இலங்கை: தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனம் - தொழிற்சங்கங்கள் இடையிலான பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை

இலங்கையில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கான போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக தோட்ட உரிமையாளர் சம்மேளனத்திற்கும், தொழிற்சங்கங்களுக்குமிடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி முடிவடைந்தது.

Image caption மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு போராட்டம்

மலையகம் தழுவியதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் வலுப்பெற்றுள்ள நிலையில், தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன செவ்வாய்க்கிழமை இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான அழைப்பை விடுத்திருந்தார்.

அமைச்சர் ஜோன் செனவிரத்ன முன்னிலையில், தொழில் அமைச்சில் நடைபெற்ற இந்த பேச்சவார்த்தையில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படாத நிலையில் புதன்கிழமை வரை மீண்டும் பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஓப்பந்த தொழிற்சங்கங்களான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவை இன்றைய பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டன.

இந்த பேச்சுவார்த்தையின் போது தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனம் ஒரு நாள் சம்பளமாக 730 ரூபாய், மற்றும் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை ஆகிய யோசனைகளை மீண்டும் முன்வைத்ததாக கூறப்படுகிறது.

Image caption பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்திய தொழிலாளர்கள்

ஏனைய நாட்களில், 500 ரூபாய் சம்பளம். 10 கிலோவிற்கு மேல் பறிக்கப்படும் தேயிலை கொழுந்துக்கு கிலோ விற்கு 25 ரூபாய் மேலதிகமாக கொடுப்பணவு வேண்டும் என்றும் அந்த யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்டத்தை மீறும் இந்த யோசனையை தாங்கள் நிராகரித்து விட்டதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

மலையகம் தழுவிய போராட்டம்

கடந்த மாதம் 22-ஆம் தேதி, நுவரெலியா மாவட்டத்திலுள்ள தோட்டமொன்றில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழிலாளர்களின் போராட்டம், மலையகம் தழுவிய போராட்டமாக தற்போது மாறியுள்ளது.

இன்று 13-வது நாளாக நுவரெலியா , கண்டி , மாத்தளை மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தொழிலாளர்களின் ஆர்பாட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தங்களுக்கு தற்போது வழங்கப்படுகின்ற ஒரு நாள் சம்பளமான 620 ரூபாய் என்பதை 1000 ரூபாய் ஆக அதிகரிக்க கோரி என தோட்ட உரிமையாளர்கள் சம்மேளனத்திற்கு அழுத்தும் கொடுக்கும் வகையில் இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தங்களது தினசரி கடமைளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தொழிலாளர்களின் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.