அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு உண்மையா?

அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு நடைபெறுவதாக திரும்ப திரும்ப பிரச்சாரங்களில் டொனால்ட் டிரம்ப் கூறி வரும் நிலையில், அவ்வாறு பெரிய அளவிலான மோசடி நடைபெறுவது சாத்தியம்தானா? அமெரிக்க தேர்தல் இயந்திரம் அவ்வளவுக்கு பலவீனமானதா? என்பது பற்றி இந்த கட்டுரையில் வாஷிங்டன் செய்தியாளர் வனிசா பார்ஃபோர்டு ஆராய்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images

அமெரிக்காவில் "பெரிய அளவிலான போலி வாக்குகள்" போடப்படுவதாக குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டோனால்ட் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு நடைபெற சாத்தியம் உள்ளதா?

"நேர்மையில்லாத மற்றும் திரித்து கூறுகின்ற ஊடகங்கள்" மீது குற்றம் சுமத்தி, "தேர்தலில் தில்லுமுல்லு" நடைபெறுவதாக பல மாதங்களாக டிரம்ப் பிரசாரங்களில் கூறி வருகின்றார்.

இப்போது அமெரிக்காவில் நடைபெறுவதாக அவர் கூறுகின்ற குற்றச்சாட்டுகளை டிரம்ப் டிவிட்டர் வழியாக சாடுவதற்கு தொடங்கியிருப்பதை அடுத்து இந்த குற்றசாட்டு உயர்நிலையை அடைந்திருக்கிறது.

அவரது குற்றச்சாட்டுக்கள் என்ன?

அவை எவ்வளவு அதிகமாக காணப்படுகின்றன? பார்ப்போமா!

படத்தின் காப்புரிமை AP
Image caption டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் தில்லுமுல்லு பற்றி பேசுகின்றனர்

01.வாக்காளர் மோசடி

தேர்தல் நாளின் போதும், அதற்கு முன்னரும் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடைபெறுவதாக டொனால்ட் டிரம்ப் கூறியிருக்கிறார். இத்தகைய கருத்தை இவர் மட்டுமல்ல வேறு பலரும் வைத்திருக்கின்றனர்.

குடியரசுக் கட்சியினரில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர் மட்டுமே வாக்குகள் நியாயமாக எண்ணப்படும் என்ற நம்பிக்கையோடு உள்ளதாக நோர்க் பொது விவகார ஆய்வு மற்றும் அசோசியேடட் பிரஸ் தெரிவிக்கிறது.

இருப்பினும் அமெரிக்காவில் வாக்காளர் மோசடி என்பது பரவலான அளவில் காணப்படுவதில்லை என்றுதான் ஆய்வுகள் பொதுவாக தெரிவிக்கின்றன.

2000 - முதல் 2014 ஆம் ஆண்டு இடையில் நடைபெற்ற எல்லா அமெரிக்க தேர்தல்களிலும் பதிவாகியிருந்த ஒரு பில்லியன் வாக்குகளில் 31 ஆளாமாறாட்ட சம்பவங்கள்தான் நடைபெற்றிருப்பதாக 2014 ஆம் ஆண்டு லோயோலோ சட்டக் கல்லூரியின் போராசிரியரான ஜஸ்டின் லிவிட் தெரிவித்திருக்கிறார்.

2012 ஆம் ஆண்டு நியுஸ்21 நடத்திய தேர்தல் மோசடி வழக்குகளாக கூறப்பட்ட 2,068 சம்பவங்களில், 2000 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஆள்மாறாட்ட வழக்குகள் 10 தான் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

அமெரிக்க தேர்தலில் தில்லுமுல்லு என்கிற டிரம்பின் கருத்து நகைப்புக்குரியது, டிரம்ப் கூறுகின்ற அளவுக்கு இது நடைபெறாது என்கிறார் தேர்தல் சட்ட நிபுணரான பேராசிரியர் ரிச்சர்ட் ஹாசன்.

படத்தின் காப்புரிமை Alamy

டிரம்ப் கூறுவதை போல யாரும் அறியாமல் ஆயிரக்கணக்கானோர் 5, 10, அல்லது 15 முறை வாக்களிக்க முடியாது என்று அவர் கூறுகிறார்.

ஒவ்வொரு மாநிலமும் அதற்கேற்ற தேர்தல் விதிமுறைகளோடு, உள்ளூர் அதிகாரிகள் அவற்றை மேலாண்மை செய்கிற அளவுக்கு அமெரிக்க தேர்தல் நிர்வாகத்தில் பெருமளவில் அதிகார பரவலாக்கம் செய்யப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் வாக்கு சாவடிகளில் பணிபுரியும் ஊழியர்கள் மீதும் கண்காணிப்பாளர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்களிக்கும் இயந்திரம் ஆகியவையும் பல்வேறுபட்டவையாக இருக்கின்றன. எனவே பரவலான அளவில் தில்லுமுல்லுகளை ஒருங்கிணைப்பது மிகவும் கடினம்.

