சிரியா கைதி தற்கொலை; ஜெர்மன் சிறை கையாண்ட விதத்தில் 'தவறுகள்'

கடந்த வாரம் சிறைச்சாலையிலேயே தற்கொலை செய்து கொண்ட, குண்டு தாக்குதலுக்கு திட்டமிட்டவராக கருதப்பட்ட சந்தேக நபர் தொடர்பான சம்பவத்தில், தவறுகள் நடைபெற்றிருப்பதாக ஜெர்மனியின் சாக்சனி மாநிலத்தின் நீதி அமைச்சர் ஒப்பு கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP/Getty Images
Image caption சனிக்கிழமை சந்தேக நபரின் குடியிருப்பில் தேடுதல் நடத்திய காவல்துறையினர் புகைப்படங்களை வெளியிட்டனர்

இஸ்லாமியவாத சந்தேக நபர்களை கையாள்வது தொடர்பாக சிறைச்சாலையின் அமைப்பிலுள்ள ஒவ்வொருவரும் இதிலிருந்து பாடங்களை கற்றுகொள்ள வேண்டும் என்று செபாஸ்டியான் கெம்கோக் என்பவர், வெல்ட் அம் ஸேண்டாக் என்ற ஜெர்மனி நாளிதழிடம் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஊழியர்கள் இதற்கு போதுமான அளவுக்கு தயார்படுத்தப்படவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption பாக்ர் மீதான கண்காணிப்பு ஒவ்வொரு 30 நிமிடங்களாக இருந்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

ஆனால், கடந்தவாரம் புதன்கிழமை தற்கொலை செய்து கொண்ட ஜாபர் அல்பாக்ரின் மரணம் தொடர்பாக, பதவியிலிருந்து ராஜினாமா செய்ய கெம்கோக் மறுத்துவிட்டார்.

ஜாபர் அல்பாக்ர் தங்கியிருந்த லெய்ப்ஸிக் நகரில் இரண்டு நாட்களாக பிடிபடாமல் இருந்த நிலையில், அவரது சக சிரிய அகதிகள் அவரை பிடித்து கையளித்தனர்.

படத்தின் காப்புரிமை EPA
Image caption லெய்ப்ஸிக் சிறையில் நாள் முழுவதும் ஜாபர் அல்-பக்ர் கண்காணிப்பில் இருந்து வந்தார்

கெம்னிட்ஸில் அவர் தங்கியிருந்த குடியிருப்பிலிருந்து வெடிபொருட்களை காவல்துறையினர் கண்டெடுத்திருக்கின்றனர்.

ரயில்களிலும், பெர்லின் விமான நிலையத்திலும் தாக்குதல் நடத்துவதற்கு தனிநபராக திட்டமிட்ட இஸ்லாமிய அரசு தீவிரவாதியாக அவர் இருந்திருக்கலாம் என்று அரசு தரப்பு வழக்கறிஞர்கள் சந்தேகப்படுகின்றனர்.