சீனா: குழந்தை பெற தலைமறைவாகும் பெற்றோர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனா: குழந்தை பெறுவதற்காக தலைமறைவாகும் பெற்றோர்

  • 28 அக்டோபர் 2016

குடும்பத்துக்கு ஒரு குழந்தை என்கிற தனது முந்தைய கொள்கையை சீன அரசு ஒராண்டுக்கு முன் முடிவுக்கு கொண்டு வந்தது.

குடும்ப வாழ்வு தொடர்பான சீன அரசின் அணுகுமுறையின் மாற்றத்தை அது குறிப்புணர்த்துவதாக அந்த அறிவிப்பு பார்க்கப்பட்டது.

ஆனால் குழந்தைகள் தொடர்பான சீன அரசின் கடும்போக்கு அணுகுமுறை தொடர்வது, பிபிசியின் புலனாய்வில் தெரியவந்துள்ளது.

தற்போது சீனாவில் ஒரு தம்பதி இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொள்ள அரச அனுமதியில்லை.

சீனாவின் குடும்பத்துக்கொரு குழந்தை என்னும் கட்டுப்பாடு அதன் தலைவர் மாவோ காலத்தில் ஆரம்பித்தது.

ஆனால் அவர் இறந்த பின்பே அது அமுலுக்கு வந்தது.

சுமார் நாற்பதாண்டுகள் நீடித்த அந்த கொள்கையால் பல மில்லியன் கட்டாய கருக்கலைப்புகளும் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டன.

குடும்பத்துக்கு இரண்டு குழந்தைகள் என்கிற சீன அரசின் புதிய திட்டம் தொடர்பாகவும் அச்சங்கள் நீடிக்கின்றன.

மூன்றாவது குழந்தையை பெற்றிருக்கும் பெண்ணின் கணவரை பிபிசி சந்தித்தது. அவரும் அவரது மனைவியும் குழந்தையும் தற்போது தலைமறைவாக இருக்கிறார்கள்.

மூன்று மாதத்துக்கொருமுறை எல்லா பெண்களும் கட்டாயம் கர்ப்ப சோதனைக்கு உள்ளாக வேண்டும் என்று தெரிவித்த அவர், தாங்கள் தலைமறைவாக இல்லாமலிருந்தால் தன் மனைவிக்கு கட்டாயம் கருக்கலைப்பு செய்யப்பட்டிருக்கும் என்று கூறினார்.

சீன அரசின் முந்தைய ஒரு குழந்தை கட்டுப்பாட்டை மீறியவர்கள் அதற்கான அபராதத்தொகையை செலுத்தாமைக்காக காவல்துறையால் துரத்தப்படுவதை காட்டும் காணொளிகள் சீன அரச தொலைக்காட்சியில் சமீபத்தில் ஒளிபரப்பாயின.

சீனாவின் பொருளாதார எதிர்காலத்தையே அச்சுறுத்தும் அளவுக்கு அதன் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது. சிறு குடும்பங்கள் இங்கே சமூக ஒழுங்காகவே மாறிவிட்டன.

ஆனாலும் மூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்ள விரும்பும் அபூர்வமான அம்மாக்களுக்கு எதிரான அச்சுறுத்தலும் பயமுறுத்தலும் நீடிப்பதை பிபிசியின் புலனாய்வு கண்டறிந்துள்ளது.