மேத்யூ சூறாவளியின் தாக்கம்: ஹெய்ட்டியில் இறந்தவர்கள் எண்ணிக்கை 800ஐ தாண்டியது

ஹெய்ட்டியில் மேத்யூ சூறாவளியால் குறைந்தது 800 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை AFP
Image caption பல கிராமங்கள் முற்றாக அழிந்துள்ளன. பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை விட்டு வெளியேற்றம்

மிகக் கடுமையான அச்சூறாவளி கடந்த செவ்வாய்கிழமை ஹெய்ட்டியைத் தாக்கியது.

அதன் தாக்கம் முழுமையாகத் தெரிய பல நாட்கள் ஆகலாம் என்று ஐ நா உதவி அமைப்பின் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

மேத்யூ சூறாவளி ஹெய்ட்டியின் தென்மேற்கு பகுதியை கடுமையாகத் தாக்கியது. இதில் அப்பகுதியிலுள்ள முக்கிய நகரான ஜெரேமே முற்றாக அழிந்துபோனது.

தென்பகுதி கரையோரப் பிரதேசங்களில் பல்லாயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு சில உதவிகள் வந்து சேர்ந்தாலும், அப்பகுதிகள் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே உள்ளன என உலக உணவுத் திட்டத்தின் அதிகாரி கார்லோஸ் வெலோசோ கூறுகிறார்.

மோசமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை ஹெலிகாப்ட்டர் உதவியுடனோ அல்லது கப்பல் மூலமாக மட்டமே சென்றடைய முடியும் எனவும் அவர் கூறுகிறார்.

பல பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால், நீரால் ஏற்படும் தொற்றுநோய்கள் பரவக்கூடும் எனும் அச்சங்களும் அங்கு எழுந்துள்ளன.