"நான் ஒஹையோவில் நடைபெறும் தேர்தலுக்கு பொறுப்பு. அங்கு எவ்வித தில்லுமுல்லுகளும் நடைபெற போவதில்லை என்று டொனால்டு டிரம்புக்கு நான் உறுதி அளிக்க முடியும்" என்று டிரம்பின் ஆதரவாளரான ஒஹையோ மாநில செயலர் ஜன் ஹூஸ்ட்டு சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த போட்டியில் தெரிவித்திருக்கிறார்.

"இது இரு கட்சிகள் சார்ந்தது. இது வெளிப்படையானது. பரந்த அளவிலான மோசடிகள் நடைபெறும் என்ற கவலையை நியாயப்படுத்துவதிற்கில்லை என்று அவர் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

02."இறந்தோர் பொதுவாக ஜனநாயக கட்சியினருக்கு வாக்களிக்கின்றனர்"

ஜனநாயக கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் அமெரிக்க நகரங்கள் வாக்காளர் மோசடிகளுக்கு பிரபலமானது என்று சிஎன்என்-யிடம் கூறியிருக்கும் டொனால்ட் டிரம்பின் ஆலோசகர் ரூடி ஜூலியானி, பிலடெல்ஃபியா மற்றும் சிக்காகோவில் தேர்தல் நியாயமாக நடைபெறும் என்று எண்ணினால் அவர் ஒரு மூடன் என்று தெரிவித்திருக்கிறார்.

1982 ஆம் ஆண்டு சிக்காகோவில் 720 இறந்தோர் வாக்களித்ததாகவும், இறந்தோர் குடியரசு கட்சியினருக்கு அல்லாமல் பொதுவாக ஜனநாயக கட்சினருக்கே வாக்களிப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் இறந்தோரின் பெயரில் வாக்குகள் பதிவாகியிருக்கும் குற்றச்சாட்டு வந்தாலும், அதன் எண்ணிக்கை மிக மிகக் குறைவு என்கிறார் நோத்ர டாம் பல்கலைக்கழக பேராசிரியர் லாயிட் ஹிடோஷி மேயர்.

2012 ஆம் ஆண்டு பிலடெல்ஃபியா நகரத்தின் 59 வாக்களிக்கும் பிரிவுகளில் ஒரு வாக்கு கூட குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான மிட் ரோம்னிக்கு கிடைக்கவில்லை என்ற தகவல் வெளியானவுடன் அந்நகரம் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டது..

இந்த குற்றச்சாட்டுகளை விசாரணைக்கு உட்படுத்திய குடியரசு கட்சி எவ்வித மோசடிகளையும் கண்டுபிடிக்கவில்லை. உட்டாவில் பல இடங்களில் அனைவரும் மிட் ரோம்னிக்கு வாக்களித்ததையும் அக்கட்சி தெளிவாக்கியது.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பிலடெல்ஃபியாவில் 59 வாக்களிக்கும் பிரிவுகளில் ஒரு வாக்கு கூட குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான மிட் ரோம்னிக்கு கிடைக்கவில்லை.

03.பல முறை வாக்களிக்க வாகனங்களில் மக்கள் கொண்டு வரப்படுதல்

1989 ஆம் ஆண்டு நியூயார்க் மேயராக போட்டியிட்டபோது, காம்டென்னில் இருந்து வாகனங்களில் வாக்கு சாவடிக்கு மக்கள் வருவதற்கு உதவியதால், சிலர் 8 அல்லது 10 முறை வாக்களித்ததாகவும் ஜூலியானி தெரிவித்திருக்கிறார்.

வாக்கு உரிமைகள் குழுக்களும், அரசியல் பரப்புரையாளர்களும் வாக்காளர்கள் வாக்கு சாவடிகளுக்கு செல்ல போக்குவரத்து உதவி வழங்குவது பொதுவானது.

ஒரு குறிப்பிட்ட வேட்பாளருக்கு அல்லது அரசியல் கட்சிக்கு ஓரிடத்திலுள்ள பலர் ஆதரவு தெரிவிக்கும்போது இவ்வாறு வாகன வசதி வழங்குவது பல பகுதிகளில் நடைபெறுகிறது.

