மெக்ஸிகோ: 121 குடியேறிகளை அமெரிக்காவுக்கு ஏற்றிச்சென்ற லாரி பிடிபட்டது

அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்ற மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த 121 குடியேறிகள் பயணம் செய்த லாரியை மெக்ஸிகோ நாட்டு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

மெக்ஸிகோவின் தென்பகுதி மாகாணமான டபாஸ்கோவில் ஒரு காவல்துறை சோதனைச் சாவடியில் வாகனம் நின்றபோது, அதிலிருந்து உதவிகேட்கும் குரல்களும் குழந்தைகள் அழும் குரல்களும் கேட்டன. இதையடுத்து அந்த லாரி தடுத்து நிறுத்தப்பட்டது.

55 குழந்தைகள், சிறார்கள் உட்பட பெரும்பாலானவர்கள் தண்ணீர் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஹோண்டுராஸ், குவாதமாலா, எல் சல்வடோர், ஈக்வடார் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

மெக்ஸிகோ வழியாகச் சென்று அமெரிக்க எல்லையை அடைவதற்காக இந்தக் குடியேறிகள் 5,000 டாலர்கள் வரை செலுத்தியுள்ளனர்.

அந்த லாரியின் ஓட்டுனர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் மெக்ஸிகோவின் வழியாக குடியேறிகளைக் கடத்திச் செல்ல ஆட்கடத்தல்காரர்கள் லாரிகளைப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவை அடையும் நோக்கத்தோடு, அபாயகரமான முறையில் பயணம் செய்து ஆயிரக்கணக்கானவர்கள் மெக்ஸிகோவிற்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர்.

2016ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் மட்டும் மெக்ஸிகோவும் அமெரிக்காவும் ஹோண்டுராஸைச் சேர்ந்த 55,000 பேரை நாடுகடத்தியுள்ளன.

தொடர்புடைய தலைப்புகள்