குழந்தைப் பாலியல் துஷ்பிரயோக குற்றங்கள் : சமரசம் இல்லை என்கிறார் இந்தோனீசிய அதிபர்

  • 19 அக்டோபர் 2016

இந்தோனீசிய அதிபர் ஜொக்கோ விடோடோ, தனது அரசின் புதிய கொள்கையான, குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யும் திட்டம் மூலம் பாலியல் குற்றங்களை ''முழுமையாக ஒழிக்க'' முடியும் என்று கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தோனீசியா மனித உரிமைகளை மதிக்கிறது. ஆனால் அதே நேரம், பாலியல் குற்றவாளிகளை தண்டிப்பதில் எந்த வித சமரசங்களும் செய்ய முடியாது என விடோடோ பிபிசியிடம் தெரிவித்தார்.

ஒரு 14 வயது பெண் குழந்தை கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, இந்த மாதத்தின் தொடக்கத்தில், இந்தோனீசிய அரசு, குழந்தைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்றியது.

இந்தோனேசிய மருத்துவர்கள் சங்கம் இந்தச் செயல்முறை மருத்துவ நெறிமுறைகளை மீறுவதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

மற்ற சில நாடுகளில் கட்டாய ஆண்மை நீக்கம் நடைமுறையில் உள்ளது. ஆனால் பல ஐரோப்பிய நாடுகள், இந்த நடைமுறை சுயவிருப்பத்தின் பேரில் செய்யலாம் என்ற தேர்வை அளிக்கின்றன.