மின்னஞ்சல் விவகாரம்: ஹிலரி கிளிண்டன் மீது எஃப்.பி.ஐ வழக்குப் பதிவு செய்யுமா?

  • 29 அக்டோபர் 2016

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன், அந்நாட்டின் வெளியுறவு செயலராகப் பணியாற்றிய போது சில ரகசிய தகவல்களை அவர் கையாண்ட விதம் குறித்து விசாரித்து வரும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ, தங்களின் விசாரணைக்கு மிகவும் ஏற்புடையவை என்று தெரிவித்துள்ள சில புதிய மின்னஞ்சல்கள் குறித்த முழுத் தகவல்களையும் வெளியிடுமாறு, ஹிலரி கிளிண்டன், அந்த அமைப்பை கேட்டுக் கொண்டுள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption ஹிலரி கிளிண்டன் (கோப்புப் படம்)

இது தொடர்பாக கடந்த ஜுலை மாதத்தில் எஃப்.பி.ஐ. எடுத்திருந்த முடிவு, இந்த புதிய மின்னஞ்சல்களால் மாறாது என்று தான் திடமாக நம்புவதாக ஹிலரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இது தொடர்பாக கடந்த கடந்த ஜுலை மாதத்தில் கருத்து வெளியிட்ட எஃப்பிஐ அமைப்பு, இதற்கு ஒரு குற்றவியல் வழக்கு தொடரப் போவதில்லை என்று கூறியிருந்தது.

புதிய மின்னஞ்சல்கள் விவகாரம் குறித்து கருத்து வெளியிட்ட ஹிலரி கிளிண்டன், ''இது தொடர்பாக முழுமையான மற்றும் உண்மை தகவல்களை உடனடியாக தெரிந்து கொள்வதற்கு அமெரிக்க மக்களுக்கு உரிமையுள்ளது'' என்று தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலரிக்கு எதிராக போட்டியிடவுள்ள குடியரசு கட்சியின் வேட்பாளாரான டொனால்ட் டிரம்ப், இந்த விவகாரத்தில் ஒரு தீவிர குற்றவியல் அம்சம் இருப்பதாக கருதாவிட்டால், எஃப்பிஐ அமைப்பு இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கியிருக்காது என்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் நிக்சனின் ஆட்சிக்காலத்தில் நடந்த வாட்டர் கேட் ஊழலுக்கு பிறகு அமெரிக்க அரசியல் வரலாற்றில் நடந்த மிகப் பெரிய அரசியல் ஊழல் இது தான் என்று டிரம்ப் வர்ணித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்