இவ்வாறு பல இடங்களில் பலர் பல முறை வாக்களித்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டாலும், அது தொடர்பாக அதிகமானோர் குற்றம் சாட்டப்பட்டதாகவோ அல்லது தண்டனை பெற்றதாகவோ தெரியவில்லை என்று ஹிடோஷி மேயர் தெரித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption 2012 ஆம் ஆண்டு தேர்லின் போது வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதி வழங்கிய பேருந்து

04."திருடப்பட்ட" வாக்குகள்

1960 ஆம் ஆண்டு தேர்தலில் ரிச்சர்ட் நிக்ஸனுக்கும் ஜான் எப் கென்னடிக்கும் இடையிலான போட்டியில் "இல்லினோய் மற்றும் டெக்ஸாஸ் வாக்குகள் திருடப்பட்டன" என்பதை சிறந்த வரலாற்றாசிரியர்கள் மறுக்கமாட்டார்கள் என்று முன்னாள் மக்களவை சபாநாயகர், குடியரசு கட்சியினருமான நியுட் கின்ங்கிரிச் கூறியிருக்கிறார்.

இல்லினோய் மற்றும் டெக்ஸாஸ் மாநிலங்களில் ஜான் எப் கென்னடியும் பொது அதிகரிகளும் கூட்டாக வாக்குகளை சரிசெய்து, மிகவும் நெருங்கிய போட்டியாக அமைந்த அந்த தேர்தலில் தனக்கு வெற்றி பெறுவதற்கு தேவையான 51 வாக்கு தொகுதிகள் பெறுமாறு ஜான் எப் கென்னடி செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டதை இந்த கூற்று குறிப்பிடுகிறது.

ஆனால், இது வரலாற்று ஆசிரியர்களால் முடிவு செய்யப்படாத விஷயம் எனறு ரைஸ் பல்கலைக்கழகத்தின் பேரசிரியர் டக்லஸ் பிரிங்லே சிஎன்என்-தொலைக்காட்சிக்கு தெரிவித்திருக்கிறார்.

1960 ஆம் ஆண்டு இல்லினாய் மாநிலத்தில் மறு எண்ணிக்கை நடைபெற்றபோது மோசடி எதையும் கண்டறிய முடியவில்லை. டெக்ஸாஸ் மாநிலத்திலும் இது பற்றிய தெளிவு ஏற்படவில்லை என்று அவர் கூறியிருக்கிறார்.

வாக்காளர் அடக்குமுறை வரலாறு முழுவதும் குறிப்பாக தெற்கு பகுதியில் 1950-கள் - 1960-களுக்கு இடையில் இருந்ததை ஒப்பு கொள்ளும் பிரிங்லே தற்போது தேர்தல் தில்லுமுல்லு என்று கூறுவது போலியானது, வரலாற்றுக்கு எதிரானது என்று கூறுகிறார்.

சட்ட அமலாக்க அதிகாரிகள், அரசியல் கட்சிகள், ஊடகங்கள் இது போன்ற செயல்பாடுகளை 2016 தேர்தலில் கண்காணிக்கும் திறன் மிக மிக பெரியது என்று கூறியிருக்கும் பேராசிரியர் ஹிடோஷி மேயர், அது போன்ற திருட்டு முயற்சி நடைபெற்றாலும் அது முடியாமல் தான் போகும் என்று தெரிவிக்கிறார்,

படத்தின் காப்புரிமை Reuters
Image caption வாக்காளர் அடையாள அட்டையை சோதக்கும் வாக்குச்சாவடி ஊழியர்

இருப்பினும், தேர்தலில் தில்லுமுல்லு நடைபெற்றால்...

ஒவ்வொரு தேர்தலிலும் வாக்காளர் அட்டையோடு, அந்த நபரே நேரே வந்து வாக்களிக்க வேண்டும் என்பது போலி வாக்குபதிவு நடைபெறுவதை மிகவும் அரிதாக்குகிறது என்பதால் டிரம்ப் இவ்வாறு தெரிவித்திருப்பது முரண்பாடு என்று ஹிடோஷி மேயர் கூறுகிறார்.

வாக்கு மோசடி என்பது அதிகாரபூர்வ தேர்தல் மோசடியாக, போலி வாக்குகளைத் திணிப்பது, அல்லது போடப்பட்ட வாக்குகளை எண்ணாமல் விட்டுவிடுவது மற்றும் வராதோரின் வாக்குகளை பதிவிடுவது என்ற வடிவங்களில் தான் உள்ளன.

ஒவ்வொரு மாநிலமும் அதன் எல்லைகளுக்குள் அதற்கேற்ற, எளிய வழிமுறைகளை பின்பற்ற தொடங்கிவிட்டதால், இந்த மோசடிகள் கூட மிகவும் அரிதாகி குறைந்து வருவதாக அவர் தெரிவிக்கிறார்.

தொடர்புடைய தலைப்புகள்