ஆஸ்திரேலிய புதுமணத் தம்பதியரை இலக்கு வைத்து தாக்கிய கோபமடைந்த பறவைகள்

பறவை தங்கள் தலைக்கு அருகில் இருப்பதை அறியாத ஃபிலிப் மற்றும் சாரா மரியா படத்தின் காப்புரிமை Karen Parr
Image caption ஒவ்வோர் ஆண்டும் “திடீர் தாக்குதல் பருவத்தில்” குண்டுக் கரிச்சான் பறவைகளால் தாக்குதலுக்கு உள்ளாகும் நூற்றுக்கணக்கானோரில் ஒரு புதுமணத் தம்பதியினர் தான் ஃபிலிப் மற்றும் சாரா மரியா

புதிதாக திருமணம் செய்து கொண்ட மகிழ்ச்சியில் திளைக்கும் சிறந்த படமாக முதல் பார்வையிலேயே இது தெரிகிறது அல்லவா!

கணவரும், மனைவியும் தங்களுடைய நெற்றியோடு நெற்றி வைத்து ஒட்டிக்கொண்டு, ரம்மியமான சூழலை அனுபவித்து இன்புறுகிறார்கள்.

சிவ பூஜையில் கரடி நுழைவது போல அங்கு வந்ததுதான் குண்டுக் கரிச்சான் குருவி.

ஏதோ பறவைகள் பற்றிய கொடூர பழைய காட்சியை விவரிக்கிறேன் என்று எண்ணிவிட வேண்டாம்.

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸை சேர்ந்த ஃபிலிப் மற்றும் சாரா மரியாவின் திருமணத்திற்கான படப்பிடிப்பின்போது, புகைப்படம் எடுக்க பொருத்தமான இடங்களை தேடுகையில் கோபமான பறவைகளால் அவர்கள் சினமூட்டப்பட்டதைதான் சொல்ல வருகிறேன்.

படத்தின் காப்புரிமை Karen Parr
Image caption ஃபிலி்ப் இதனை தன்னுடைய முகநூலின் சுய விவரக் குறிப்பில் வைக்கப்படும் படமாக்கியுள்ளார்.

புகைப்படத்திற்கு ஏற்ற நல்ல பின்னணி உடைய இடங்களை அவர்கள் தேடிய போது குண்டுக் கரிச்சான் குருவிகள் இரண்டு திட்டமிட்டு அவர்களை வேண்டுமேன்றே தாக்குவது போல செயல்பட்டு குறைந்தது இருபது முறையாவது தாக்கின.

ஆனால், அந்த குருவிகள் தாக்குகின்ற சரியான தருணங்களில் ஒன்றைத்தான் காரென் பார் என்ற புகைப்படக்கலைஞரால் படம் பிடிக்க முடிந்தது.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் மக்களை தாக்குவதில் ஆஸ்திரேலிய குண்டுக் கரிச்சான் குருவிகள் மிகவும் பிரபலமானவை.

எனவே இந்த பருவம் "திடீர் தாக்குதல் பருவம்" என்று அறியப்படுகிறது.

இப்பருவத்தில் இந்த குண்டுக் கரிச்சான் குருவிகளின் குஞ்சுகள் அவற்றின் கூடுகளில் இருக்குமாம்.

கடந்த ஆண்டு நியூ சௌத் வேல்ஸில் மட்டும் இது போன்று 801 தாக்குதல்களை குண்டுக் கரிச்சான் குருவி நடத்தியதாக டெய்லி மெயில் ஆஸ்திரேலியா தகவல் வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்

இந்தச் செய்தி குறித்து மேலும்