பிரேசிலில் இருபது ஆண்டுகளுக்கு, பொது செலவினத்திற்கு உச்ச வரம்பு கொண்டுவரும் திட்டம்

பிரேசில் நாட்டின் பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க அதிபர் மிஷெல் டெமெரின் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியான, அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, பொது செலவினத்திற்கு ஒரு உச்ச வரம்பு கொண்டுவரும் திட்டத்திற்கு பிரேசில் நாடாளுமன்றத்தின் கீழ் அவை ஆதரவு கொடுத்துள்ளது.

படத்தின் காப்புரிமை VANDERLEI ALMEIDA/AFP/Getty Images)

பணவீக்கம் உயருமளவுக்கு மட்டுமே வரவு செலவுத் திட்ட அளவை அதிகரிப்பது என்னும் இந்த அரசியலமைப்பு திருத்தம், சட்டமாக மாறுவதற்கு இரண்டு அவைகளிலும் மேலதிக ஒப்புதல் தேவை.

தில்மா ரூசெஃப் குற்றம்சாட்டப்பட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட பிறகு, அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்ட டெமெர், பிரேசில் தனது நிதிநிலையை சமநிலைபடுத்தாவிட்டால், பொருளாதாரத்தில் நாடு நொடிந்து போகும் அபாயம் உள்ளது என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

எதிர்க் கட்சியான தொழிலாளர் கட்சி, அரசாங்கத்தின் இந்தச் சிக்கன நடவடிக்கை ஏழை மக்களின் சுகாதாரம் மற்றும் கல்வியை பாதிக்கும் என்றும், அவர்களுக்கு அது பெரிய சுமையாக இருக்கும் என்றும் கூறியது.