், 30 ஆயிரம் வீடுகளையும் பாதித்துள்ளது.

அக்டோபர் மாத முதலாவது பனிப்பொழிவுக்கு முன்னர் உதவிக்கான அவசர செயல்பாடு தேவைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

அந்நாட்டில் அண்மையில் பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள செஞ்சிலுவை சங்க செய்தி தொடர்பாளர் பேட்ரிக் ஃபுல்லர், உறைபனி கால நிலையில் தார்ப்பாய்களாலான வீடுகளில் மக்கள் வாழ முடியாது என்று கூறி நிரந்தரமான வீட்டு வசதிகளின் தேவையை வலியுறுத்தியிருக்கிறார்.

கடந்த மாதம் வட கொரியா நடத்திய ஐந்தாவது அணு குண்டு சோதனைக்கு பிறகு, வெளியிலிருந்து உதவிகள் அளிப்பதற்கான வேண்டுதலை பல நாடுகள் புறக்கணித்திருக்கின்றன.

தொடர்புடைய தலைப்புகள்