தென் ஆப்ரிக்காவின் நிதியமைச்சருக்கு சம்மன்: ராண்ட் மதிப்பில் சரிவு

தென் ஆப்ரிக்காவின் நிதியமைச்சர் மீதான மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ப்ராவின் கோர்தான் (கோப்புப் படம்)

இந்த நடவடிக்கை தென் ஆப்ரிக்காவின் கரன்ஸி "ராண்ட்"-ஐ மூன்று சதவீதத்திற்கும் மேலாக வீழ்ச்சியடைய செய்திருக்கிறது.

நிதியமைச்சர் ப்ராவின் கோர்தானிற்கும், அதிபர் ஸூமாவிற்கும் இடையே சுமுக உறவு இல்லை. எனவே இதை ஓர் அரசியல் சதி என கோர்தான் விவரித்துள்ளார்.

ஆனால், அம்மாதிரியான அரசியல் தலையீடுகள் எதுவும் இல்லை என அரசு வழக்கறிஞர் மறுத்துள்ளார்.

நாட்டின் வரி வசூலிப்பு துறை தலைவராக கோர்தான் இருந்த போது, பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் மோசடி செய்ததாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சமீப மாதங்களில் தென் ஆப்ரிக்கா, தனது கடன் பெறும் நம்பகத்தன்மையை இழக்கும் நிலைக்கு செல்லாமல் நூலிழையில் தவிர்த்தது. அதற்கு, நிதியமைச்சர் எடுத்த கடுமையான முயற்சிகளே காரணம் என கூறப்படுகிறது.

ஏற்கெனவே, அரசியல்வாதிகளை உளவு பார்க்க வரி வசூலிப்பு அலுவலகத்தில் ஒரு பிரிவை அமைத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கான விசாரணைக்கு, காவல் நிலையத்திற்கு வர கோர்தான் மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.