துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் நீக்கம்

துருக்கியில் கடந்த ஜூலை மாதம் தோல்வியில் முடிந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு காரணமாக இருந்ததாகப் பழிபோடப்பட்ட ஒரு மதகுருவுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்பட்ட சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை துருக்கி ஆட்சியாளர்கள் பணி நீக்கம் செய்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption துருக்கி அதிபர் எர்துவான்

நேற்று (சனிக்கிழமை) மாலைக்கு பின் அவசரகால ஆணை ஒன்றில் துருக்கி அரசு இந்த பணி நீக்கப்பட்டியலை வெளியிட்டது. அதில், ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரும் அடங்குவார்கள்.

இதுவரை துருக்கியில் 15 செய்தி ஊடகங்களை மூடக்கோரி உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

மதகுரு ஃபெத்துல்லா குலனின் ஆதரவாளர்களுக்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத வகையில் துருக்கி ஏற்கனவே எடுத்த நடவடிக்கையில் இடைநீக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் பட்டியலில் தற்போது நீக்கப்பட்டவர்களும் இருக்கிறார்களா என்பது தெளிவாக தெரியவில்லை.

துருக்கிக்கு இணையாக ஒரு அரசாங்கத்தை அமைக்க முயற்சித்தார் என்று அமெரிக்காவில் வசித்து வரும் ஃபெத்துல்லா குலன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அவரை விசாரணைக்காக நாடு கடத்தி ஒப்புவிக்கக் கோரி துருக்கி அழைப்பு விடுத்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்