உலகிலேயே சோகமான கரடியை விடுவிக்க சீன மக்கள் கோரிக்கை

சீனாவில் கூண்டிற்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள உலகின் சோகமான கரடி என்று விவரிக்கப்படும் துருவக் கரடியை விடுவிக்க கோரி மில்லியன் மக்களுக்கும் அதிகமாக மனு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளனர்.

படத்தின் காப்புரிமை Animal rights
Image caption பிசா என்று அழைக்கப்படும் உலகின் சோகமான கரடி

சீனாவின் தெற்கு பகுதியில் இருக்கும் நகரான குவாங் ஜோவில் உள்ள அங்காடி வளாகம் ஒன்றில், சிறிய கண்ணாடி கூண்டில் அடைக்கப்பட்டுள்ள பிசா என்று அழைக்கப்படும் அந்த கரடியின் வீடியோவை விலங்குகள் நல உரிமைக் குழுக்கள் வெளியிட்டன.

அந்த நீண்ட வீடியோவில் கரடி ஒரு பக்கத்திலிருந்து மறுப்பக்கத்திற்கு தனது தலையை திரும்ப திரும்ப அசைத்துக் கொண்டும் தலையை வேகமாக சுற்றியவாறும் காணப்படுகிறது.

விலங்குகள் நடவடிக்கை நிபுணர்கள், இது கவலையின் அறிகுறி என தெரிவித்துள்ளனர்.

ஆனால் அந்த கரடியை விடுவிக்க அந்த அங்காடி வளாகம் மறுத்துள்ளது. சீன சட்டங்களை தாம் மீறவில்லை என்று அது கூறுகிறது.