காபூலில் ஷியா வழிபாட்டுத் தலத்தின் மீது தாக்குதல்; 14 பேர் பலி

ஆஃப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் மசூதி ஒன்றில் அஷுரா பண்டிகையைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக் கொண்டிருந்த ஷியா முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர்.

கார்டே சகி மசூதி

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

தாக்குதல் நடத்தப்பட்ட கார்டே சகி மசூதி, ஆஃப்கானிஸ்தானின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்று

காபூலின் மிகப்பெரிய மசூதிகளில் ஒன்றான கார்டே சகி மசூதியில் நடந்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு எந்த இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

இந்தத் தாக்குதலில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செத்திக் செத்திக்கி தெரிவித்திருக்கிறார்.

தாக்குதல் நடந்தவுடன் அங்கு விரைந்து சென்ற காவல்துறையின் சிறப்புப் படையணியினர் ஒரே ஒரு துப்பாக்கிதாரியை கொன்றுள்ளனர். மூன்று பேர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

தாக்குதலையடுத்து காபூலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினரைப் போல உடையணிந்திருந்ததாக தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் தெரிவிக்கிறார்.

அஷுரா தினத்தன்று, தாக்குதல் நடத்தப்படக்கூடும் என அரசு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

கடந்த ஜூலையில் இஸ்லாமிய அரசு என்று சொல்லிக்கொள்ளும் இயக்கத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்ட தாக்குதலில் 80 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு முன்பாக, ஷியா பிரிவினர் மீது இவ்வளவு பெரிய தாக்குதல் நடத்தப்பட்டதில்லை.

ஆஃப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் 15 சதவீதம் பேர் ஷியா முஸ்லிம்களாவர். இவர்கள் பெரும்பாலும் ஹஸாரா இனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

இதற்கிடையில் ஹெல்மண்ட் மாகாணத்தின் தலைநகரான லஷ்கர் காவிலிருந்து தாலிபான் போராளிகளை விரட்டும் பணியில் நூற்றுக்கணக்கான ஆப்கன் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது தாலிபான்கள் லஷ்கர் காவின் வெளிப் பகுதிக்குத் துரத்தப்பட்டுவிட்டதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

ஹெல்மண்ட் மாகாணத்தில் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன.