மொசூல் நகரில் நுழைந்தது இராக் அரசு படை

மொசூல் நகரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை எதிர்த்து, கடும் போர் நடத்தி வருகின்ற இராக் சிறப்பு படைப்பிரிவுகள் மொசூல்புறநகர்ப் பகுதிகளில் நுழைந்துள்ளன.

படத்தின் காப்புரிமை @BBCiPannell
Image caption மொசூல் நகரில் நுழைகிறபோது இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பை இராக் அரசு படையினர் சந்தித்தனர்

ஏவுகணை குண்டு தாக்குதல்கள், மோர்ட்டர் மற்றும் சிறிய ஆயுதக் குண்டு தாக்குதல்களோடு, தற்கொலை கார் குண்டு தாக்குதல்களையும் இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் நடத்தி வருகிறார்கள்.

இராக் அரசப் படைப்பிரிவுகள் முன்னேறி செல்வதற்கு ஆதரவு அளிக்கும் வகையில், அமெரிக்க தலைமையிலான கூட்டணி படைப்பிரிவுகள் நான்கு அல்லது ஐந்து முறை கட்டிடங்களில் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன.

படத்தின் காப்புரிமை EPA
Image caption மொசூலில் இருந்து மேற்கு பகுதி வழியாக தப்பி செல்லுகின்ற வழிகளை முற்றுகையிட ஷியா முஸ்லிம்கள் தலைமையிலான ஆயுதப்படையினர் முயற்சிக்கின்றனர்

முன்னதாக, இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளை சரணடையச் சொல்லி போர் சீருடையில் தோன்றிய இராக் பிரதமர் ஹைதர் அல்-அபாதி வலியுறுத்தினார். இல்லாவிட்டால் கொல்லப்படுவர் என்று எச்சரித்தார்.

இராக்கின் வட பகுதியிலுள்ள விமானத் தளத்தில் அபாதி பேசுகிறபோது, எல்லா கோணங்களில் இருந்தும் அரசப் படைப்பிரிவுகள் நெருங்கி வருதாகவும், ’’பாம்புகளின் தலைகள் வெட்டப்படும்’’ என்றும் தெரிவித்திருக்கிறார்.

படத்தின் காப்புரிமை @FerasKilaniBBC
Image caption மோசூல் நகரில் நிலையாக காலூன்ற படைப்பிரிவுகள் முயற்சி

இந்நிலையில், திங்கட்கிழமை இராக் அரசப் படைப்பரிவுகளால் கைப்பற்றப்பட்ட பாஸ்வாயா கிராமத்தில், வீடுகளில் இருந்து வெளிவந்துள்ள மக்கள் தங்களின் தாடியை மழித்துள்ளனர்.

இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் பிடியில் இருந்த இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளதால் ஆறுதல் அடைந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

படத்தின் காப்புரிமை Reuters
Image caption பாஸ்வாயாயை சேர்ந்த இந்த மனிதர்கள் உள்பட குடிமக்கள் பலரும் வெள்ளை கொடி ஏந்தியவாறு படைப்பிரிவுகளை நோக்கி வருகின்றனர்

உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையின் விளிம்பில் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வந்திருக்கும் இந்த பகுதியில் இருக்கும் வீடுகள் ஒவ்வொன்றிற்கும் சென்று கண்ணி பொறி மற்றும் மக்களோடு மக்களாக இஸ்லாமிய அரசு படையினர் மறைந்திருக்கிறார்களா என்று சோதனை நடத்தி வருவதாக இராக் தளபதி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்,

மொசூலில் இருந்து மக்கள் மேலதிகமாக வெளியேறவில்லை. இன்னும் ஒரு மில்லியன் (பத்து லட்சம்) பேர் அங்கிருப்பதாக நம்பப்படுகிறது,

தொடர்புடைய தலைப்புகள்