நெருங்கிய தோழியால் நெருக்கடியில் தென்கொரிய அதிபர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நெருங்கிய தோழியால் நெருக்கடியில் தென்கொரிய அதிபர்

தென் கொரிய அரசியலில் மிகப்பெரிய புகாரின் மையமாக திகழும் ஒரு பெண்மணி தலைநகர் சியோலில் அரச வழக்கறிஞர்களால் விசாரிக்கப்பட்டிருக்கிறார்.

தென் கொரிய அதிபர் பார்க் குன்ஹி, அரசாங்க ரகசிய ஆவணங்களை பார்ப்பதற்கு, தன் நெருங்கிய நம்பிக்கைக்குரிய தோழி ஷீர் சன் ஷில்லை அனுமதித்தார் என்று புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அதிபருக்கான பொதுமக்கள் ஆதரவில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

தென் கொரிய அதிபர் பார்க்கின் நாற்பதாண்டுகால நம்பிக்கைக்குரிய தோழி ஷீர் சன் ஷில்லுக்கு விசித்திர ரகசிய குழுவோடு தொடர்பிருந்தது ஏற்கனவே சர்ச்சைகளை தோற்றுவித்திருந்தது.

அந்த சர்ச்சையோடு அதிபரை ஆட்டுவிக்கிறார், அரசாங்க ஆவணங்களை பார்வையிடுகிறார் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளும் தற்போது பரபரப்பாக எழுந்துள்ளன.

அரச வழக்கறிஞர்களின் விசாரணைக்குப்பின் பெரும் கூட்டத்தின் தள்ளுமுள்ளுக்கு மத்தியில் சீர் ஷென் சில் தன்னுடைய மன்னிக்கமுடியாத குற்றத்திற்காக வருத்தம் தெரிவித்தார். ஆனால் தன் குற்றம் என்ன என்பதை அவர் கூறவில்லை.

இந்த ஒட்டுமொத்த விவகாரமும் தென்கொரிய ஊடகங்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அரச எதிர்ப்பு ஆர்பாட்டக்காரர்கள் மத்தியிலும் மிகப்பெரும்பரபரப்பை தோற்றுவித்துள்ளது.

பொதுமக்கள் மத்தியிலும் அதே மனநிலை நிலவுவதாக கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

இது குறித்த செய்தி சேகரிப்பில் பலவிதமான வதந்திகள், ஜாடைமாடையான குறிப்புணர்த்தல்கள் உருவாகி உலா வருகின்றன. இவற்றில் சில உண்மைகளும் சேர்வதால் வதந்திகள் வலுவாகி வருகின்றன.

அதிபர் பதவிவிலகவேண்டுமென கோரிக்கை விடுக்கும் ஆர்பாட்டக்காரர்கள் தமது அடுத்தகட்ட ஆர்ப்பாட்டங்கள் தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளனர்.

தன் பங்குக்கு அதிபர் பார்க்கும் மன்னிப்பு கோரினார். ஆனால் எதற்கு என்று தெளிவாக சொல்லாமலே.

இந்த புகார் கவலையை தோற்றுவித்திருப்பதற்கு தான் வருந்துவதாக அதிபர் தெரிவித்தார்.

புதிர்நிறைந்த தனது நம்பிக்கைக்குரிய தோழியின் கைப்பாவையாக அதிபர் இருப்பதாக எதிர்கட்சிகள் கூறுகின்றன.

அதிபரும் அவர் தோழியும் கடும் வெறுப்புக்கும் விமர்சனத்துக்கும் உரியவர்களாக மாறியுள்ளனர்.

இதில் மிப்பெரிய தவறு நடந்திருக்கலாம் என ஊடகங்கள் சந்தேகிக்கின்றன.

அதிபர் பார்க் மீது அழுத்தம் அதிகரிக்கிறது.

இதில் குற்றம் நடந்ததா இல்லையா என்பதை தாண்டி இதற்கான அரசியல் விலையென்னவோ மிக அதிகமாக இருக்கக்கூடுமென அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.